அப்பா: ‘நீ தினமும் சாப்பிடுற சாதம் எதிலிருந்து வருது தெரியுமா?’
மகன் (2-ம் வகுப்பு): ‘அரிசியிலிருந்துபா’
அப்பா: ‘சரியா சொன்ன… அரிசி எதிலிருந்து வருது தெரியுமா?’
மகன்: ‘அரிசியா… அது… நம்ம வீட்டு அரிசி மூட்டையில இருந்து வருது’
அப்பா: ‘ஹாஹாஹா… அரிசி மூட்டை எங்கிருந்து வருது?’
மகன்: ‘கடையில இருந்து’
அப்பா: ‘கடைக்கு எங்கிருந்து அரிசி வருது?’
மகன்: ‘தெரியலையே!!!’
அரிசி, தோட்டம், வயல், கிணறு, கால்நடைகள்… போன்றவை இன்றைய நகர்ப்புறத்தைச் சேர்ந்த ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு மனப்பாடப் பகுதி ஆகிவிட்டன. இதுவரை பார்த்திராத ஒன்றை மனத்தில் நிறுத்த வேண்டுமானால் மனப்பாடம் செய்யத்தானே வேண்டும்!
நேரடியான அனுபவத்தில் உணர வேண்டியதைக்கூடப் பாடப் புத்தகத்தின் வழியாக வகுப்பறைக்குள் திணிக்கும் கற்பித்தல் முறை வலுத்தால் இப்படித்தானே நடக்கும். இப்படி நம் அன்றாடத்தில் கலந்திருந்தவற்றில் பல இன்று நம் குழந்தைகளுக்கு ஏட்டுக் கல்வியாகிப்போன அவலத்தைப் பற்றிக் கல்வி குறித்த அக்கறை கொண்டவர்கள் அண்மைக் காலமாக தீவிரமாக விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன்பே இத்தகைய போக்கை அவதானித்து அன்றைய அமெரிக்கக் கல்வியில் சீர்திருத்தம் செய்தவர் ஜான் டூயி. அக்டோபர் 20, 1859-ல் பிறந்த இவர் ‘நடைமுறையியல்’ என்ற ‘Pragmatism’ தத்துவக் கோட்பாடு, செயல்பாட்டு உளவியல் ஆகியவற்றைக் கட்டமைத்தவர். ஆனால், அதைவிடவும் அவருக்குப் பெயரும் புகழும் வாங்கித் தந்தது அவர் முன்வைத்த, நடைமுறைப்படுத்திய கல்விச் சிந்தனைகளே.
பள்ளிக்கூடத்துக்கு முன்பாக நிற்கும் சவால்
‘அனுபவபூர்வமான கல்வியின் நவீனத் தந்தை’ என்று இன்றும் ஜான் டூயி நினைவுகூரப்பட காரணம் 1896-ல் சிகாகோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து அவர் தோற்றுவித்த ‘ஆய்வுக்கூடப் பள்ளி’ (Laboratory school). சிகாகோ நகரத்தை விட்டு டூயி வெளியேற நேரிட்டதால் 1904-ல் இந்தப் பள்ளி மூடப்பட்டது. இருப்பினும் வெறும் எட்டாண்டுகள் மட்டுமே செயல்பட்ட இந்தப் பள்ளியில், முன்வைக்கப்பட்ட கல்வித் திட்டம் 122 ஆண்டுகள் கழித்தும் உலகளாவிய கல்வியாளர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
அப்படி என்ன இந்தப் பள்ளி செய்துவிட்டது என்பதற்குச் சான்று 1900-ல் அப்பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் சங்கத்தின் கூட்டத்தில் டூயி ஆற்றிய உரை. “பள்ளிக்குள் ஒரு குழந்தை அடியெடுத்துவைத்த முதல் மூன்று ஆண்டுகளிலேயே அதற்கு வாசிக்க, எழுத, கணக்குப் போட கற்பிப்பதைத்தான் முழு முதல் நோக்கமாகப் பாரம்பரியக் கல்வி முறை கொண்டிருக்கிறது. ஆனால், இந்தத் திட்டத்தால் குழந்தைகளின் புத்திக்கூர்மையில், குணநலன்களில் பெரிய முன்னேற்றம் எதுவும் இதுவரை ஏற்பட்டுவிடவில்லையே.
ஆக, நாம் சோதித்துக் கண்டறிய வேண்டியது எதைக் கொடுத்தால் ஒரு குழந்தை சமூகத்துடன் ஒன்றிக் கலைப்பூர்வமாகத் தன்னை வளர்த்துக்கொள்ளும் என்பதைத்தான். நம்முடைய பள்ளிக்கூடத்தின் முன்பாக நிற்கும் சவால், கல்விப் புலத்துக்குப் பங்களிப்பு நல்கும் விதமாகப் பாடத்திட்டத்தை வடிவமைக்க வேண்டும் என்பதே” என்றார் ஜான் டூயி.
கல்வியே வாழ்க்கை
அவருடைய பார்வையில், “கல்வி என்பது வாழ்க்கைக்கான முன்னேற்பாடு அல்ல. கல்வி என்பதே வாழ்க்கைதான்”. அடிப்படையில் தத்துவ அறிஞரும் உளவியலாளருமான டூயியைக் கல்விப் புலத்தில் மாற்றங்கள் கொண்டுவர உந்தித்தள்ளியது உலகளவில் தொழிற்புரட்சி ஏற்படுத்திய தாக்கங்களே. விவசாயத்தை முதன்மைப்படுத்தி இயங்கிக்கொண்டிருந்த உலக மக்கள் தொழிற்புரட்சி ஏற்பட்ட பிறகு, பிழைப்புக்காக நகரங்களை நோக்கி நகரத் தொடங்கினர்.
இதனால் கல்வி அமைப்பிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. வேளாண்மைச் சமூகமாக இருந்தவரையில் குழந்தைகள் வீட்டுவேலையில் இயல்பாகப் பங்கேற்றுவந்தனர். உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, அறம் சார்ந்த பயிற்சிகள் அவர்களுடைய அன்றாடத்தில் கலந்திருந்தன. இதன் வழியாக சுய ஒழுக்கத்தை, தலைமைப்பண்பை, முடிவெடுத்தலை இயல்பாகக் கற்றுத்தேர்ந்தனர்.
ஆனால், தொழில்மயமான, நகரமயமான சமூகச் சூழலுக்குள் கொண்டுவரப்பட்ட குழந்தைகள் குடும்பத்தின் வழிநடத்துதலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டார்கள். அதுவரை பயிலரங்கமாக இருந்துவந்த வீடுகள் இப்போது வெறும் உண்டு, உறங்கும் இடமாக மாற்றப்பட்டுவிட்டன.
வீட்டு வேலைகளுக்கு வேலையாட்கள் அமர்த்தப்படுவதால், குடும்பப் பொறுப்புகளில் பங்கேற்கும் வாய்ப்பு நகரத்துக்குக் குழந்தைகளுக்கு மறுக்கப்படுகிறது. இதன் விளைவாக எதிர்பாராத சூழலில் கற்றதை நடைமுறைப்படுத்த முடியாமல் அவர்கள் திணறிப்போய்விடுகிறார்கள்.
“தகவல்களைச் சேகரிப்பதற்கான வசதி ஏற்படுத்தித் தரப்படுகிறது. ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதற்கான ஆற்றலை இழந்துவிடுகிறார்கள். இந்நிலையில் பள்ளி என்பது, அவரவர் சமூகத்தில் நிகழும் அன்றாட நிகழ்வுகளில் பங்கேற்கும் சமூக மையமாக மாற்றப்பட வேண்டும். அதேநேரத்தில் பழங்காலத்தில் கட்டுப்பெட்டித்தனங்களை அது உதிர்த்துவிட்டுச் செயல்பட வேண்டும்” என்றார் டூயி.
கல்வி வணிகமயமாவதைக் கடுமையாக அவர் எதிர்த்தார். எதிர்காலத்தை மனத்தில் வைத்து குழந்தைமையைப் பறித்தல் கல்வி அல்ல என்றார். வயதுவந்தவர்களின் மறுவடிவமாகக் குழந்தைகளை நடத்தக் கூடாது. குழந்தைகளுக்கு உரிமைகள் உள்ளன. அவர்களுடைய போக்கிலேயே அனுமதித்தாலே வளரிளம் பருவத்தில் தனித்தன்மையை கண்டுகொள்ள முடியும் என்றவர் ‘project method’ என்ற திட்டத்தையும் முன்மொழிந்தார்.
இதன்படி, 6 அல்லது 7 வயது குழந்தைகளின் தனித்துவத்தையும் விருப்பத்தையும் கண்டறிய அவர்கள் முன்பாக வெவ்வேறு தொழில்கள் சார்ந்த பொருட்களை வைக்கும்படி பரிந்துரைக்கிறார். உதாரணத்துக்கு, ஒரு குழந்தை ‘நூல்கண்டை’ தேர்ந்தெடுக்கிறது என்றால், அதற்குப் பருத்தி எப்படித் விளைவிக்கப்படுகிறது, பின்னர் நூலாக எப்படித் தயாரிக்கப்படுகிறது, நூல் நூற்கும் கருவியின் வரலாறு ஆகியவற்றைக் கற்பிக்கலாம்.
இதன் வழியாக அதன் வரலாறு, பூகோளம், அறிவியல் ஆகியவற்றைக் கற்பித்துவிடலாம். இதன் மூலம் சமூகத்துக்கும் பள்ளிக்கும் இடையில் இணைப்பை ஏற்படுத்த முடியும் என்றார். படித்ததைக் கிரகித்துக்கொள்ளுதல் மட்டும் கல்வி அல்ல. சமூக நிகழ்வுகளுக்கு எதிர்வினையாற்றத் தேவையான பண்புகளை வளர்த்துக்கொள்ளுதல்தான் கற்றல்.
அதுவும் சுயநலமின்றி, உதவும் மனப்பான்மையுடன், விமர்சனபூர்வமான அறிவுடன், உத்வேகத்துடன் செயல்பட நம்மை உந்தித்தள்ளுவதே கல்வி என்றார் இந்தக் கல்வி சீர்திருத்தவாதி.
எஜமானர் அல்ல, வழிகாட்டி
டூயியின் கல்விச் சிந்தனையில் இருந்து ஊக்கம் பெற்ற அவருடைய பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவர் சார்லஸ் இலியட்டின் தலைமையில் 1919-ல் ‘பிராக்ரஸிவ் எஜுகேஷன் அசோசியேஷ்ன்’-ஐ தோற்றுவித்தனர். அந்தச் சங்கத்தின் ஏழு கொள்கைகள் இன்றைய அமெரிக்கக் கல்வியின் போக்கைப் பெரிதளவில் தீர்மானித்துள்ளன என்கிறது வரலாறு.
‘பிராக்ரஸிவ் எஜுகேஷனின் 7 கொள்கைகள்’
1. தன்னியல்பிலும் சுதந்திரமாகவும் குழந்தை வளர அனுமதித்தல்.
2. விருப்பப்பட்ட வேலைகளில் மட்டுமே ஈடுபடுத்துதல்.
3. ஆசிரியர் எஜமானர் அல்ல, வழிகாட்டி
4. மாணவர்களின் உடல், மனம், சமூக, ஆன்ம வளர்ச்சியை அறிவியல்பூர்வமாக ஆய்வுக்கு உட்படுத்துதல்
5. உடல்ரீதியான செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தல்.
6. இசை, நடனம், நடிப்பு, விளையாட்டு உள்ளிட்ட பாடத்திட்டத்துக்கு வெளியே உள்ள விஷயங்களில் மாணவர்களுக்கு இருக்கும் ஈடுபாட்டை அவர்களின் குடும்பத்தின் ஒத்துழைப்போடு வளர்த்தெடுத்தல்.
7. ஆய்வுக்கூடப் பள்ளிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்துச் செயலாற்றுவது.
தொடர்புக்கு: susithra.m@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago