கரும்பலகைக்கு அப்பால்... 05 - நாமதான் நிறுத்தணும்

By ‘கலகல வகுப்பறை’ ரெ.சிவா

“வெள்ளியன்று உன்னைக் காணவில்லையே, உடம்புக்கு ஏதும் சரியில் லையா?” என்று அவனிடம் கேட்டேன்.

மெதுவாக எழுந்து நின்றவன் பதிலேதும் சொல்லவில்லை.

“ஐயா, ரெட் அலர்ட்னு வாட்ஸ் அப்பில் வந்ததால அவங்கம்மா போக வேணாம்னு சொல்லிட்டாங்களாம்! இவனும் வரல. மழையும் வரல!” என்று ஒருவன் சிரித்தபடி கூறினான்.

“வாட்ஸ்அப் மட்டுமில்ல. எல்லா டிவி, பேப்பர்லயும் மழை அதிகமா வரும்னு சொல்லிட்டுத்தானே இருந்தாங்க” என்றான் நின்றிருந்தவன். உண்மைதான். இது ஒன்றும் வதந்தி அல்ல. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானது. அது எதிர்பார்த்த அளவில் மழை தராவிட்டாலும் நல்ல மழைதான் பெய்திருக்கிறது.

இப்போது நாம் முக்கியமான ஒரு தலைப்பில் உரையாடலாம் என்று சொல்லிவிட்டு ‘சமூக வலைத்தளங் களால் நன்மையே/ தீமையே’ என்று கரும்பலகையில் எழுதினேன்.

நன்மையே / தீமையே

வழக்கம்போல வகுப்பறை இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து கொண்டது. அவர்களே தங்களுக்கான தலைப்பை முடிவு செய்துகொண்டனர்.

நன்மையே என்ற அணி, நிறைய செய்திகளைத் தெரிஞ்சுக்கலாம். அறிவியல், மருத்துவம் குறித்த செய்திகள் வருது. நிறைய வீடியோக்கள் பார்க்கலாம். நண்பர்களோடு பேசலாம், வீடியோ மூலம் பார்த்தும் பேச முடியும். வெள்ளம் போன்ற அவசரச் செய்திகளைப் பகிர முடியும். என்று தனது வாதங்களை முன்வைத்தது.

பேருந்து விபத்து, அவசர உதவி என்று வருவதை நம்ப முடியாது பல மாதங்கள் கழிச்சு திரும்பவும் வருது.

வாட்ஸ்அப்பில் பகிரப்படுவது உண்மையா என்பது தெரியாது. ‘இந்தப் படத்தைப் பத்துப் பேருக்குப் பகிர்ந்தால் உங்க செல் சார்ஜ் ஆகும்’னு ஏமாத்துறாங்க. நிறைய புரளிதான் பரவுது. கெட்ட படங்கள் பரவுது. மோமோ மாதிரி வைரஸ் வரும்.

‘பத்தாம் வகுப்பு தேறினவங்களுக்கு ஐம்பதாயிரம் கிடைக்கும்’ என்பது போன்ற பொய்ச் செய்திகள்தாம் அதிகம் வருது என்பது எதிர்த்தரப்பு வாதம்.

அதனால் என்ன பயன்?

சமூக வலைத்தளங்களால் என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பது பற்றிய மூன்று நிமிடக் குறும்படமான ‘புழுகினி’-யைத் திரையிட்டேன்.

சமூக வலைத்தளங்களில் எவ்வாறெல்லாம் பொய்யைப் பரப்புகிறார்கள் என்பது குறித்த படம் இது. சமூக வலைத்தளங்களில் புரளிகளைப் பரப்புவதையே வேலையாகக்கொண்ட நிறுவனம். எவ்வாறெல்லாம் சூழலுக்கு ஏற்ற புரளிகளைப் பரவவிடுகிறது என்பதே கதை.

‘ஐயா, தமிழனா இருந்தா பகிரு! ஆம்பளையா இருந்தா பகிரு!’ இப்படில்லாம் வந்த செய்திகளை நாங்களும் பகிர்ந்திருக்கிறோம் என்றனர் சிலர்.

