போட்டித் தேர்வு வழிகாட்டி: ஆட்சியராகவும் காந்தி அவசியம்!

By செல்வ புவியரசன்

போட்டித்தேர்வுக்கு தயாராகிற மாணவர்கள் வரலாற்றை அதிலும் விடுதலைப் போராட்ட வரலாற்றை முதன்மைக் கவனம் கொடுத்து படிக்க வேண்டும். இந்திய விடுதலைப் போராட்டம் என்றால் காந்தி தவிர்க்க முடியாதவர் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

காந்தியின் ஆளுமையை வெறும் விடுதலைப் போராட்டத் தலைவராக மட்டும் சுருக்கிவிட முடியாது. தொழிற்சங்கத் தலைவராக, தனிமனித ஒழுக்கவாதியாக, சமய நல்லிணக்கம் பேணியவராக, பத்திரிகையாளராக, மாற்றுப் பொருளாதார சிந்தனை கொண்டவராக, அரசியலமைப்புச் சிந்தனையாளராக அவரது ஆளுமை பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. காந்தியின் கொள்கை யோடு மாறுபடுபவர்கள்கூட அவரை முழுமையாக மறுப்பதில்லை. சுருக்கமாகச் சொன்னால் ‘இந்தியாவின் மனசாட்சி’ என்று அவரைச் சொல்லலாம்.

அரசின் முக்கியப் பொறுப்புகளை வகிப்பதற்காக போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அவரைப் பற்றி அறிந்து வைத்திருப்பதுதானே முதல் தகுதி. எனவே எந்தவொரு போட்டித் தேர்விலும் காந்தியைப் பற்றி ஒரு கேள்வியை நிச்சயம் எதிர்பார்க்கலாம். ஒருவேளை நேரடியாக அவரைப் பற்றிய கேள்வி இல்லையென்றால் ஏதோ ஒரு கேள்வியில் அவர் முகம் காட்டாமல் மறைந்திருப்பார். மிகச் சில வினாத்தாள்கள் மட்டுமே விதிவிலக்காக இருக்கும்.

ஐ.ஏ.எஸ். தேர்வில் காந்தி

கடந்த இருபது ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ். முதனிலைத் தேர்வுகளில் காந்தியைப் பற்றி கேட்கப்பட்ட கேள்விகளைத் தொகுத்துப் பார்ப்போம்.

# ஜான் ரஸ்கின் எழுதிய ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ (Unto this #ast), காந்தியடிகளின் வாழ்க்கையை மாற்றியமைத்த புத்தகம். அதிலிருந்து அவர் பெற்ற செய்தி: தனிமனிதனின் நன்மையானது சமூக நன்மையில் அடங்கியிருக்கிறது.

# அகமதாபாத் டெக்ஸ்டைல் அசோசியேஷனை தொடங்கியவர்: மகாத்மா காந்தி

# இந்தியாவில் மகாத்மா காந்தியின் முதல் சத்தியாகிரகம் நடந்த இடம்: சம்பாரண்

# வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது காந்தி விடுத்த வேண்டுகோள்: சமஸ்தான அரசுகள், அவர்களது குடிமக்களின் இறையாண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

# காந்தியின் சத்தியாக்கிரகங்களில் அவருடன் இணைந்து போராடியவர்கள்: சம்பாரண் - ராஜேந்திரபிரசாத், அகமதாபாத் மில் தொழிலாளர்கள் போராட்டம்- மொரார்ஜி தேசாய், கேதா- வல்லபாய் படேல்.

# இந்தியப் பிரிவினைக்கு மாற்றாக மவுண்ட் பேட்டனிடம் காந்தி அளித்த பரிந்துரை: அரசை தலைமையேற்று நடத்த ஜின்னாவை அழைக்கவேண்டும்.

