அமெரிக்காவில் கடந்த ஆண்டு தொடங்கி, இன்று தமிழகம்வரை பரவியிருக்கும் மீடூ இயக்கம், பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாலினக் கல்வி சார்ந்த முக்கியத்துவத்தை மீண்டும் நினைவூட்டியுள்ளது. பாலின சமத்துவ உணர்வு, பாலின பன்மைத்துவ அங்கீகாரத்துக்கான கல்வியைப் பள்ளிகளிலேயே கற்றுக்கொடுக்கத் தொடங்கியதன் மூலம் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே மரியாதையான உறவு நிலையை ஏற்படுத்த முடியும் என்ற நிலையை ஐரோப்பிய நாடுகள் உருவாக்கியுள்ளன.
ஆணாக வேண்டுமா?
பெருநிறுவன வேலைச்சூழல்களில்கூடப் பெண்கள் சமமானவர்கள் என்பது ஏட்டளவிலான புரிதலாகவே இருக்கிறது; ஆனால், நடைமுறையில் அதை ஏற்கும் மனநிலை இல்லை என்கிறார் நடத்தை உளவியலாளரான ஹாலாஸ்யம் சுந்தரம். “பெருநிறுவனங்களில் நடக்கும் ஊழியர் கூட்டங்களில் இன்னும் பெண் ஊழியர்கள் சொல்லும் யோசனைகளை ஆண்கள் தீவிரமாக கேட்பதில்லை. அவர்கள் வேண்டுமென்றே அலட்சியமாக இருக்கிறார்கள் என்று சொல்ல மாட்டேன்.
ஆனால், பெண் தொடர்பான புறக்கணிப்பு அவர்களிடம் காணப்படுகிறது. அத்துடன் ஒரு பெண் தனது வேலைச்சூழலில் தன் திறன்களையும் யோசனைகளையும் கவனப்படுத்துவதற்கு ஆணாக மாற வேண்டிய நிலையும் உள்ளது. ஆண்களைப் போல உரக்கக் குரல் எழுப்ப வேண்டும். ஒரு பெண்ணின் யோசனையோ திறனோ ஏற்கப்பட அவளது தோற்றமும் முக்கியமான அம்சமாக ஆண்களிடம் கருதப்படுகிறது.
இந்த நிலைமைகளிலிருந்து விடுபட ஒரு ஆண், முதலில் பெண்ணின் நிலையிலிருந்து அவளைப் பார்க்கும் பக்குவத்தை அடைய வேண்டும். ஆணின் சிந்தனை முறையும் பெண்ணின் சிந்தனை முறையும் வேறு வேறு என்பதை அவன் தெரிந்துகொள்ள வேண்டும். ஆண் ஒன்றுக்குப் பிறகு ஒன்று என்ற நேர்கோட்டுச் சிந்தனையை (Linear Thinking) உடையவன்.
பெண்களோ வெவ்வேறு சாத்தியங்களையும் சேர்த்துப் பார்க்கும் இணைச் சிந்தனையைக் (Lateral Thinking) கொண்டவர்கள். இதையெல்லாம் புரிந்துகொள்வதற்கான கல்வி வீட்டிலிருந்தும் பள்ளியிலிருந்தும் தொடங்கப்பட வேண்டும்” என்கிறார்.
இருபாலர் பள்ளியே சிறந்தது
பாலினக் கல்வி தொடர்பாக சர்வதேச அளவில் யுனெஸ்கோ சமீபத்தில் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், பாலியல் நடத்தைக் கல்வி ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை விளக்குகிறது. எந்த மாதிரியான சூழ்நிலையில் உடலின் அங்கங்களை அந்தரங்கமாக வைக்க வேண்டுமென்பதில் தொடங்கி தனக்கு ஏற்படும் உணர்வுகளைப் புரிந்துகொள்தல், அதை வெளிப்படுத்தும் நடைமுறை தொடர்பான அறிவு, நம்பத் தகுந்த இடங்கள், நபர்களை அடையாளம் காணும் திறன் ஆகியவை இந்தக் கல்வியால் அதிகரிப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஆணுக்கும், பெண்ணுக்கும் சிறுவயதிலிருந்து சேர்ந்து பழகுவதற்கான வாய்ப்பு இல்லாத சூழலிலேயே வன்முறைகள் அதிகம் நடைபெறுவதாக ஐ.ஐ.டி. பேராசிரியை கல்பனா கூறுகிறார்.
“ பாலின சமத்துவத்தைப் பேசுவதற்கும் பழகுவதற்கும் சிறந்த இடம் பள்ளிகள்தாம். திறன்கள், தகுதிகள், தரநிலைகளில் இருவரும் சமமானவர்களே என்று தெரிந்துகொள்வதற்கு இருபாலர் பள்ளிகள் சிறந்தவை. இரண்டு பாலின மாணவர்களையும் பிரித்துவைக்கும்போது பெண்களும் தங்களைப் போன்றவர்கள் என்ற சமநிலை வருவதற்கான சூழல் இல்லாமல் போகிறது.
விளையாட்டு வகுப்புகளில் இருபாலின மாணவர்களும் சேர்ந்து விளையாடுவதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும். இன்னொரு பாலினத்தவர் தொடர்பாக மற்றவருக்கு எழும் கேள்விகள், பயங்கள், சந்தேகங்கள் போன்றவற்றை அவர்கள் கேட்பதற்கும் பகிர்ந்துகொள்வதற்குமான பயிலரங்குகளை நடத்த வேண்டும்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் மாணவர்களும் மாணவிகளும் பேசுவதற்குக் கூட அனுமதி இல்லை. இது சமத்துவமில்லாத ஆரோக்கியமற்ற சமூக நிலையையே உருவாக்கும்” என்கிறார்.
