பிளஸ் டூவுக்குப் பிறகு: கனிந்துவரும் கணித வாய்ப்புகள்

By இரா.சிவராமன்

இத்தாலி நாட்டு அறிவியல் மேதை கலீலியோ, “இப்புவி கணித மொழியால் எழுதப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டார். அதேபோல, ஜெர்மன் நாட்டு கணித மேதை கவுஸ் ‘கணிதம் அறிவியலின் இளவரசி’ என்றார். இவ்விருவரும் கணிதத்தைத் தவிரப் பல்வேறு அறிவியல் துறைகளிலும் மகத்தான சாதனைகளைப் புரிந்தவர்கள். ஆனால், கணிதத்துக்கு எதற்காக இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

இன்றைய சூழலில் மருத்துவத் துறை உட்பட அனைத்துத் துறைகளிலும் கணிதம் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கும்போது கலீலியோவும் கவுஸூம் கூறியது முற்றிலும் உண்மை எனத் தெரிகிறது. இப்படிப்பட்ட தன்மைகொண்ட கணிதத்தை எங்கெல்லாம் படித்துப் பயன் பெறலாம் எனக் காண்போம்.

பிளஸ் டூ முடித்தவர்கள் கணிதவியல் பாடத்தில் இளங்கலை பட்டம் பயிலலாம் என்பது பொதுவாக எல்லோருக்குமே தெரிந்திருக்கும். ஆனால் அதையும் தாண்டி எவ்வளவோ படிப்புகள் கணிதப் புலத்தில் இருக்கின்றன. அவற்றைப் படிப்பவர்களுக்கு பிரகாசமான எதிர்காலமும் உள்ளது.

சிறப்பான பட்டம்

பெங்களூருவில் உள்ள இந்தியப் புள்ளியியல் நிலையம் (ISI), சென்னையில் உள்ள சென்னை கணிதவியல் நிறுவனம் (CMI) ஆகிய கல்விக்கூடங்களில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்றுக் கணிதத்தில் இளங்கலை படிக்கலாம். இந்த இரண்டு நிறுவனங்களிலும் கணித பட்டப்படிப்பை முடிப்பதென்பது இந்திய அளவில் மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. கணிதப் பாடத்தில் B.S. எனும் நான்கு ஆண்டு பட்டப் படிப்பை ஐ.ஐ.டி கான்பூர், ஐ.ஐ.எஸ்.சி. பெங்களூரு ஆகிய கல்வி நிலையங்களில் படிக்கலாம்.

அதேபோல பிளஸ் டூ-வுக்குப் பிறகு ஐந்து ஆண்டுகள் கொண்ட ஒருங்கிணைந்த கணித முதுகலை பட்ட படிப்பில் (Integrated M.Sc.) சேரலாம். ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம், தேஜ்பூர் பல்கலைக்கழகம் இப்படிப்புக்கு உகந்தவை. வேறு சில நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், தனியார் பல்கலைக்கழகங்களும் இந்தியாவில் பல்வேறு இடங்களில் இந்த ஐந்தாண்டு பட்டப்படிப்பை வழங்குகின்றன.

ஊக்கத்தொகையும் பணியும்

கணிதத்தில் இளங்கலை படிப்பை முடித்த பிறகு தமிழக அரசு நடத்தும் தமிழகப் பொது நுழைவுத் தேர்வு (TANCET) எனும் தேர்வு மூலம் M.C.A. அல்லது M.B.A. அரசு கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் படிக்கலாம். இப்படிப்புகளை முடித்தால் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களில் வேலை கிடைக்கும். கணிதத்தில் இளங்கலை படிப்பு முடித்தவர்கள் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிலையங்களில் முதுகலை பயில ஒருங்கிணைந்த சேர்க்கை தேர்வில் (Joint Admission Test - JAM) தேர்ச்சி பெற்றால் இந்தியாவில் உள்ள பதினைந்து ஐ. ஐ. டி களிலும், இந்திய அறிவியல் நிலையம் உட்பட 26 நிறுவனங்களில் அந்தந்த அறிவியல் துறைகளில் முதுகலை , பிஎச்.டி. ஆய்வு படிப்புகளை படிக்கலாம்.

சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், கொல்கத்தா பல்கலைக்கழகம், மும்பை பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் உட்படப் பல முக்கிய அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வு மூலம் கணித்ததில் முதுகலை, பிஎச்.டி. (Ph.D.) ஆய்வுப் பட்டப் படிப்புகளில் சேரலாம். இவை தவிரப் பல நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் தனியார் பல்கலைக்கழகங்களிலும் கணிதத்தில் முதுகலை மற்றும் ஆய்வு பட்டங்களைப் படிக்கலாம். கணிதத்தில் பிஎச்.டி. ஆய்வு படிப்பை முடித்தால் கல்வி நிலையங்களில் பேராசிரியராகப் பணியாற்றலாம்.

ஒருங்கிணைந்த முதுகலை மற்றும் பிஎச்.டி. ஆய்வு பட்டம் மேற்கொள்ள மும்பையில் உள்ள டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிலையம் (Tata Institute of Fundamental Research - TIFR), சென்னையில் உள்ள கணிதவியல் நிறுவனம் (Institute of Mathematical Sciences – IMSc), அலகாபாத்தில் உள்ள ஹரீஷ் சந்திரா ஆய்வு நிலையம் (Harish Chandra Research Institute – HRI) போன்றவை மிக முக்கியமானவை. இந்த மூன்று ஆய்வு நிலையங்களிலும் சேர தேசியக் கணித வாரியம் (National Board of Higher Mathematics – NBHM) நடத்தும் நுழைவுத் தேர்விலும், நேர்காணலிலும் வெற்றி பெற வேண்டும்.

மேற்கண்ட தேசிய முக்கியத்துவம் பெற்ற கல்வி நிலையங்களில் ஆய்வு புரியும் மாணவர்களுக்கு தற்சமயம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.32 ஆயிரம்வரை மத்திய அரசு ஆய்வு ஊக்கத்தொகை வழங்குகிறது. முதுகலை முடித்த பிறகு (அல்லது இறுதியாண்டில்) (Graduate Aptitude Test in Engineering – GATE) எனும் தேர்வை எழுதலாம். இதன் மூலம் பிஎச்.டி. ஆய்வு பட்ட படிப்பும், பொறியியல், தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டங்கள் பயிலலாம். கணிதத்தில் இத்தேர்வை வெற்றி பெற்றவர்கள் கணினிப் பொறியியல் மற்றும் மனிதவளத் துறைகளில் எம். டெக். (M.Tech.) எனும் தொழில்நுட்ப முதுகலை பட்டம் பெறலாம். இதற்கு மாதாமாதம் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பேராசிரியர் ஆகலாம்

முதுகலை படிக்கும் இறுதியாண்டிலோ அல்லது முடித்த பிறகோ தேசியத் தகுதி தேர்வு முக்கிய தேர்வை எழுதலாம். ஒவ்வோர் ஆண்டும் இருமுறை நடத்தப்படும் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பிஎச்.டி. ஆய்வுப் பட்டத்தை மத்திய அரசு மானியத்துடன் படிக்கலாம். மேலும், இதில் தேர்ச்சி பெற்றால் இந்தியாவில் எந்தக் கல்வி நிறுவனத்திலும் உதவிப் பேராசிரியராகப் பணிக்குச் சேரலாம். செட் எனும் State Eligibility Test – SET மாநிலம் சார்ந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் அந்தந்த மாநிலக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணி புரியலாம்.

தற்சமயம் அரசு கல்லூரிகளிலோ அல்லது பல்கலைக்கழகங்களிலோ உதவிப் பேராசிரியராகச் சேர்வதற்கு நெட் அல்லது செட் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும் எனப் பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission - UGC) தெரிவித்துள்ளது. அதேபோல, பல்கலைக்கழகங்களில் பணிபுரிபவர்கள் கட்டாயம் பிஎச்.டி. ஆய்வு பட்டம் முடித்தவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கணிதத்தில் முதுகலை பட்டம் பெற்றால் பல நிறுவனங்களிலும், பள்ளிகளிலும் (பி.எட். பட்டத்துடன்) பணிக்குச் சேரலாம். அதேபோல பிஎச்.டி. முடித்தால் பேராசிரியராகவோ குறிப்பிட்ட நிறுவனங்களில் ஆராய்ச்சி பிரிவில் வல்லுனராகவோ சேரலாம். இவை அனைத்தையும்விட டி.என்.பி.எஸ்.சி, யூ.பி.எஸ்.சி. போன்ற அனைத்து அரசு தேர்வுகளிலும், வங்கித் தேர்வுகளிலும் கணிதம் பயின்றவர்கள் எளிமையாக வெற்றி பெறலாம். எனவே கணிதத்தை முறையாகப் பயின்று, தகுந்த பயிற்சி மேற்கொண்டால் உங்கள் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஒருங்கிணைந்த கணித அறிவியல் பட்டம்

புகழ்பெற்ற தேசியக் கல்வி நிறுவனங்களில் ஒருங்கிணைந்த அறிவியல் படிப்பான Integrated BS-MS எனும் பட்டப்படிப்பை மேற்கொள்ளலாம். கணிதம் மட்டுமல்லாது இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற அறிவியல் துறைகளிலும் இந்தப் பட்டப்படிப்பு உண்டு.

இப்படிப்பைப் பயிலும் மாணவர்களுக்கு மாதாமாதம் ஊக்கத்தொகையாக ரூ.5,000 முதல் வழங்கப்படுகிறது. இந்த ஒருங்கிணைந்த முதுகலை பட்ட படிப்புக்குப் பிறகு ஆய்வு பட்டப் படிப்பை மேற்கொள்ளலாம். கீழ்வரும் புகழ்பெற்ற கல்வி நிலையங்களில் பயின்றால் உடனடியாகத் தகுந்த வேலை கிடைக்கும்.

# இந்திய அறிவியல் கல்வி நிலையம் (Indian Institute of Science - IISc)

# ஏழு இடங்களில் உள்ள இந்தியக் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்கள் (Indian Institutes of Science Education and Research - IISERs)

# தேசிய அறிவியல் ஆய்வு நிறுவனம் (National Institutes of Science Education and Research - NISER)

# மும்பை பல்கலைக்கழகம் மற்றும் மத்திய அரசின் அணு ஆற்றல் துறை (UM-DAE Centre for Excellence in Basic Sciences)

# பிர்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிலையம் (Birla Institute of Technology and Science - BITS)

கட்டுரையாளர் முனைவர் இரா. சிவராமன், இணைப் பேராசிரியர், கணிதத் துறை, து. கோ. வைணவக் கல்லூரி,சென்னை.
தொடர்புக்கு: piemathematicians@yahoo.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

20 mins ago

கல்வி

4 hours ago

கல்வி

5 hours ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

9 days ago

கல்வி

10 days ago

கல்வி

11 days ago

மேலும்