# 1930-ம் ஆண்டு மகாத்மா காந்தி சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்கிய இடம்: சபர்மதி

# ‘ஹிந்த் ஸ்வராஜ்’ புத்தகத்தை எழுதியவர்: காந்தி

# ஒத்துழையாமை இயக்கத்தின் நோக்கங்கள்: இந்து முஸ்லிம் ஒற்றுமை, பிரிட்டிஷ் ஆட்சியின் மீதான மக்களின் அச்சத்தை நீக்குதல்

# சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரஸ் கட்சியைக் கலைக்க வேண்டும் என்று கூறியவர்: மகாத்மா காந்தி

# 1934-ல் பிரிட்டிஷ் ஆட்சிக்கும் மகாத்மா காந்திக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட பூனா ஒப்பந்தம்: ஹரிஜன்களுக்கு இட ஒதுக்கீட்டுடன் கூடிய கூட்டுத்தொகுதி முறை

# காந்தி 1922-ல் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியதற்கு காரணம்: சௌரி சௌரா சம்பவம்

# அனைத்திந்திய அளவில் காந்தி தொடங்கிய முதல் சத்தியாக்கிரகம்: ரௌலட் சட்ட எதிர்ப்பு

# மகாத்மா காந்தி 1932-ல் சாகும்வரை உண்ணாவிரதத்தை அறிவித்ததற்கு காரணம்: ராம்சே மெக்டொனால்டு அறிவித்த வகுப்புவாரி தீர்வு

# காந்தியடிகள் கேதா சத்தியாகிரகத்தை நடத்த காரணம்: வறட்சி ஏற்பட்டபோதிலும் நிர்வாகம் நிலவரியை ரத்து செய்யாதது.

டி.என்.பி.எஸ்.சி.யில் காந்தி

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிற தேர்வுகளில் மட்டுமில்லை. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிற தேர்வுகளிலும்கூட காந்தியைப் பற்றிய கேள்விகள் தொடர்ந்து கேட்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளில் நடந்த தேர்வு களில் கேட்கப்பட்ட கேள்விகள் இவை...

காந்தியைப் பற்றி, ‘கௌதம புத்தருக்கடுத்து சிறந்த இந்தியர், ஏசு கிறிஸ்துவுக்குப் பின்னர் உலகத்தில் சிறந்த மனிதர்’ என்று கூறியவர் : ஜே.ஹெச். ஹோம்ஸ்.

‘நான் ஆங்கிலத்துக்கு எதிரானவன் அல்ல, நான் ஆங்கிலேயர்களுக்கு எதிரானவன் அல்ல, நான் எந்த அரசாங்கத்திற்கும் எதிரானவன் அல்ல, ஆனால், உண்மைக்குப் புறம்பானவற்றிற்கு எதிரானவன்’ என்று தெரிவித்தவர் : மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.

# காந்தியை படுகொலை செய்தவர் : நாதுராம் கோட்சே

# கிராமப்புற பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அடிப்படை: காந்தியக் கோட்பாடுகள்

# ‘இந்தியன் ஒப்பினியன்’ பத்திரிகையை நடத்தியவர்: காந்தியடிகள்

# காந்தி சகாப்தம் என்று அழைக்கப்படுவது: 1920-1947

# புதுப்பாளையத்தில் காந்தி ஆசிரமம் அமைத்தவர்: ராஜாஜி

# தாகூருக்கு முன்பே 1910-ம் ஆண்டில் காந்தியை 'மகாத்மா' என்று அழைத்தவர்: பாரதியார்

# நவஜீவன் பத்திரிகையை நடத்தியவர்: மகாத்மா காந்தி

காந்தியைப் பற்றிய இப்படி நேரடி கேள்விகள் ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம் பெரும்பாலான கேள்விக்கான நான்கு பதில்களில் காந்தியும் ஒருவராக இருக்கிறார். எனவே காந்தியைப் பற்றி முழுமையாக அறிந்து வைத்திருந்தால் இரண்டு விதங்களில் சரியான விடைகளைக் கண்டறிய முடியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE