மனிதரின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது உணவாகும். இந்த உணவைத் தயாரிப்பது, பரிமாறுவது, உபசரிப்பது உள்ளிட்டவற்றை அடக்கிய துறையானது பெரும் வருமானம் ஈட்டுவதாக வளர்ந்து நிற்கிறது. உணவு சார்ந்த தொழிலும் அதற்குத் தயார்படுத்தும் படிப்புகளும் எக்காலத்திலும் வரவேற்பு கொண்டவை.
கேட்டரிங், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், ஹாஸ்பிட்டாலிட்டி, கல்னரி என ஏராளமான பிரிவுகளுடன் சமைத்தல் தொடர்பான படிப்புகள் வளர்ந்துள்ளன. நட்சத்திர உணவகப் பணியில் தொடங்கி, சுயமான தொழில் முனைவோர் வரை பணி வாழ்க்கையைத் தீர்மானித்துக்கொள்ளலாம்.
எளிமையான பாடத்திட்டத்துடன், ஏட்டுக் கல்வியைவிடச் செயல்திறனுக்கே முக்கியத்துவம் என்பதால் கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புகளை எவரும் படிக்கலாம். பத்தாம் வகுப்பு தேறாதவரும் இவற்றில் சேர்ந்து சான்றிதழ் தகுதி பெற வாய்ப்புண்டு. கை நிறையும் ஊதியத்துடன் பணியில் கிடைக்கும் மனநிறைவும் இத்துறையின் வரப்பிரசாதங்கள்.
சமையலுக்குப் படிப்பா என ஒரு காலத்தில் அறியாமையுடன் மதிப்புக் குறைவாக ஒதுக்கப்பட்ட படிப்புகள், இன்று அகில இந்திய நுழைவுத் தேர்வெழுதப் போட்டியிடுவதும், படித்து முடித்தவர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் லட்சங்களில் சம்பாதிப்பதுமாகக் கண்முன் மாற்றங்களாக வளர்ந்து நிற்கின்றன.
கேட்டரிங், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் சார்ந்த படிப்புகள், அவை தரும் வேலை வாய்ப்புகள் ஆகியவை குறித்தான வழிகாட்டுதலை வழங்குகிறார் பிரபல சமையல் நிபுணரும், சமையற்கலை ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்குப் பதக்கங்கள் பெற்றுத்தந்தவருமான உமாசங்கர் தனபால்:
படிப்புகள் பலவிதம்
சமையல் கலை, பரிமாறும் கலை, இல்லப் பராமரிப்பு, வரவேற்பு மற்றும் உபசரிப்பு ஆகிய நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டு அரசுக் கல்வி நிறுவனங்களின் பாரம்பரிய பாடத்திட்டம் அமைந்திருக்கும். அங்கு பயிலும் மாணவர் இவையனைத்தையும் படிப்பதுடன், இவற்றில் தான் விரும்பிய ஒரு துறையில் எதிர்காலத்தை அமைத்துக்கொள்வார். தற்போது தனியார் கல்வி நிறுவனங்களின் பரவலால், இந்த நான்கில் ஏதேனும் ஒரு துறையை மட்டுமே முழுமையாகப் பயில்வதும், அது சார்ந்த துறையில் பணியை அமைத்துக்கொள்வதும் நடக்கிறது.
சென்னை தரமணியில் மத்திய அரசின் நிறுவனமும் திருச்சி துவாக்குடியில் மாநில அரசின் பயிற்சி நிறுவனமும் அமைந்துள்ளன. இவற்றின் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு அவசியம். இங்கு கேட்டரிங், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் சார்ந்த 3 வருட டிப்ளமோ, பட்டப் படிப்புகளை படிக்கலாம்.
படிப்பு சுமையல்ல
தற்போது ஐடிஐ பாணியிலான சான்றிதழ் வழங்கும் தொழில் படிப்புகள் பரவலாகி வருகின்றன. பத்தாம் வகுப்பில் தவறியவரும் இதில் சேர்ந்து பயிலலாம் என்பதால், பள்ளிக் கல்வியில் தடுமாறியவர்களும் தங்களது தனித்திறனை வளர்த்துக்கொண்டு இத்துறையில் ஜொலிக்க முடியும்.
பாடத்திட்டத்தில் செய்முறையே பிரதானமாக இருக்கும். சொற்பமான எழுத்துத் தேர்வும்கூட செய்முறை அறிவையே அடிப்படையாகக் கொண்டது என்பதால், இந்த மாணவர்களுக்குப் படிப்பு ஒரு சுமையல்ல.
படிப்பைவிடத் திறனே பேசும்
ஒருவர் படித்தது அரசு அல்லது தனியார் கல்வி நிறுவனமானாலும் சரி, அவர் பெற்றது டிகிரி, டிப்ளமோ, சான்றிதழ் என எதுவானாலும் சரி, இந்தத் தகுதிகளைவிட அவரது துறை சார்ந்த செய்முறைத் திறனே அவரது வேலைவாய்ப்பைத் தக்கவைக்கும். அதேபோல அதற்கடுத்த பதவி, ஊதிய உயர்வுகளும் தனித்திறமையே அடிப்படை.