‘இலுமினாட்டின்னா என்ன?’ என்ற கேள்வி எழுந்தது.

இது மாதிரிப் பல செய்திகள் இப்போ பரவலாகப் பேசப்படுகின்றன. இவற்றில் எந்த அளவு உண்மையும் பொய்யும் கலந்திருக்கின்றன என்பது தெரியவில்லை. நமக்குத் தேவையான செய்திகள் குறித்த புத்தகங்களை வாசிக்கலாம். பரபரப்பாகப் பேசப்படும் எல்லாவற்றையும் தேடிப்போனால் நிறைய தகவல்களைச் சேர்க்கலாம். ஆனால், அதனால் என்ன பயன் என்றும் யோசிச்சுப் பார்ப்பதும் அவசியம் என்றேன்.

இப்போ இன்னொரு குறும் படம் பார்ப்போம். படத்தோட பெயர் ‘சோசியல் மீடியா சுப்பிரமணி’. இதுவும் மூன்று நிமிடங்களே ஓடக்கூடிய குறும்படம். தேவைக்காகப் பரப்பும் தகவலாலும் பிரச்சினை வரும் என்பதை எளிமையாகவும் நகைச் சுவையாகவும் சொல்லும் படம்.

படம் முழுக்க அனைவரும் சிரித்துக்கொண்டே இருந்தோம். ஒரு உதவிக்கான செய்தியா இருந்தாலும் அனுப்பிட்டா பலருக்கும் போயிட்டே இருக்கும். அது கிடைச்சிருச்சு என்றாலும் எப்படிப் பழைய செய்தியை நிறுத்த முடியும்?

உதவி தேவையென்றால் செல்பேசி எண் இருக்கும். அழைத்துக் கேட்கணும். உண்மை தெரிஞ்சிடும். நாமதான் நிறுத்தணும் என்று எங்களின் உரையாடல் முடிந்தது.

நான் பெற்ற துன்பம்

செய்திப்பகிர்வுக்கு சமூக வலைத்தளங்கள் பெரிதும் பயன்படு கின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு செல்பேசிக்கு ஆயிரக்கணக்கான செய்திகள் பகிரப்படுகின்றன. ஒரு குழுவுக்குள்ளேயே மீண்டும் மீண்டும் பகிரப்படுவதும் உண்டு. நிறையக் குழுக் களில் இருப்பவர் என்றால் பாவம்தான்.

பகிரும் செய்தியின் உண்மைத் தன்மை குறித்த அக்கறை ஏதுமில்லாமல் பேரார்வத்துடன் பகிர்ந்துகொண்டே இருக்கிறோம். ஒரு குழுவில் மட்டுமா வது ஒருநாளில் பகிரப்படும் அனைத்துச் செய்திகளையும் வாசிக்க இயலுமா?

செல்பேசி மாபெரும் குப்பைத்தொட்டி ஆகியிருக்கிறது. நான் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம் என்று எல்லோரும் நிறையக் குப்பைகளைப் பரப்பிக்கொண்டே இருக்கிறோம். சமூக விலங்காகிய மனிதர்கள் நம்மை நாமே தனிமைச்சிறைக்குள் அடைத்துக்கொண்டிருக்கிறோம்.

சமூக வலைத்தளங்கள் தரும் சுதந்திரம் நமது ஆர்வத்தைத் தூண்டு கிறது. நான் கவனமாக இருப்பேன் என்று சொல்லிக்கொண்டே அடிமையாகிக் கொண்டிருக்கிறோமோ?

‘புழுகினி’ படம்

 

‘சோசியல் மீடியா சுப்பிரமணி’ படம்

சோசியல் மீடியா 

 

- கட்டுரையாளர், பள்ளி ஆசிரியர்,
தொடர்புக்கு: artsiva13@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

20 hours ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

8 days ago

கல்வி

9 days ago

கல்வி

10 days ago

கல்வி

11 days ago

கல்வி

11 days ago

மேலும்