சமத்துவ சிந்தனை வேண்டும்
சாதி, மதம், வர்க்கம் என்று எல்லா வகையிலும் சமத்துவச் சிந்தனை உணர்வை வளர்ப்பதன் மூலமே பாலின சமத்துவக் கல்வியை வெற்றிகரமாக்க முடியும் என்கிறார் மகளிரியல் துறைப் பேராசிரியர் என்.மணிமேகலை. ஆண், பெண் உறவுகளைத் தாண்டி பாலியல் சிறுபான்மையினர் ஒருவருக்கொருவர் கொள்ளும் பாலுறவிலும் அதிகாரமும் ஒடுக்குதலும் நிலவுவதாகப் பகிர்ந்துகொண்டார்.
“பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் நிர்வாகத்துக்குக் கீழே வரும் கல்லூரிகளில் இளங்கலை படிக்கும் மாணவர்களுக்கு பாலின சமத்துவக் கல்வி (Foundation course on gender studies) பாடமாக உள்ளது. வெறுமனே படித்து தேர்வெழுதிக் கடந்துபோவதற்கல்ல இதுபோன்ற பாடங்கள். ஆண் – பெண் சமத்துவ உணர்வு மட்டுமின்றி, சாதி, மதம், வர்க்கம் என எல்லா நிலையிலும் சமத்துவ சிந்தனையும் உணர்வும் பெற்றவர்களே ஆசிரியர்களாக இந்தப் பாடங்களை நடத்த வேண்டும்.
ஆனால், நடைமுறையில் சூழ்நிலை அவ்வளவு சிறப்பாக இல்லை. பெண்கள் அணியும் உடை தொடர்பான பார்வைகூட இன்னமும் கல்லூரி, பல்கலைக்கழகச் சூழலில் மாறவில்லை. பெண் அணியும் உடைதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணமாக இருக்கிறது என்ற மனநிலை எல்லா தரப்பிலும் இன்னும் இருக்கிறது.
மத்திய பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டு தலில் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள ‘ஜெண்டர் சேம்பியன் க்ளப்’ களில் பங்கேற்கும் ஆண், பெண் தன்னார்வலர்களிடம் கூட பாலியல் சமத்துவ சிந்தனை இல்லாத நிலையையே நாங்கள் பார்க்கிறோம். கல்வி, வேலை சார்ந்து பெண் வீட்டை விட்டு வெளியே போவதை ஏற்றுக்கொண்ட சமூகத்தில் அவள் சமம், எல்லா உரிமைகளும் அவளுக்கும் உண்டு என்ற ஏற்கக்கூடிய மனம் இன்னும் வரவில்லை.” என்றார்.
நட்பு, அலுவல்ரீதியான உறவுகள், காதல் போன்ற உறவுகளில் ஆண், பெண், பாலியல் சிறுபான்மையினர் தொடர்பான பரஸ்பரப் புரிதலாலும் மரியாதையாலுமே பாலினரீதியான வன்முறையையும் குடும்ப வன்முறையையும் தவிர்க்க முடியும் என்கிறது ஆஸ்திரேலியாவின் ராயல் கமிஷன் அறிக்கை.
பாலுறவு, பாலீர்ப்பு பற்றிய புரிதல், பரஸ்பர மரியாதை அடிப்படையில் எதிர்பாலினத்தவருடனான உறவு ஆகியவை குறித்த கல்வியை வீடு, பள்ளி, கல்லூரி நிலையில் பயிலத் தொடங்குவோம்.
பாலியல் கல்வியில் முன்னோடி நாடுகள்
டச்சு: நான்கு வயது முதல் 12 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு அரசு மானியத்தில் பாலியல் கல்வி பள்ளிப் பாடத்தில் ஒரு பகுதியாக உள்ளது. உறவுகள், பால் ஈர்ப்பு, அரவணைத்தல், நட்பு, குழந்தை பிறப்பு போன்றவை பற்றி கற்றுக்கொடுக்கப்படுகின்றன. 14 வயதுக்கு மேல் இனப்பெருக்கம், உடலுறவு, பாலுறவால் ஏற்படும் நோய்கள் பற்றிய பாடங்கள் சொல்லித் தரப்படுகின்றன.
டென்மார்க்: டென்மார்க்கைப் பொறுத்தவரை பாலியல் பற்றி மிகவும் எளிமை யாகவும் துல்லியமாகவும் சிறுவயதிலிருந்தே கற்றுக்கொடுக்கப் படுகிறது. பாதுகாப்பான உறவுகள் தொடர்பாக சித்திரப் புத்தகங்கள் வழியாக அவர்களுக்குக் கற்றுத்தரப்படுகிறது. பெற்றோர் உள்ளிட்ட பெரியவர்களிடம் குழந்தைகள் தங்கள் பாலியல் சந்தேகங்களைத் தெரிந்துகொள்வது, அங்கே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஜெர்மனி: பள்ளியிலும் சமூகத்திலும் குழந்தைகள் பாலியல் கல்வியையும் சந்தேகங்களையும் தெளிவுபடுத்திக் கொள்வது நடைமுறையாகவே உள்ளது. 1974-ல் வெளியான ஆபாசமற்ற புகைப்படங்களுடன் பாலியல் கல்வியைப் போதிக்கும் ‘ஸைக் மால்’ நூல் பதின்பருவத்துக்கு முந்தைய குழந்தைகளுக்காக வெளியாகி அவர்களிடம் மிகப்பெரிய செல்வாக்கைப் பெற்றது. ஆனால், இதே புத்தகம் அமெரிக்காவில் பின்னர் வெளியானபோது விநியோகம் தடைசெய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago