“அரசுப் பள்ளியில் படிக்கும் எங்களைப் போன்ற திறமைவாய்ந்த மாணவர்களை பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைத்து வாழ்வில் மிகப் பெரிய அங்கீகாரத்தை வழங்கி இருக்கிறது நமது பள்ளிக் கல்வித் துறை. வாழ்வின் மீது பெரும் பாய்ச்சலுக்கான உத்வேகத்தையும் பெரும் கனவையும் நெஞ்சில் விதைத்துள்ளது இந்தக் கல்விச் சுற்றுலா” என்று நெகிழ்ச்சியோடு பேசத் தொடங்கினார்கள் 10 நாட்கள் கல்விச் சுற்றுலா சென்றுவிட்டுக் கடந்த வாரம் ஊர் திரும்பியுள்ள தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள்.
குழந்தைகளுக்கு மன அழுத்தம் தராமலேயே தலைசிறந்த கல்வியை அளிக்க முடியும் என்று உலகுக்கு நிரூபித்தவை பின்லாந்தும் ஸ்வீடனும். அத்தகைய நாடுகளுக்குத் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை சார்பில் 50 மாணவர்கள் செல்வது இதுவே முதல்முறை.
இதற்காகத் தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களில் அறிவியல், தொழில்நுட்பம், கலை, இலக்கியத்தில் சிறந்து விளங்குபவர்களைத் தேர்ந்தெடுத்தது தமிழகப் பள்ளிக் கல்வித் துறை. தமிழகத்தின் குக்கிராமங்களில் இருந்தும், இந்தக் கல்விச் சுற்றுலாவுக்குத் தேர்வான மாணவர்கள் பலர்.
பூமியின் சூடும் தாகமும்
கல்விச் சுற்றுலா முடித்துவிட்டு ஊர் திரும்பி இருக்கும் நம் அரசுப் பள்ளி மாணவர்களிடம், அங்கு அவர்கள் கற்றது என்ன, அதிலிருந்து பெற்றது என்ன என்பவை குறித்துப் பேசினோம்.
“பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கிக்குச் சென்று அங்குள்ள பள்ளிகள், பல்கலைக் கழகங்களைப் பார்வையிட்டோம். நம் வாழிடத்தை எப்படி அக்கறை யோடு பராமரிக்க வேண்டும் என்பதே அங்கு நாங்கள் கற்றுக்கொண்ட முதல் பாடம். பூமி வெப்பமடைதலும் தண்ணீர்ப் பற்றாக்குறையும் நாம் எதிர்கொள்ளவிருக்கும் தலையாயப் பிரச்சினைகள்.
இதற்கு ஒரே தீர்வு மரங்களை நடுவதுதான் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது அந்நாடு. பின்லாந்தில் மனிதர்களைவிட மரங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகமாக உள்ளது” என்றார் அரியலூர் பளிங்காநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி ஜெர்லின்.
பேதங்களை உடைத்த கல்வி
பின்லாந்தில் உள்ள எலெனா நடுநிலைப் பள்ளி (9-ம் வகுப்புவரை), எலிசென்வரா உயர்நிலைப் பள்ளிகளுக்குச் (10, பிளஸ்1 & 2) சென்று அங்கிருந்த மாணவர்களுடன் உரையாடி, அவர்களுடன் சேர்ந்து பாடம் பயின்ற அனுபவத்தை விவரித்தார் சென்னை சங்கரலிங்க நாடார் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் ஆகாஷ்.
“தச்சுவேலை, கார்விங், சமையல், தையல் உள்ளிட்டவை அந்தப் பள்ளிகளில் கற்பிக்கப் படுகின்றன. அனைத்தையும் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் அங்குள்ள பள்ளிக் கல்வியில் எங்களுக்கு மிகவும் பிடித்தது” என்றார் திருப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பூவரசன்.
தாய்மொழிக் கல்வி
பின்லாந்தின் தாய்மொழி ஃபின்னிஷ். ஸ்வீடனின் தாய்மொழி ஸ்வீடிஷ். தாய் மொழியில்தான் அங்குள்ள குழந்தைகள் படிக்கிறார்கள். அந்த மொழியில்தான் பள்ளி தொடங்கிப் பல்கலைக்கழகம் வரை கல்வி வழங்கப்படுகிறது. தாய்மொழிக் கல்வியே இல்லாமல் பள்ளிப் படிப்பை முடிக்கும் சூழல் நம் ஊரில் உள்ளது. ஆனால், அங்கே பள்ளி தொடங்கிப் பல்கலைக்கழகம்வரை பாடத் திட்டத்தின் முதுகெலும்பாகத் தாய்மொழிக் கல்வியே உள்ளது.
தாய்மொழிக் கல்வி மூலமே ஒரு குழந்தை முழுமையான கல்வியைப் பெற முடியும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். பாடத்தை எளிதாகப் புரிந்துகொள்ளவும், வகுப்பறையில் பேசுவதற்கும் தாய்மொழிக் கல்வியே அவசியம் என்பதில் பள்ளிகள் மட்டுமல்ல; அரசும் ஆழமான நம்பிக்கை வைத்துள்ளதைப் பார்த்தால் ஆச்சரியமாக இருப்பதாகச் சொல்கிறார் பூவரசன்.
