அகரத்தில் இருந்து உயர்ந்தெழுந்து சிகரத்தைத் தொட்ட ‘இந்திய ஏவுகணை நாயகன்’, இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். பெருமைகளைக் கடந்து ஓர் ஆசானாக மாணவர்களை ஊக்குவிக்கும் கலந்துரையாடல்களில் என்றுமே கலாம் ஈடுபட்டுவந்தார்.
மதராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் (எம்.ஐ.டி.) 1960-ல் விண்வெளிப் பொறியியல் பட்டம் பெற்றவுடன் விஞ்ஞானியாகத் தன் பணிவாழ்க்கையைத் தொடங்கியவர் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கழித்துக் கல்வி புலத்துக்கே திரும்பினார் என்பது வியப்பளிக்கிறது. குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், சோமாலியாவைச் சேர்ந்த கல்வி - ஆராய்ச்சி நிறுவனங்களில் வருகைப் பேராசிரியர் உள்ளிட்ட கல்வி சார்ந்த பல பொறுப்புகளை அவர் வகித்தார்.
எவரும் சாதிக்கலாம் என்று நிரூபித்துக்காட்டிய கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் மாணவர்களிடம் ஆற்றிய உரைகள், பொன்மொழிகளில் சிலவற்றின் தொகுப்பு:
வாழ்க்கையின் லட்சியம்
அன்பு நண்பர்களே, உங்கள் அனைவரையும் பார்க்கும்போதே உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் மகத்தான மருத்துவர்களை, சிறந்த பொறியாளர்களை, உயரிய சமூகச் செயற்பாட்டாளர்களை, நல்லாசிரியர்களை, மாண்புமிகு நீதிபதிகளை, மிகப் பெரிய அரசியல்வாதிகளைப் பார்க்கிறேன். இந்த இலக்குகளை அடையத் தேவையான பண்புகள் என்ன என்பதை என்னுடைய அனுபவத்தில் இருந்து பகிர்கிறேன்.
நனவான என் மூன்று கனவுகள்: முதலில் இஸ்ரோவில் விண்வெளித் திட்டம், இரண்டாவது நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய டி.ஆர்.டி.ஓ.வில் அக்னித் திட்டம், மூன்றாவது புறநகர் பகுதிகளில் நகர வசதிகளை ஏற்படுத்தித் தரும் திட்டம். இந்த லட்சியப் பாதையில் எதிர்கொண்ட முட்களும் தடங்கல்களும் அநேகம். ஆனாலும் இந்தப் பாதையில் நான் பயணித்தேன். அந்தப் பயணத்தின்போது நான் பெற்ற படிப்பினை இவை:
# வாழ்க்கையில் ஓர் கனவு இருக்குமானால் அது தானாக ஒரு காட்சியாக மாறும், அந்தக் காட்சி லட்சியமாக உருவெடுக்கும்.
# லட்சியம் நிறைவேற உயர்நிலைச் சிந்தனை அத்தியாவசியம்.
# அனைத்து ஆதாரங்களில் இருந்தும் அறிவைச் சேகரிக்க வேண்டும்.
# லட்சியத்தை அடைய முடிவில்லா தொடர் உழைப்பு அவசியம்.
# தோல்விகளுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு வெற்றியைத் தன்னுடைய சகாக்களுக்குப் பகிர்ந்தளிப்பவரே தலைவர்.
கல்வி பெற்ற நாட்களில் நான் பெற்ற சில அனுபவங்களையும் அறிவையும் இத்துடன் பகிர விரும்புகிறேன் அன்பர்களே:
சரியான வயதில் குறிக்கோள்
என்னுடைய குழந்தைப் பருவத்தை நினைத்துப் பார்க்கும்போதெல்லாம், ஐந்தாம் வகுப்பில் எனக்கு பாடம் எடுத்த ஆசிரியர் ஸ்ரீ சிவசுப்பிரமணியம்தான் நினைவுக்கு வருவார். பறவைகள் எப்படிப் பறக்கின்றன என்பதை விளக்கக் கரும்பலகையில் ஓர் பறவையைத் தத்ரூபமாக வரைந்து கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் பாடம் எடுத்தார். வகுப்பின் முடிவில் “பறவை எப்படிப் பறக்கிறது என்பது இப்போது புரிந்ததா?” என்று கேட்டார்.
எனக்குப் புரியவில்லை என்று சொன்னேன். இப்படி நான் சொன்னதும் மற்ற மாணவர்களுக்காவது புரிந்ததா என்று கேட்டபோது அவர்களும் புரியவில்லை, என்றனர். இதைக் கேட்டுக் கொஞ்சமும் சோர்ந்துபோகவில்லை அந்த அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்.
அன்று மாலை எங்கள் வகுப்பின் ஒட்டுமொத்த மாணவர்களையும் ராமேஸ்வரம் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். மணல் குன்றுகளை முட்டி ஆர்ப்பரிக்கும் அலைகளையும் கொஞ்சும் கீச்சல்களுடன் பறந்து செல்லும் பறவைகளையும் அங்குக் கண்டு குதூகலித்தோம். பறவைகள் எவ்வாறெல்லாம் றெக்கை விரித்துப் பறக்கின்றன என்பதைக் கண்கூடாகப் பார்த்து ரசித்தோம்.
பிறகு அவர் ஒரு கேள்வி எழுப்பினார், “இந்தப் பறவைகளின் இன்ஜின் எங்கே இருக்கிறது, அதற்கு எப்படிச் சக்தி கிடைக்கிறது?” தனக்கான சக்தியையும் உந்துதலையும் பறவை தன் வாழ்விலிருந்தே மூட்டிக்கொள்கிறது. இவை அனைத்தையும் வெறும் 15 நிமிடங்களில் எங்களுக்குப் புரியவைத்தார் எங்கள் ஆசிரியர். இதுவே உண்மையான கற்பித்தல் முறை. இப்படிப்பட்ட ஏட்டுப் பாடத்தையும் செயல்வழியையும் நம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் உள்ள பல ஆசிரியர்கள் பின்பற்றுவார்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன்.
- கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள இ.எம்.இ.ஏ கலை அறிவியல் கல்லூரியில் 5 பிப்ரவரி 2008-ல் ஆற்றிய உரை
தோல்வியைக் கையாளும் தலைவன்
இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் செலுத்து வாகனம் எஸ்.எல்.வி.-3 திட்ட இயக்குநராக 1973-ல் பொறுப்பேற்றேன். 1980-ல் ரோகிணி செயற்கைக்கோளைப் புவிச்சுற்றில் நிறுத்தவேண்டும் என்பதே எங்கள் முதல் இலக்கு. இதை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கான நிதியும் ஆயிரக்கணக்கான அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர்களும் எனக்கு கிடைத்தார்கள்.
1979 ஆகஸ்ட் மாதத்திலேயே நாங்கள் தயார் நிலையில் இருப்பதாக நினைத்தேன். திட்ட இயக்குநர் என்ற முறையில் கட்டுப்பாட்டு அறைக்குள் சென்றேன். செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான செயல்பாடுகளை முடுக்கினேன். முதல் கட்டத்தில் எல்லாம் சீராகவே இருந்தது. ஆனால், இரண்டாம் கட்டத்தில் சிக்கல் உருவெடுத்தது. புவிச்சுற்றுக்குள் செல்ல வேண்டிய செயற்கைக்கோள் வங்கக் கடலில் விழுந்தது. மிகப் பெரிய வீழ்ச்சி அது.
இஸ்ரோவின் அன்றைய தலைவர் பேராசிரியர் சதிஷ் தவான் அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். இந்தத் தோல்விக்கான முழுப்பொறுப்பையும் தன் தோளில் சுமந்தார். தன்னுடைய குழுவினர் கடினமாக உழைத்திருக்கிறார்கள். ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இது நேர்ந்துவிட்டது என்றார்.
இன்னும் ஒரே ஆண்டில் தன்னுடைய குழு வெற்றி காணும் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் உறுதி அளித்தார். அன்றைய தேதியில் நான்தான் அந்தத் திட்டத்தின் இயக்குநர். அது என்னுடைய தோல்வி. ஆனால், தோல்விக்கான முழு பொறுப்பை அவரே ஏற்றுக்கொண்டார்.
அடுத்த ஆண்டு ஜூலை 1980-ல் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினோம். ஒட்டுமொத்தத் தேசமும் கொண்டாட்டத்தில் திளைத்தது. மீண்டும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இப்போது, பேராசிரியர் தவான் என்னை அழைத்து, “நீ இன்று பத்திரிகையாளர் சந்திப்பை நடத்து” என்றார்.
அன்று வாழ்வின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பாடத்தை நான் கற்றேன். தோல்வியடைந்தபோது இயக்கத்தின் தலைவன் அதைத் தன்னுடையது என்றான். வெற்றி வந்தபோது அதைக் குழுவிடம் தந்தான். இந்த மகத்தான மேலாண்மை பாடம் எந்தப் புத்தகத்தையும் வாசித்தபோது எனக்குக் கிடைக்கவில்லை. என்னுடைய அனுபவமே அதைக் கற்றுக்கொடுத்தது.
- பிலடெல்பியாவில் நடைபெற்ற வார்டன் இந்தியப் பொருளாதாரக் கூட்டத்தில் 22 மார்ச் 2008-ல் ஆற்றிய உரை
மாணவர்களும் இளைஞர்களும் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி
# சிறிய இலக்கு என்பது குற்றம் என்பதை உணர்கிறேன். என்னுடைய இலக்கு பெரியது. அதை அடைய நான் கடுமையாக உழைப்பேன்.
# நேர்மையாக உழைப்பேன், நேர்மையாக வெற்றி காண்பேன்.
# என் குடும்பத்தின், சமூகத்தின், மாநிலத்தின், தேசத்தின், உலகத்தின் நல்ல உறுப்பினராகத் திகழ்வேன்.
# சாதி, மத, இன, மொழி, தேச வேற்றுமை பாராமல் பிறரைக் காப்பாற்றவோ, மற்றவர் வாழ்க்கையை உயர்த்தவோ முயல்வேன். நான் எங்கிருந்தாலும், ”என்னால் உங்களுக்கு என்ன செய்ய முடியும்?” என்கிற எண்ணம்தான் முதலில் எழும்.
