அதிசயம்… ஆனால் உண்மை என்று ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். குரூப்-2 முதனிலைத் தேர்வு நடந்து இரண்டே மாதங்களில் முடிவுகளை வெளியிட்டு வியப்பில் ஆழ்த்திய டி.என்.பி.எஸ்.சி., ஆண்டு தொடங்குவதற்கு முதல் நாளே தேர்வு அட்டவணையையும் வெளியிட்டிருக்கிறது. உத்தேசப் பட்டியல் என்று குறிப்பிட்டிருந்தாலும் வரவேற்கத்தக்க ஒரு முன்னகர்வு இது.
போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் முன்கூட்டி திட்டமிடுவதற்கும் அதற்கேற்பத் தயாராவதற்கும் உதவியாக இந்த அட்டவணை அமைந்திருக்கிறது. அதேநேரத்தில், இந்த அட்டவணை அதன் நோக்கத்தை முழுமையாக எட்டியிருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
2018 டிசம்பர் 31-ல் 2019-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை வெளியானது. குரூப் 1 தேர்வுகள் ஜனவரியில் அறிவிக்கப்படும் என்று அட்டவணையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மீண்டும் ஓர் ஆச்சர்யம்… ஆண்டின் முதல்நாளே அதைப் பற்றிய செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி. இன்னும் இரண்டு நாட்களில் தேர்வு அறிவிப்பு வெளியாகும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. அதன்படியே அறிவிப்பும் வெளியாகிவிட்டது. ஆனால், கடந்த இரண்டாண்டு காலமாக மாணவர்கள் தொடர்ந்து முன்வைத்த கோரிக்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகும், அதனால் ஒரு பயனும் இல்லாமல் போய்விட்டது.
இன்னும் கொஞ்சம் நீட்டிக்கலாமே!
சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதுவதற்கான வயதுவரம்பு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், மற்ற மாநிலங்களைப் போல குரூப் 1 தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பையும் நீட்டிக்க வேண்டும் என்று தமிழக மாணவர்கள் கோரிக்கை வைத்தார்கள். அதை ஏற்றுக்கொண்டு வயது வரம்பு இரண்டாண்டுகள் நீட்டிக்கப்படுவதாகத் தமிழக முதல்வர் சட்ட மன்றத்தில் விதி
110-ன் கீழ் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அது அரசாணையாகவும் வெளியிடப்பட்டது. தற்போது வெளிவந்துள்ள குரூப்-1 தேர்வில் இரண்டாண்டு கால வயதுவரம்பு நீட்டிப்பு நடைமுறைக்கு வந்திருக்கிறது.
எல்லாம் சரி… கடந்த இரண்டாண்டுகளாக குரூப்-1 தேர்வு நடத்தப்படாத நிலையில் இந்த வயது வரம்பு நீட்டிப்பால் யாருக்கும் எந்தப் பயனுமில்லை என்பதே உண்மைநிலை. இன்னும் காலம் கடந்துவிடவில்லை. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் முடிவடைவதற்குள் அரசு ஒரு நல்ல முடிவை எடுக்கலாம். தான் வெளியிட்ட அரசாணையின் நோக்கம் நிறைவேறும்வகையில் இந்த ஆண்டு மட்டும் வயதுவரம்பை நான்கு ஆண்டுகளாக நீட்டிக்கும் முடிவை எடுக்கலாம்.
திடுதிப்பென்று தேர்வா?
இரண்டாண்டுகளாக குரூப்-1 தேர்வு நடத்தப்படாத நிலையில், திடுதிப்பென்று அந்தத் தேர்வை அறிவித்திருப்பது மாணவர்கள் தேர்வுக்குத் தயாராவதற்கான அவகாசம் இல்லாத நிலையையும் உருவாக்கி இருக்கிறது. குரூப்-1 தேர்வுகளுக்கான பாடத்திட்டம் விரிவானது. ஏற்கெனவே தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள்கூட இரண்டு மாதங்களுக்குள் திருப்பிப் பார்ப்பது சற்றுச் சிரமமானது. இந்த நிலையில், புதிதாகத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு அது
மிகப் பெரிய சவாலாக இருக்கக்கூடும். கடந்த குரூப்-1 தேர்வில் நடந்த அநியாயமான கால தாமதத்தை அடுத்த தேர்வில் ஈடுகட்ட முயல்வதும் தவறான அணுகுமுறைதான்.
குரூப்-2, குரூப்- 2ஏ பணிகளுக்கான தேர்வுகள் தனித் தனியாகக் குறிப்பிடப்படாமல் இரண்டும் ஒன்றாகவே குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அப்படியென்றால், இந்தத் தேர்வுகள் ஒன்றாகவே நடத்தப்படப் போகின்றனவா, சில ஆண்டுகளாக நடைமுறையில்
இருக்கும் குரூப்- 2 முதன்மைத் தேர்வு தவிர்க்கப்படுமா அல்லது குரூப்- 2ஏ தேர்வுகளுக்கும் முதன்மைத் தேர்வு வருமா? மாணவர்கள் குழம்பிப்போய்க் கிடக்கிறார்கள். தேர்வு முறையில் மாற்றங்கள் வர இருக்கின்றன என்றால் அதையும் முன்கூட்டியே தெரிவிப்பதுதானே முறை?
மாற்றங்களை எதிர்ப்பார்த்து...
2019-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையில் 35 தேர்வுகள் முன்னறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தேர்வுகளில் குரூப்-1, குரூப்-2, குரூப்- 2ஏ, குரூப்-4, வி.ஏ.ஓ. தேர்வுகள் மட்டுமே குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பணியிடங்களைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. பெரும்பான்மையான தேர்வுகளுக்கான பணியிடங்கள் 10-க்கும் குறைவானதாகவே இருக்கக்கூடும்.
ஆனால், வழக்கமாக நடக்கும் பல தேர்வுகள் அட்டவணையில் இல்லை. இந்து சமய அறநிலையத் துறை, தொழிலாளர் நலத் துறை ஆகியவற்றில் காலிப் பணியிடங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் அதற்கான தேர்வுகள் பற்றிய அறிவிப்பு அட்டவணையில் இடம்பெறவில்லை. குறிப்பிட்ட ஒரு பணிக்குத் தேர்வு நடத்தினால் அதே பணிக்கான அடுத்த தேர்வு அறிவிப்பை இரண்டாண்டுகளுக்குத் தள்ளிவைப்பது என்ற டி.என்.பி.எஸ்.சி.யின் வழக்கத்தில் இன்னும் எந்த மாற்றமும் வரவில்லை.
தேர்வு அட்டவணையை ஆண்டின் தொடக்கத்திலேயே கிடைக்கச் செய்திருப்பது வரவேற்கத்தக்க முடிவு. ஆனால், வரும் ஆண்டுக்கான அட்டவணையை நடப்பாண்டின் நடுவிலேயே வெளியிடுவதுதான் உண்மையிலேயே பயனளிக்கக்கூடியதாக இருக்கும். பெண்களுக்கு, குறிப்பாக மகப்பேறு காலத்தை முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்கும் பெண்களுக்கு அது பேருதவியாக இருக்கும்.
பெண்களுக்கான இட ஒதுக்கீடுகள் மட்டுமே அவர்களுக்குச் சமவாய்ப்பை வழங்கிவிடாது. அவர்கள் போட்டியிடுவதற்கான வாய்ப்பையும் வழங்குவதுதான் சரியாக இருக்க முடியும். இனிவரும் காலத்தில் அதுகுறித்தும் பரிசீலிக்க வேண்டும்.குரூப் 1 தேர்வு 139 காலியிடங்கள்
குரூப் 1 தேர்வு 139 காலியிடங்கள்
சம்பள விவரம்: ரூ.56,100 - 1,77,500
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31/01/2019
முதல்நிலைத் தேர்வு: 03/03/2019
கூடுதல் தகவல்களுக்கு: www.tnpsc.gov.in
முக்கிய செய்திகள்
கல்வி
12 mins ago
கல்வி
1 hour ago
கல்வி
21 hours ago
கல்வி
21 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago