“எல்லாவற்றையும் குறித்த சரியான உண்மை எனக்குத் தெரியும் என்று எவரொருவர் தம்பட்டம் அடித்துக்கொள்கிறாரோ, சந்தேகத்துக்கே இடமின்றி அவர் சந்தேகத்துக்குரியவர்” என்று அறிவியல்பூர்வமான சிந்தனைக்கு எதிரானவர்களைக் கேலியாக விமர்சித்தவர் நோபல் பரிசு பெற்ற தத்துவ அறிஞர் பெர்ட்ரண்டு ரசல். 1931-ல் அவருடைய புத்தகம் ‘தி சயின்டிஃபிக் அவுட்லுக்’ (The Scientific Outlook) வெளியானது.
இந்தப் புத்தகத்தில் ‘Characteristics of the Scientific Method’ என்ற அத்தியாயத்தில் ஒரு நிகழ்வை அறிவியல் கோட்பாடாகக் கருத வேண்டுமானால் சோதனைக்கு உட்படுத்துதல், நிரூபணங்களைத் தேடுதல், நிரூபிக்கப்பட்ட உண்மையை மறு ஆய்வுக்கு உட்படுத்துதல் ஆகிய மூன்று கட்டங்கள் அடிப்படை என்று வலியுறுத்தினார் ரசல். இதுவே அறிவியல் சிந்தனைக்கான அடித்தளம்.
ஆனால், கடந்த வாரம் பஞ்சாபில் உள்ள லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 106-வது இந்திய அறிவியல் மாநாட்டில் அறிவியல் சிந்தனைக்கு எதிராகவும் போலி அறிவியலைப் பரப்பும் விதமாகவும் சில சம்பவங்கள் நிகழ்ந்தன. நாடு முழுவதிலும் இருந்து தங்களுடைய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காகப் பல மட்டப் போட்டிகளில் பங்கேற்றுத் தேர்வான 200-க்கும் மேற்பட்ட குழந்தை விஞ்ஞானிகள் (பள்ளி மாணவர்கள்) இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
திசை திருப்புவது யார்?
இந்தக் குழந்தை விஞ்ஞானிகளுக்கு முன்னிலையில், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ஜி. நாகேஸ்வரராவ், கௌரவர்கள் டெஸ்ட் டியூப் குழந்தைகள் என்றும் ராவணன் பல்வகையான விமானங்கள் வைத்திருந்ததாகவும் இலங்கையில் பல ஏர்போர்ட்டுகள் இருந்ததாகவும் இவை அனைத்தும் இந்தியாவின் தொன்மை அறிவியலுக்கான பெருமை மிகு சான்றுகள் எனவும் கூறியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானி முனைவர் கண்ணன் ஜெகதள கிருஷ்ணன், நியூட்டனுக்கு ஈர்ப்புவிசை குறித்து மிகவும் குறைவான அறிவுதான் இருந்தது என்றும் ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு உலகைத் திசைதிருப்பிய தவறான அறிவியல் கோட்பாடு என்றும் கூறியுள்ளார்.
இதனால் சர்ச்சை கிளம்பியதை அடுத்து இது தொடர்பான தன்னுடைய ஆய்வறிக்கையை 40 நாடுகளில் உள்ள 400 பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பி இருப்பதாகவும் தன் கூற்றைத் தவறு என்பவர்கள் அதை நிரூபிக்கும்படியும் சவால் விடுத்துள்ளார்.
அறிவியல் வளர்ச்சிக்கு மட்டுமின்றி அறிவுபூர்வமான சிந்தனைக்கும் இத்தகைய போக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்; போலி அறிவியலைக் கட்டமைக்கும் இந்தப் போக்கு அறிவியலுக்கு முற்றிலும் எதிரானது என்று அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு உட்பட அறிவியல் மீதும் சமயசார்பற்ற ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கையும் அக்கறையும்கொண்ட பல அமைப்புகளும் தனி மனிதர்களும் கல்வியாளர்களும் விஞ்ஞானிகளும் தங்களுடைய குரலை எழுப்பிவருகின்றனர்.
விஷ விதையைத் தூவாதீர்கள்!
கடந்த 20 ஆண்டுகளாக இந்திய அறிவியல் மாநாட்டில் தன்னுடைய மாணவர்களோடு கலந்துகொண்டுவருபவர் குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளரான ஆசிரியை ஹேமாவதி. அவர் இது குறித்துக் கூறுகையில், “தேசத்தின் அறிவியல் வளர்ச்சிக்காக இந்திய அறிவியல் மாநாடு கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நடத்தப்பட்டுவருகிறது.
இதில் நோபல் பரிசு பெற்ற தலைசிறந்த அறிஞர்கள், மாண்புமிகு கல்வியாளர்கள், அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள். கடந்த வாரம் நடைபெற்ற மாநாட்டில் 2004-ல் வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற அவ்ரம் ஹெர்ஷ்கோ, 2016-ல் இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்ற ஃபிரெட்ரிக் டன்கன் மிஷேல் ஆகியோர்தாம் நிகழ்ச்சியையே தொடங்கிவைத்தனர்.
வழக்கமாகச் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படும் நோபல் அறிஞர்கள் தங்களுடைய கண்டுபிடிப்புகளை மாணவர்களுக்கு எளிமையாக விளக்கும் அமர்வு நடைபெறும். ஆனால், இம்முறை நோபல் பரிசு விஞ்ஞானிகளுக்கு மிகக் குறைவான நேர அவகாசமே வழங்கப்பட்டதால் அவர்கள் வாழ்த்துரையோடு முடித்துக்கொண்டார்கள். இதுவே மிகப் பெரிய ஏமாற்றம் அளித்தது” என்றார்.
அதைத் தொடர்ந்து, முதல் அமர்வில் ‘Indian Way of Life’ என்ற தலைப்பில் பேசிய ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், கங்கை நீரில் பாக்டீரியா கிருமிகளைத் தாக்கும் வைரஸ் கிருமியான பாக்டீரியோஃபேஜ் இருப்பதால்தான் அந்நீர் தூய்மையாகவும் புனிதமாகவும் நீடிக்கிறது என்பதாக உரையைத் தொடங்கினார். டார்வின்கூட வெறும் மனிதனோடு பரிமாணக் கோட்பாட்டை நிறுத்திக்கொண்டார்.
அது முழுமை அற்ற கோட்பாடு. ஆனால், 3,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதனின் பூரணத்துவத்தை ராமர், கிருஷ்ணர் அவதாரங்கள் வழியாக எடுத்துரைக்கும் தசாவதாரம் இந்து மதத்தில் முன்வைக்கப் பட்டுவிட்டது என அடுத்தடுத்து அடுக்கினார். இதைக் கேட்ட மாணவர்கள் குழப்பமடைந்தனர்.
ஆனால், கேள்வி-பதிலுக்கான நேரம் மறுக்கப்பட்டதால் எதிர்க் கருத்தை யாருமே தெரிவிக்க முடியாமல்போனது. இதைவிடவும் அதிர்ச்சி அளித்தது, ஐந்து நாள் மாநாட்டின் கடைசி நாளன்று நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் ‘இந்தியா இந்துக்களுக்கே!’ என்ற கோஷத்துடன் கணபதி சிலை ஊர்வல நடனம் அரங்கேற்றப்பட்டது.
சமயசார்பற்ற அறிவியல் பூர்வமான பார்வையை ஊக்குவிப்பதற்கான மாநாட்டில் இத்தகைய சம்பவங்கள் வளரிளம் பருவத்தினரின் மனத்தில் விஷ விதையைத் தூவுவதுபோல இருந்தது” என்றார்.
kumaranjpgகுமரன் வளவன்rightஅறிவியல் என்பது கற்பனை அல்ல
அறிவியலை மதம் கபளீகரம் செய்யும் முயற்சி அனைத்து மதங்களிலும் காலந்தோறும் நடைபெற்றுவந்ததைச் சுட்டிக்காட்டுகிறார் நாடகக் கலைஞரும் கோட்பாட்டு இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவருமான குமரன் வளவன். “உலக நாடுகள் அனைத்திலும் உள்ள பல்கலைக்கழகங்களில் நியூட்டன், ஐன்ஸ்டைனின் கோட்பாடுகள் இன்றுவரை கற்பிக்கப்படுகின்றன.
அவை தவறென்று சொல்பவர்கள்தான் தங்களுடைய கூற்றை நிரூபிக்க வேண்டுமே, தவிர நாம் நிரூபனங்களைச் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. மனிதன் ஒரு நாள் றெக்கை கட்டி பறப்பான் என்று கற்பனை செய்து 500 ஆண்டுகளுக்கு முன்பே வரைந்தவர் லியோனார்டோ டா வின்சி. அதற்காக விமானத்தைக் கண்டுபிடித்தவர் டா வின்சி எனலாமா? மனிதனின் தனித்துவம் கற்பனைத் திறன். இதிகாசங்களும் புராணங்களும் கலைப் படைப்புகளும் அற்புதமான கற்பனைத் திறனின் வெளிப்பாடு.
ஆனால், அறிவியல் என்பது கற்பனை அல்ல. ஏனென்றால் அறிவியலின் மையம் சோதனையும் நிரூபணமும். வியாசரும் டார்வினும் அவரவர் துறைகளில் அறிவுஜீவிகளே. இருவரையும் ஒப்பிடுவதே தவறான அணுகுமுறை” என்கிறார் அவர்.
கண்டுபிடிப்புகள் பாதிக்கப்படும்!
மேற்கத்திய நாடுகளில், இவ்வாறான அறிவியல் ஆதாரமற்ற பேச்சுகள் அரசியல் அல்லது அரசியலுக்கு அப்பாற்பட்டு உடனடியாகக் கண்டிக்கப்படும் என்கிறார் ஐக்கியக் குடியரசின் வேல்ஸ் நாட்டில் உள்ள சுவான்சி பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்பணி மேற்கொண்டுவரும் தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் சுதாகர் பிச்சைமுத்து.
sudhakarjpgசுதாகர் பிச்சைமுத்து“இந்தியாவில் அரசின் உயர் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களை மகிழ்விக்க இதுபோன்ற போலி அறிவியல் செய்திகளைப் பேசுவது தற்போது அதிகரித்து வருகிறது. ஆதாரமும் நிரூபணமும் இல்லாத செய்திகள் வரலாற்றில் ஆவணமாகி இதை உண்மையெனக் கருதி இளம் தலைமுறை பேச ஆரம்பித்தால் எதிர்கால இந்தியாவில் உருவாகும் கண்டுபிடிப்புகள் பாதிக்கப்படும்.
உலகம் உருண்டை என எடுத்துரைத்த இத்தாலிய வானவியல் அறிவியலாளர் கலிலியோவை உண்மைப் பேச விடாமல் நம்பிக்கையாளர்கள் நசுக்கியதுபோல எதிர்கால இளம் அறிவியலாளர் தலைமுறையினரை நசுக்கும் நிலை இந்தியாவிலும் உருவாக வாய்ப்புள்ளது” என்று எச்சரிக்கிறார்.
ஏற்கெனவே பிரதமரிலிருந்து அமைச்சர்கள்வரை டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டைப் பொய் என்பதும், மாட்டுச் சாணமும் கோமியமும் புற்றுநோய்க்கு மருந்து என்பதும், பசு பிராணவாயுவை வெளியேற்றுகிறது என்பதுமான கருத்துகளை அவ்வப்போது பரப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.
இதுபோதாதென்று கல்வியாளர்களே போலி அறிவியல் சிந்தனைகளை முன்வைத்தல் என்பது ஒட்டுமொத்த தேசத்தின் கல்வி வளர்ச்சிக்கும் அறிவியல் முன்னேற்றத்துக்கும் முட்டுக்கட்டையாகிவிடும். குறிப்பாக, அறிவியல் சிறகை விரிக்கத் துடிக்கும் குழந்தை விஞ்ஞானிகளிடம் போலி அறிவியல் சிந்தனையை விதைக்கும் முயற்சி வன்மையான கண்டனத்துக்குரியது.
மெய்ப்பொருள் காண்பது அறிவு/அறிவியல்
ஒரு கோட்பாடோ கண்டுபிடிப்போ உண்மை என்று ஏற்றுக்கொள்ள அறிவியலின் விதிமுறைகள்:
# இன, மொழி, தேச வரைமுறைகளைக் கடந்து, ஒரு கண்டுபிடிப்பை யார் செய்ய முயன்றாலும் அவர்களும் அதே முடிவை எட்ட வேண்டும்.
# அதனால் ஏற்படும் விளைவை, ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டுள்ள கோட்பாடுகளைக் கொண்டு விளக்க வேண்டும்.
# தேவைப்பட்டால் புதிய கோட்பாடுகளை உருவாக்க வேண்டும்.
தொடர்புக்கு: susithra.m@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கல்வி
21 hours ago
கல்வி
22 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago
கல்வி
10 days ago