# போதை, புகை, சூதாட்டம் ஆகியவற்றுக்கு ஒருபோதும் அடிமையாக மாட்டேன். இத்தகைய தீயப் பழக்கவழக்கங்களில் மூழ்கிக் கிடப்பவர்களில் ஐந்து பேரையேனும் மீட்டு அவர்கள் வாழ்க்கை நலம்பெற முயல்வேன்.
# நேரம் பொன்னானது என்பதை எப்போதும் நினைவில்கொள்வேன்.
# ஐந்து மரங்களேனும் என்னுடைய சுற்றுப்புறத்தில் நடுவேன். என்னுடைய கிராமும் நகரமும் மாநிலமும் தூய்மையாகத் திகழ்ந்தால் என் பூமியும் பசுமையாகவும் தூய்மையாகவும் சுழலும். அதற்காக நான் உழைப்பேன். 2030-ல் ஆற்றலில் சுதந்திரமான தேசமாக மாறப் பாடுபடுவேன்.
# தேசத்தின் இளைஞராக என்னுடைய அத்தனை செயல்களிலும் வெற்றியடைய உழைப்பேன். மற்றவர்களின் வெற்றியையும் கொண்டாடுவேன்.
# தன்னம்பிக்கை என்னும் ஒளி விளக்கை என் மனதில் ஏற்றுவேன்.
# என் தேசியக் கொடி என் மனதில் பறக்கிறது. என்னுடைய மாநிலத்துக்கும் தேசத்துக்கும் புகழ் சேர்ப்பேன்.
# பிறரைத் தோற்கடிப்பது சுலபம் ஆனால் அவரை வெற்றிகொள்வது சிரமமான விஷயம்.
# கிராமத்தில் இருந்தாலும் நகரத்தில் இருந்தாலும் படித்த குடும்பத்தில் இருந்து வந்தாலும் படிக்காத குடும்பத்தில் இருந்து வந்தாலும் உங்களால் வெற்றியடைய முடியும். யாராக இருந்தாலும் உழைப்பால் வெற்றியடையலாம்.
# கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை, கனவு மட்டும் காண்பவர்கள்தான் தோற்கிறார்கள்.
# நான் சிகரத்தை நோக்கிப் பயணித்தேன். ஆனாலும் சகலப் பகுதிகளிலும் நடைபோட்டுக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தேன். நான் நீண்ட தொலைவைக் கடக்க வேண்டியிருந்தது, இருந்தாலும் நான் அவசரப்படவில்லை. சின்னச் சின்ன அடிகளாக, ஒன்றை அடுத்து இன்னொரு அடி – அதே நேரத்தில் ஒவ்வொரு அடியையும் சிகரத்தை நோக்கி எடுத்துவைத்தேன்.
# நாம் அனைவருக்கும் ஒரே மாதிரித் திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அனைவருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன.
# நீங்கள் வெற்றி பெற்றவர்களின் சரித்திரங்களைப் படிக்காதீர்கள். அவற்றில் இருந்து வெறும் தகவல்களை மட்டுமே பெற முடியும். தோல்வி பெற்றவர்களின் சரித்திரங்களைப் படியுங்கள். அவற்றிலிருந்து வெற்றிக்கான வாய்ப்புகளை அறிந்துகொள்ளலாம்.
# கறுப்பு நிறத்தை சகுனத்தடையாக உணர்கிறோம். ஆனால், ஒவ்வொரு கறுப்பு நிறக் கரும்பலகைதான் மாணவர்கள் வாழ்வில் ஒளியேற்றுகிறது.
# நாட்டின் மிகச்சிறந்த, திறமை மிக்க மூளைகள் வகுப்பறையின் கடைசி பெஞ்சில்தான் இருக்க வாய்ப்பு அதிகம்.
# ஒரு நல்ல புத்தகம் ஆயிரம் நண்பர்களுக்குச் சமம். ஆனால், ஒரு நல்ல நண்பன் ஒரு நூலகத்துக்குச் சமமானவன்.
# இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கையில்தான் உள்ளது.
# உன் வாழ்வினுள் வரும் அனைத்து சங்கடங்களும் உன்னை அழிக்க வரவில்லை, உன் திறமையையும் உள்மனச் சக்தியையும் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை அளித்துச் செல்கிறது. சவாலுக்கே தெரிவியுங்கள் நீங்களும் வீழ்த்தமுடியாத ஒரு சவாலானவர் தான் என்று.
முக்கிய செய்திகள்
கல்வி
18 hours ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago
கல்வி
9 days ago
கல்வி
10 days ago
கல்வி
11 days ago
கல்வி
11 days ago