பயம் கற்றுத் தராது
“பயந்தால் வாழ்வில் எதையும் கற்றுக்கொள்ள முடியாது என்பதை உணர்த்தும் விதமாக, மரங்களை அறுக்கும் சிறிய ரகக் கூர்மையான இயந்திரங்களைக்கூடப் பள்ளிக் குழந்தைகள் லாகவமாகக் கையாள்வது தொடங்கிப் பனிக் காலத்தில் உறைந்த ஏரியில் துளையிட்டு அதில் சால்மன் மீன் பிடிப்பதுவரை அத்தனையும் அங்கே பள்ளிப் பாடமே” என்கிறார் மதுரை திருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி காயத்ரி.
யாரும் யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது, அவரவர் தனித்தன்மையுடன் வாழ வேண்டும் என்பதை அங்கே கற்றுணர்ந்தோம் என்பது ஒட்டுமொத்த மாண வர்களின் குரலாகவும் ஒலித்தது.
தனியார் பள்ளியே இல்லை!
பின்லாந்திலும் ஸ்வீடனிலும் 7 வயதில்தான் முதல் வகுப்பில் சேர்க்கை நடைபெறுகிறது. நாடு முழுவதும் அங்கு அரசுப் பள்ளிகளே. அனைவரும் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும். இங்குபோல மூலைக்கு மூலை தனியார் பள்ளிகள் இல்லை. அதிபர் குழந்தையாக இருந்தாலும் சரி, அன்றாடக் கூலி வேலை செய்பவராக இருந்தாலும் அரசுப் பள்ளியில்தான் படித்தாக வேண்டும்.
பள்ளிக் கல்விமீது பெரும் நேசம் வைத்துள்ள, மொழி மீது முழு அக்கறை கொண்டுள்ள அரசு அமையப் பெற்றிருப்பதே அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க முக்கியக் காரணம் என்பதை இந்தச் சுற்றுலாவில் தாங்கள் கற்றுணர்ந்ததாக மாணவர்கள் தெரிவிக்கிறார்கள்.
விருப்ப அறையான வகுப்பறை
இந்தக் கல்விச் சுற்றுலாவுக்கு திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை சி.கலைவாணியும் மதுரை மாவட்டம் வண்டியூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஏ.ஜே. சார்லஸ் இமானுவேலும் மாணவர்களுடன் சென்றிருந்தனர்.
இது குறித்து ஆசிரியை கலைவாணி, “பின்லாந்திலும் ஸ்வீடனிலும் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களைப் பெயர் சொல்லித்தான் அழைக்கிறார்கள். அங்கு மாணவர்கள், ஆசிரியர்களுக்குச் சமமாக நடத்தப்படுகிறார்கள். குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி வகுப்பறை இருப்பதால், கல்வித் தரமும் மேம்பட்டுள்ளது” என்றார்.
பின்லாந்தில் 8-ம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர் தன்னுடைய தாய்மொழியான ஃபின்னிஷ் மட்டுமின்றி ஆங்கிலம், ஸ்வீடிஷ், கணிதம், உயிரியல், புவியியல், இயற்பியல், வேதியியல், உடல்நலம், வரலாறு, இசை, கலை, கைவினை, விளையாட்டு, உணவுத் தயாரிப்பு, மின்னியல், கார்விங் எனப் பல்வேறு பாடத்திட்டத் தேர்வுகளை எழுதுகிறார்.
அதேபோல சிற்றுண்டி, மதிய உணவு என அனைத்தும் அரசுப் பள்ளியில் வழங்கப்படுகிறது. பள்ளியின் உட்கட்டமைப்பைக் கண்டு மாணவர்கள் வியந்ததைப் போலத் தங்களும் வியந்ததாக ஆசிரியை கலைவாணியும் ஆசிரியர் சார்லஸ் இமானுவேலும் குறிப்பிடுகிறார்கள்.
தரமான பள்ளிக் கல்விதான் ஒரு மேம்பட்ட சமூகத்தை உருவாக்க முடியும். அதற்கேற்ற கல்விச் சூழலை பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் கட்டமைத்திருக்கிறார்கள். பள்ளிக்கும் சமூகத்துக்கும் இடையில் இடைவெளியே அங்கு இல்லை.
பள்ளியில் சுய ஒழுக்கமும் சுய கட்டுப்பாடும் உள்ளது. அது அங்குள்ள சமூகத்திலும் பிரதிபலிக்கிறது. தனி மனிதத் தவறுகள் பெருமளவு இல்லாமல் இருப்பதற்கும் மனத்தில் மனிதநேயம் குடிகொள்ளவும் முக்கியக் காரணம் அங்குள்ள பள்ளிக் கல்வியே என்பதைக் கண்கூடாகப் பார்த்துக் கற்றுக்கொண்டதாக ஒருமனதாகச் சொல்கிறார்கள் கல்விச் சுற்றுலா சென்று வந்திருக்கும் மாணவர்களும் ஆசிரியர்களும்.
நல்ல பாடம்!
முக்கிய செய்திகள்
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago