சென்னை ஐஐடி-யின் வருடாந்திர தொழில்நுட்பத் திருவிழா ஜன.3-ல் தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஐஐடியின் சாஸ்த்ரா வருடாந்திர தொழில்நுட்பத் திருவிழா 2025, ஜனவரி 3 முதல் 7 வரை 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது. நாட்டிலேயே மிகப் பெரிய அளவில் மாணவர்களால் நடத்தப்படும் இத்திருவிழாவுக்கு 70,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), நாட்டிலேயே மிகப் பெரிய அளவில் மாணவர்களால் நடத்தப்படும் சாஸ்த்ரா திருவிழாவின் 26-வது ஆண்டு நிகழ்வை 2025 ஜனவரி 3-ம் தேதி முதல் 7-ந் தேதி வரை நடத்தவிருக்கிறது. முற்றிலும் மாணவர்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் இந்த மாபெரும் நிகழ்வில் சென்னை ஐஐடி-ன் 750-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பல்வேறு வகைகளில் தங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

ஐஎஸ்ஓ 9001:2015 சான்றளிக்கப்பட்ட இத்திருவிழாவில் 130 அரங்குகள் இடம்பெறுகின்றன. அடுத்தடுத்து 80 நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில், ஐந்து நாட்களில் 70,000 பேர் இவற்றைப் பார்வையிட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிகள், மாநாடுகள், விரிவுரைகள், கண்காட்சிகள், பயிலரங்கங்கள் வாயிலாக இந்த அறிவியல்- தொழில்நுட்ப நிகழ்வை சாஸ்த்ரா கொண்டாடவிருக்கிறது.

இக்கல்வி நிறுவன வளாகத்தில் இன்று (30 டிசம்பர் 2024) சாஸ்த்ரா 2025 அறிவிப்பை வெளியிட்டு செய்தியாளர்களிடையே பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “சாஸ்த்ரா போன்றதொரு மாபெரும் நிகழ்ச்சியை நடத்துவதன் மூலம், மாணவர்களிடையே நிர்வாகத் திறன், அர்ப்பணிப்பு, பொறுப்புணர்வு, பொது நோக்கத்திற்காக பெரிய குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் திறன் போன்ற மதிப்புமிக்க பண்புகளை வளர்க்கச் செய்கிறது.

சென்னை ஐஐடி மாணவர்கள் இதுபோன்ற தேசிய நிகழ்வுகளில் பங்கேற்று மதிப்புவாய்ந்த திறமையை வெளிக்கொணர முடிகிறது. பல்வேறு அரசு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பெரு நிறுவனங்கள், ஸ்டார்ட்அப்கள், தொழில்முனைவோர் மட்டுமின்றி, தலைசிறந்த முக்கிய பிரமுகர்களையும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது. அவர்கள் எல்லோரையும் எவ்வாறு தொடர்பு கொள்வது, அவர்களை எப்படிக் கையாள்வது என்பதை மாணவர்கள் கற்றுக் கொள்ள முடிகிறது” எனக் குறிப்பிட்டார்.

சாஸ்த்ரா 2025-ன் கூட்டாளர்களில் ஒருவரான தேசிய கடல்சார் தொழில்நுட்ப பல்கலைக் கழக (NIOT) இயக்குநர் டாக்டர் பாலாஜி ராமகிருஷ்ணன் கூறும்போது, “சென்னை ஐஐடி-ன் சாஸ்த்ரா 2025-க்கு ஆதரவு அளிப்பதில் என்ஐஓடி பெருமிதம் கொள்கிறது. தொழில்நுட்பம், கடல்சார் அறிவியல் போன்றவற்றில் அன்றாட சவால்களுக்குத் தீர்வுகாண இளைஞர்களை ஊக்குவிப்பதிலும், கண்டுபிடிப்புகளை ஆதரிப்பதிலும் எங்களின் இரு கல்வி நிறுவனங்களின் இலக்கும் ஒன்றே. செயற்கை நுண்ணறிவு, ரோபாடிக்ஸ், நீடித்த கடல்சார் தொழில்நுட்பங்கள் போன்ற அதிநவீன துறைகளில் கூட்டு ஆராய்ச்சி, திறன் மேம்பாடு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில், கல்வி மற்றும் என்ஐஓடி-யின் நிபுணத்துவம் ஆகியவற்றுக்கு இடையேயான அறிவு பரிமாற்றத்திற்கான தனித்துவமான தளத்தை இந்த ஒத்துழைப்பு வழங்குகிறது” எனத் தெரிவித்தார்.

பாலாஜி ராமகிருஷ்ணன் மேலும் கூறுகையில், “சாஸ்த்ரா போன்ற முதன்மையான தொழில்நுட்ப நிகழ்வில் பங்கேற்று அடுத்த தலைமுறையினரை ஊக்கப்படுத்துவதே எங்களின் நோக்கம். இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் திறன்களை மேம்படுத்தும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் (STEM) தங்களை மேம்படுத்திக் கொள்வதுடன், நீடித்த கடல் ஆராய்ச்சி, பருவநிலை மீள்தன்மை ஆகியவற்றில் தீர்வுகளை ஏற்படுத்த ஏதுவாக இருக்கும். கடல்சார் தொழில்நுட்பம் மற்றும் மேம்பாடு துறையில் இந்தியா உலகளாவிய தலைவராக உருவெடுக்கவும், நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்டவும் உறுதிபூண்டிருப்பதை இந்த கூட்டாண்மை எடுத்துக்காட்டுகிறது” என தெரிவித்தார்.

சாஸ்த்ராவில் பல்வேறு தொழில்நுட்ப நிகழ்வுகள் முதன்முறையாக நடத்தப்படுகின்றன. அவை வருமாறு: • சாஸ்த்ரா வான்வழி ரோபாட்டிக்ஸ் சவால் (Shaastra Aerial Robotics Challenge): தானியங்கி டிரோன் இயக்குதலை உள்ளடக்கியது. புவி வேலியிடப்பட்ட பகுதியில் ட்ரோன்கள் இலக்கைக் கண்டறிந்து தாங்குசுமையை (payload) துல்லியமாகத் தரையிறக்குதல். அவற்றின் புரோகிராமிங், சென்சார் திறன்களை நிரூபிக்கும் வகையில் தானியங்கி முறையில் செயல்படும்

• ரோபோ சாக்கர் (RoboSoccer): இந்த நிகழ்வில் அணிகள் தங்கள் விருப்பப்படி வடிவமைத்த ரோபோக்களை போட்டிக் கால்பந்து ஆட்டங்களில் ஈடுபடுத்தும். மேம்பட்ட நிரலாக்கம் மற்றும் உத்திசார் விளையாட்டை வெளிப்படுத்துவதுடன், டிரிப்ளிங், பாஸிங், ஸ்கோரிங் உட்பட சிறந்த திறன்களையும் இந்த ரோபோக்கள் வெளிப்படுத்தும்.

• ஆல்கோ டிரேடிங் (Algo Trading): பங்கேற்பாளர்களுக்கு வர்த்தக வழிமுறைகளை வடிவமைத்து செயல்படுத்த தனித்துவமான தளத்தை வழங்குகிறது. அல்கோபுல்ஸ் (AlgoBulls) தளத்தில் அணிகள் போட்டியிட்டு, குறியீட்டு முறை, நிதித்திறமை ஆகியவற்றை ஒன்றிணைக்கும் நிகழ்வில் உத்திகளைக் எடுத்துரைக்கும்.

• பெட்ரி டிஷ் சவால் (Petri-dish Challenge): தொடர்ச்சியான கடும் ஆய்வகப் பரிசோதனைகள் மூலம் கண்ணுக்குப் புலப்படாத பாக்டீரியாவை இந்த நிகழ்வில் அடையாளம் காணமுடியும். சாஸ்த்ராவில் முதன்முறையாக ஈரமான ஆய்வகப் (wet lab) போட்டி சென்னை ஐஐடி உயிரித் தொழில்நுட்ப துறையின் ஆய்வகங்களில் என்ஐஓடி நிதியுதவியுடன் நடத்தப்படுகிறது.

இதுபோன்ற நிகழ்வுகளால் மாணவர்களுக்கு ஏற்படும் நன்மைகளை எடுத்துரைத்த சென்னை ஐஐடி டீன் (மாணவர்கள்) பேராசிரியர் சத்தியநாராயணன் என் கும்மாடி, “நாங்கள் வெள்ளிவிழா ஆண்டை (25 ஆண்டுகள்) முடித்து, சாஸ்த்ராவின் 26-வது நிகழ்வில் நுழைந்திருக்கிறோம். அனைத்து ஊடக நண்பர்கள், பங்கேற்பாளர்கள், உரைநிகழ்த்துவோர், நடுவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சாஸ்த்ரா 2025-க்கு அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த ஆண்டுக்கான சாஸ்த்ரா மாநாடு மற்றும் ஆராய்ச்சி மாநாட்டில் 'எதிர்கால நகரங்கள்' மற்றும் 'ஸ்மார்ட் உற்பத்தி' என்ற தலைப்பில் இரு புதிய பகுதிகளை அறிமுகப்படுத்துகிறோம். இந்தக் களங்களில் நீடித்த அணுகுமுறைகளை உள்ளடக்கிய அனைத்து தரப்பினரிடம் இருந்தும் பங்களிப்புகளை எதிர்பார்க்கிறோம். சாஸ்த்ராவின் 26வது ஆண்டு நிகழ்வை புதிய நிலைக்கு எடுத்துச்செல்ல வருடம் முழுவதும் பாடுபட்டுவரும் ஆசிரிய ஆலோசகர் தலைமையிலான 300-க்கும் மேற்பட்ட மாணவர் குழுக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், அனைத்து மாணவர் குழுக்களும் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டார்.

சென்னை ஐஐடி-ன் இணை பாடத்திட்ட ஆலோசகர் டாக்டர் முருகையன் அமிர்தலிங்கம் கூறும்போது, “சென்னை ஐஐடி-ன் முதன்மையான வருடாந்திர தொழில்நுட்ப நிகழ்வான சாஸ்த்ரா, ஆசியாவிலேயே மிகப்பெரிய மாணவர்களால் நடத்தப்படும் தொழில்நுட்ப-நிர்வாக விழாக்களில் ஒன்றாகும். 26-வது ஆண்டு நிகழ்வானது பல்வேறு தொழில்நுட்ப, வணிகக் களங்களில் பல்வேறு நிகழ்வுகள், பட்டறைகள், கண்காட்சிகள், நிகழ்ச்சிகளை வழங்குகிறது. இதில் செயற்கை நுண்ணறிவு, தானியங்கி ரோவர் சவால்கள், ஆயுதப் படைகளின் கண்காட்சிகள், ‘ரோபோ வார்ஸ்’ (Robot wars) போன்ற இதர பகுதிகள் தொடர்பாக பயிற்சிப் பட்டறைகள் இடம்பெறும். இந்நிகழ்ச்சிகளில் பள்ளி- கல்லூரி மாணவர்கள், தொழில்நுட்ப ஆர்வலர்கள் பங்கேற்று நமது நாட்டில் நடைபெறும் எதிர்கால தொழில்நுட்பத் திருவிழாவை கண்டுகளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட ஐஐடி மெட்ராஸின் இணை பாடத்திட்ட விவகாரங்களுக்கான செயலர் சுகேத் கல்லுப்பள்ளி கூறும்போது, “25 ஆண்டுகளாக தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் கொண்டாட்டமாக சாஸ்த்ரா விளங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான கல்விநிறுவன திறந்தவெளி அரங்கில் (Institute Open House) 2 நாட்களுக்கு சென்னை ஐஐடி-ன் ஆய்வகங்கள், சிறப்பு மையங்களை அனைவரும் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறோம்.

பார்வையாளர்களுக்கும், பங்கேற்பாளர்களுக்கும் முழுமையான அனுபவத்தை வழங்கும் முயற்சியில் ஐந்து நாள் நிகழ்வுகள் கண்காட்சிகள், போட்டிகள், நகைச்சுவை மற்றும் இசை நிகழ்ச்சிகள், மாநாடுகள் மற்றும் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை செயல்படுத்தும் வாய்ப்பு பெற்றமைக்கு மகிழ்ச்சியடைகிறோம், மேலும் எங்களது துடிப்புமிக்க வளாகத்தில் அனைவரும் நிகழ்ச்சிகளை சிறப்புற நடத்த காத்திருக்கிறோம்” என்றார்.

சாஸ்த்ரா 2025-ல் பல்வேறு மாநாடுகள் மற்றும் உச்சிமாநாடுகளும் நடைபெறவிருக்கின்றன. தொழில்துறை செயற்கை நுண்ணறிவு மாநாடு (IndustriAI Conference): சாஸ்த்ரா வரலாற்றில் முதன்முறையாக சர்வதேச ஆராய்ச்சி மாநாடு மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. செயற்கை நுண்ணறிவை விரைந்து ஒருங்கிணைத்தல், மிகப்பெரிய தரவுப் பகுப்பாய்வு, ரோபாடிக்ஸ் போன்றவை தொழில்துறை புரட்சியில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விவாதிக்கப்படும். “ஸ்மார்ட் மேனுபேக்சரிங்” என்ற கருப்பொருளில் நடைபெறும் இம்மாநாட்டிற்கு என்ஐஓடி, டெமினோஸ் மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

எதிர்கால நகரங்கள் மாநாடு (Future Cities Summit): எதிர்கால நகரங்கள் தொடர்பான 3 நாள் மாநாட்டில் நகர்ப்புற திட்டமிடல், நிலைத்தன்மை, ஆற்றல், மேம்பட்ட தொழில்நுட்பங்கள், பேனல்கள், நேரடி செயல் விளக்கங்கள், சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவின் ஸ்டார்ட்அப்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும். ஆய்வக சுற்றுப்பயணங்கள், உலகளாவிய நிபுணர் நுண்ணறிவு, தொழில்துறை தலைவர்களுடன் நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் ஆகியவை சிறப்பம்சங்களாக இடம்பெறும்.

டெக்-எண்டர்டெயின்மென்ட் நைட் (Tech-Entertainment Night): டெக்னோ மியூசிக், நேரடி இசையும் இணைந்த சாஸ்த்ராவின் டெக்-என்டர்டெயின்மென்ட் நைட் இடம்பெறும். கலகலப்பான துடிப்புகளின் கலவையைக் கொண்டிருக்கும். ஹிப்-ஹாப் கலைஞரான கரண் காஞ்சன், சர்வதேச டிஜே கமிலா ஆகியோர் நிகழ்வில் இசை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். பலவிதமான தாளங்களையும் மெட்டுகளையும் அவர்கள் மேடைக்குக் கொண்டு வருவார்கள்.

நகைச்சுவை இரவு (Comedy Night): அன்றாட நிகழ்வுகளில் கிடைக்கும் அனுபவங்கள் தொடங்கி அபத்தமான கருத்துகள் வரை, நகைச்சுவை நடிகர்கள் பார்வையாளர்களை குலுங்கக் குலுங்க சிரிக்க வைப்பார்கள். மேடை நகைச்சுவையாளர் குர்லீன் பன்னு நிகழ்ச்சியில் பங்கேற்பார். பத்ம பூஷண் விருது பெற்ற புகழ்பெற்ற விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணன், ஐ.நா.வுக்கான முன்னாள் இந்திய நிரந்தர தூதர் ருச்சிரா கம்போஜ், பத்மஸ்ரீ விருது பெற்ற கணிதவியலாளர் டாக்டர் சுஜாதா ராமதுரை ஆகியோர் சிறப்பு விரிவுரைகள் வழங்க உள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

6 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

8 days ago

கல்வி

8 days ago

கல்வி

8 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

11 days ago

மேலும்