எனவே, கேட்டரிங் துறை மாணவர்கள் தங்களுக்கெனச் சிறப்புத் திறமைகளையும் தனி அடையாளத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்குத் துறையின் மீதான ஆத்மார்த்த ஈடுபாடும் ஆர்வமும் விடாமுயற்சியும் பயிற்சியும் கைகொடுக்கும்.
பட்டை தீட்டிக்கொள்ளலாம்
கேட்டரிங் படிப்புகள் வெறுமனே சமையலறை, பரிமாறும் மேஜையுடன் முடிந்துவிடுவதல்ல. படிக்கும் காலத்தில் கூடுதலாகப் பல்வேறு திறமைகளை வளர்த்துக்கொள்வது பின்னாளைய வேலைவாய்ப்புகளுக்கு உரம் சேர்க்கும். இந்தக் கூடுதல் திறன்களில் ஆங்கில அறிவு மிகவும் அவசியமானது.
விரும்பினால் இந்திய, சர்வதேச மொழிகளைக் கற்றுக்கொள்ளலாம். கம்ப்யூட்டர் இயக்குதல், இணையத்தில் உலாவுதல், துறை சார்ந்த கணினி பயன்பாட்டைக் கற்றுக் கொள்ளுதலும் அவசியம். இவை பின்னாளில் நட்சத்திர விடுதிகள், சொகுசு கப்பல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் தம்மை உயர்த்திக்கொள்ள உதவும்.
விரியும் வேலைவாய்ப்புகள்
கேட்டரிங், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், ஹாஸ்பிடாலிட்டி உள்ளிட்ட படிப்புகளை முடிக்கும் அனைவருக்கும் நட்சத்திர விடுதிகளில் வேலைவாய்ப்பு கிடைத்து விடாது. ஆனால், அவற்றுக்கு நிகராகப் பல்வேறு வேலைவாய்ப்புகள் இன்று வளர்ந்து வருகின்றன. தம்முடைய திறமை, ஆர்வம் ஆகியவற்றைப் பரிசீலித்து, இதர கிளைத் துறைகளில் வளர்த்துக் கொள்ளலாம்.
உணவு தணிக்கையாளர்: முன்னணி உணவு விடுதிகள். பாக்கெட் செய்யப்படும் உணவு தயாரிப்பகங்களில் உணவுத் தணிக்கையாளர் பணி முக்கியமானது. உண்ணும் பொருளின் தரம் அதற்கான மூலப்பொருட்களின் சேர்க்கை அவற்றின் விகிதம் போன்றவற்றைப் பல்வேறு கட்டங்களில் இவர் ஆராய்ந்து கண்காணிப்பார். வழக்கமான கேட்டரிங் சார்ந்த படிப்புகளுடன் மேலாண்மை சார்ந்த படிப்புகளை முடித்தவர்கள் இதில் பணி புரியலாம்.
உணவு புகைப்படத் தொழில்: தயாரிக்கும் உணவை நுகர்வோரிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதிலும், அவர்களிடம் ஆர்வத்தை விதைப்பதிலும் புகைப்படக்காரர் பணி முக்கியமானது. வழக்கமான தொழில்முறைப் புகைப்படக்காரரைவிட, புகைப்படக்கலையில் ஆர்வமுள்ள சமையல்கலை வல்லுநரின் படைப்பு சிறப்பாக இருக்கும். எனவே புகைப்படம், வீடியோ கலைகளில் ஆர்வமுள்ளவர்கள் இந்தப் பணியில் இறங்கலாம்.
உணவு கட்டுரையாளர்: அச்சு, காட்சி மற்றும் மின்னணு என அனைத்து ஊடகங்களிலும் உணவு தொடர்பான கட்டுரைகள் மற்றும் பதிவுகள் தவிர்க்க முடியாதவை. இந்தப் பகுதிகளில் வழக்கமான பத்திரிகை உலகம் சார்ந்தவரைவிட, சமையல் கலை அறிந்த வல்லுநரை நேரிடையாக ஈடுபடுத்துவது அதிகரித்து வருகிறது. எனவே, புகைப்படத் தொழில் போலவே, எழுத்தார்வம் அல்லது உணர்வுடன் உணவைச் சிலாகிக்கும் திறமை வாய்த்தவர்கள் இத்துறையில் முழு நேரமாகவோ பகுதி நேரமாகவோ ஈடுபடலாம்.
சங்கிலித் தொடர் உணவகங்கள்: நட்சத்திர விடுதிகளுக்கு அடுத்தபடியாக இந்தச் சங்கிலித் தொடர் உணவகங்கள் தற்போது பிரபலமடைந்து வருகின்றன. தாய், சைனீஸ், பிரெஞ்சு எனப் பன்னாட்டுப் பின்னணியிலும், பஞ்சாபி, தலப்பாக்கட்டி என உள்நாட்டு வகையிலும் முன்னணியில் இருக்கும் தொடர் உணவகங்கள் அதிகப்படி வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன. உணவு மட்டுமன்றி தின்பண்டங்கள், அசைவத் தயாரிப்புகள் சார்ந்தும் மூல தயாரிப்பாளரிடம் பதிவுபெற்று உங்கள் பகுதியில் அவர்களின் கிளையை ஆரம்பித்து வருவாய் ஈட்டலாம்.
தொழில் முனைவோர் ஆகலாம்: சொந்தமாக உணவகமோ சிறப்பு நொறுக்குத் தீனியையோ தயாரித்து விற்பதன் மூலம் உள்ளூரில் சொந்த உழைப்பில் ஒரு தொழில் முனைவோராக முன்னேறலாம். இதற்கு வங்கிக் கடனுதவி, பணியாட்கள் போன்றவற்றுடன் சந்தைப் போட்டிக்கு ஏற்றவாறு வித்தியாசம் காட்டுவதன் மூலமாகவும் தனித்து நிற்கலாம். உதாரணத்துக்குத் தற்போது பிரபலமாகும் ஆர்கானிக் உணவுப் பொருட்களைத் தயாரித்து சந்தைப்படுத்துவதைச் சொல்லலாம்.
உணவுத் தயாரிப்பு தொடர்பான பிற பணி வாய்ப்புகளையும் ஒரே இடத்தில் கிடைக்குமாறு செய்யலாம். உதாரணத்துக்கு ஈவென்ட் மேனேஜ்மெண்ட், தங்கும் விடுதிகள் மற்றும் விமான, ரயில் முன்பதிவுகள், சுற்றுலா வழிகாட்டி போன்றவற்றை ஒருங்கிணைத்து வழங்கலாம்.
இதர வாய்ப்புகள்: இதர துறைகளைப் போன்றே கல்வி நிறுவனங்களின் பயிற்சியாளர், ஆசிரியர் பணியிடங்கள் இதிலும் உண்டு. நட்சத்திர விடுதிகளுக்கு இணையாகப் பெரும் தொழிற்சாலைகள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், கப்பல், விமான சேவைகளிலும் கேட்டரிங் துறை மாணவர்கள் பணி வாய்ப்பு பெற முடியும். காய்கனி செதுக்கும் கலை என்பது தற்போது கேட்டரிங் துறையின் பிரசித்தி பெற்ற கலையாக வளர்ந்து வருகிறது. கேட்டரிங் படிப்பவர்கள் தங்கள் ஓவியம், சிற்பக்கலை சார்ந்த ஆர்வம், திறமையை ஒருமுகப்படுத்தினால் இந்த வகையில் வளரலாம்.
thurai 2jpgசிறந்த நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க..
ஏனைய கல்வித் துறைகளைப் போன்றே சமையல்கலைப் பயிற்சியிலும் தரமற்ற கல்வி நிறுவனங்கள் புற்றீசலாகப் பெருகிக் கிடக்கின்றன. இதில் நல்லது எது, அல்லாதது எது என உரசி அடையாளம் காண சற்று மெனக்கெட வேண்டும். வெறுமனே விளம்பரங்களை வைத்தே ஒரு கேட்டரிங் பயிற்சி நிறுவனத்தை எடைபோடக் கூடாது.
விளம்பரத்தில் சொன்ன அம்சங்கள் சரிதானா என நேரில் சென்று சரிபார்க்க வேண்டும். குறைந்தது 5 நிறுவனங்களையாவது நேரில் ஆராய்ந்து, அவற்றில் சிறப்பான ஒன்றை இறுதி செய்யலாம். செய்முறைப் பயிற்சி சார்ந்த படிப்பென்பதால், கல்வி நிறுவனத்தில் அதற்கான கட்டுமானம் இருக்கிறதா என முதலில் பார்க்க வேண்டும்.
அடுத்ததாக அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்கள் அங்கு பணிபுரிய வேண்டும். வணிக நோக்கிலான பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் தங்களது முன்னாள் மாணவர்களை வைத்தே ஒப்பேற்றுகின்றன. அனுபவமும் அறிவும் மிக்க மூத்த ஆசிரியர்களால் மட்டுமே செய்முறைப் பயிற்சிகளில் சிறப்பான வழிகாட்டுதல்களை வழங்க முடியும். இறுதியாகத் துறை சார்ந்த அரசு இணையதளம் வாயிலாகக் குறிப்பிட்ட கல்வி நிறுவனம் முறையான அங்கீகாரம், அனுமதியைப் பெற்றிருக்கிறதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
கல்வி
4 hours ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago
கல்வி
10 days ago
கல்வி
10 days ago
கல்வி
10 days ago