சென்னை நகரத்தின் அடையாளங்களில் ஒன்று எழும்பூர் ரயில் நிலையம். அதன் எதிரே உணவகங்கள், தங்கும் விடுதிகள், பெட்டிக்கடைகள் என்று எப்போதும் பரபரப்பான சூழலை பார்க்க முடியும். அவ்வளவு பரபரப்புக்கு இடையிலும் ரயில் நிலையத்தின் எதிரே அமைதியே உருவாக நிற்கிறது தமிழ்நாடு ஆவணக் காப்பகம். ரயில் நிலையம் சென்னையின் அடையாளம் என்றால், இந்த ஆவணக் காப்பகமோ தென்னிந்திய வரலாற்றின் கருவூலம். ஆனால், அதைப் பற்றி யாரும் அக்கறைப்படுவதாகத் தெரியவில்லை.
1909-ம் ஆண்டிலிருந்து எழும்பூரில் ஆவணக் காப்பகம் செயல்பட்டு வருகிறது. தற்போது அந்தக் கட்டிடத்துக்கு வயது 109. ‘மெட்ராஸ் ரெக்கார்டு ஆபீஸ்’ என்றுதான் முதலில் பெயர் சூட்டப்பட்டிருந்தது. 1973-ல்தான் ‘தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி’ என்ற பெயர் மாற்றப்பட்டது.
கல்வியின் வரலாறு எழுதப்பட்ட இடம்
ஆவணக் காப்பகத்தின் ஆதி வரலாறு இன்னும் நீண்டது. 1805-ம் ஆண்டிலிருந்தே புனித ஜார்ஜ் கோட்டையின் ஒரு பகுதியில் சிறிய அளவில் ஆவணக் காப்பகம் இயங்கிவந்தது. ஆவணக் காப்பகத்துக்கு விரிவான இடம் வேண்டும் என்ற காரணத்தால் எழும்பூரில் தனிக் கட்டிடம் கட்டப்பட்டது. இந்த ஆவணக் காப்பகத்தில் 1670-ம் ஆண்டிலிருந்து பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆவணங்கள், தலைமைச் செயலகத்தின் அனைத்துத் துறைகளிலும் உள்ள முக்கிய ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டுவருகின்றன.
இந்த ஆவணக் காப்பகத்திலிருந்து பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில்தான் தரம்பால் 'அழகிய மரம்' புத்தகத்தை எழுதினார். ஆங்கிலேயரின் வருகைக்கு முன்பே இந்தியாவில் கல்வி முறை சிறந்து விளங்கியதை எடுத்துக்காட்டினார். ‘கிராமராஜ்ய அமைப்புக்கு முன்னோடியான சமூகங்கள்’ என்ற பெயரில் பல கிராமங்கள் ஒன்றிணைந்து தமக்கென்று தனி நிர்வாக அமைப்பைக் கொண்டிருந்ததை, இங்கிருந்து பெற்ற தஞ்சை மாவட்ட நிர்வாக ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டுதான் தரம்பால் எழுதினார்.
ஆய்வாளர்களின் போதி மரம்
1930-ம் ஆண்டிலிருந்து ஆராய்ச்சியாளர்களும் ஆவணங்களைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டது. அதன் காரணமாகவே, சென்னைப் பல்கலைக்கழகத்தால் இக்காப்பகம் வரலாற்று ஆராய்ச்சி மையமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து மட்டுமல்ல, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களிலிருந்தும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இருந்தும் ஆய்வு மாணவர்கள் இந்த ஆவணக் காப்பகத்துக்கு வருகிறார்கள்.
சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம் என்று தென்னிந்திய வரலாற்றை விரிவாக அறிந்துகொள்வதற்கான வரலாற்றுக் கருவூலம் இந்த ஆவணக் காப்பகம். ஆனால், இதை மட்டுமே நம்பி ஆராய்ச்சித் தலைப்புகளை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள், எட்டாண்டுகளுக்கும் மேலாக ஆய்வுப் பணியைத் தொடர வேண்டியிருக்கிறது என்ற குறைதான் நிவர்த்தியாகாமல் தொடர்கிறது. ஆய்வு மாணவர்களுக்கு உதவும்வகையில் அவர்களுக்குத் தேவையான அரசு ஆவணங்களை எடுத்துக்கொடுப்பதில் ஊழியர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. நாளைக்கு நான்கைந்து ஆவணங்களை மட்டுமே படிக்க முடியும் என்றால், ஆய்வு மாணவர்கள் எப்படிக் குறிப்பிட்ட காலத்துக்குள் ஆய்வுப் படிப்பை முடிக்க முடியும்?
ஆவணக் காப்பகத்திலுள்ள நூலகத்தில் இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. ஆவணங்களைப் பெறுவதில் உள்ள சிரமங்களோடு ஒப்பிடுகையில் நூலகத்தைப் பயன்படுத்துவது பரவாயில்லை. ஆனாலும், இப்போதும் வரலாற்று ஆராய்ச்சி என்ற பெயர் ஆவணக் காப்பகத்தோடு ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வளாகத்தில் பணியாற்றுபவர்களுக்கு வரலாற்றுப் படிப்பு ஒரு தகுதியாக இல்லை என்பதும் ஒரு காரணம்.
உயர்தர காகிதக் கொள்கை
1934–ல் தொடங்கி 1958 வரைக்கும் இந்த ஆவணக் காப்பகத்தின் காப்பாளராக இருந்தவர் பி.எஸ்.பாலிகா. லண்டனில் ஆராய்ச்சிப் படிப்பை முடித்துவிட்டு, லண்டன் பொது ஆவணக் காப்பகத்தில் பயிற்சி பெற்றவர். வரலாற்று ஆராய்ச்சி, ஆவணப் பாதுகாப்பு குறித்து தேசிய அளவில் தாக்கங்களை உருவாக்கிய தொலைநோக்காளர். இவர் கொடுத்த அழுத்தங்களின் காரணமாகவே அரசு ஆவணங்களை உயர்தரமான காகிதங்களில் மட்டும்தான் அச்சடிக்க வேண்டும் என்ற நடைமுறை உருவானது.
பிரிட்டிஷ் ஆவணங்களை முறைப்படுத்தி 200 தொகுதிகளாகப் பதிப்பித்தவர் அவர். சென்னையில் தேசியவாதமும் சுதந்திரமும் என்ற தலைப்பில் ‘தி இந்து’ ஆங்கில இதழில் எழுதிய கட்டுரையை அண்ணா தனது ’ஹோம் லாண்ட்’ பத்திரிகையில் பாராட்டி எழுதியிருக்கிறார். பாலிகாவுக்குப் பிறகு, ஆவணப் பாதுகாப்பில் அக்கறையும் திறமையும் உள்ள அதிகாரி நியமிக்கப்படவில்லை.
ஆவணக் காப்பகத்தின் ஆணையராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிப்பதே வழக்கமாக இருக்கிறது. ஆவணக் காப்பக ஆணையராகப் பொறுப்பேற்கும் அதிகாரிகளோ தாங்கள் ஏதோ காத்திருப்புப் பட்டியலில் இருப்பதுபோலவே நடந்துகொள்கிறார்கள். கடந்த காலத்தின் வரலாற்றுப் பதிவுகளைப் பாதுகாக்க வேண்டியதும் வருங்காலத்துக்கான வரலாற்றுப் பதிவுகளை உருவாக்க வேண்டியதும் ஆட்சிப் பணியின் ஒரு பகுதிதான் என்பதை அதிகாரிகள் பொருட்படுத்துவதில்லை.
எப்போதும் பரபரப்பு இல்லாமல் இயங்கிக்கொண்டிருக்கும் (?) அந்தக் கட்டிடத்தின் முன்னால் பெருங்கூட்டம் குழுமி நிற்பதை சென்ற ஆண்டின் ஒரு நாளில் பார்க்க முடிந்தது. ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு நடக்கிறது என்றார்கள், வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றவர்கள். எட்டிப் பார்த்தேன்.
வளாகத்தின் வெளியே இருந்த அறிவிப்புப் பலகையின் மீது சென்னை உயர் நீதிமன்றம் குற்றவியல் ஆவணக் காப்பகம் என்று எழுதி ஒட்டியிருந்தார்கள். சென்னை உயர் நீதிமன்றத்துக்கும் குற்றவியல் ஆவணக் காப்பகத்துக்கும் என்ன சம்பந்தம்? கதை வசனம் எழுதுபவர்களின் வரலாற்று அறிவு அந்த அளவுக்குத்தான் இருக்கிறது.ஆவணக் காப்பகத்தை இதைவிடத் தவறாக சித்தரிப்பது கடினம்.
முக்கிய செய்திகள்
கல்வி
9 hours ago
கல்வி
9 hours ago
கல்வி
14 hours ago
கல்வி
14 hours ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
10 days ago
கல்வி
10 days ago