மத்திய அரசுப் பள்ளிகள் நீங்கலாக தமிழகத்தில் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி தொடரும்: அமைச்சர் அன்பில் உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: “5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்து கல்வி உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களால் தமிழகப் பள்ளிகளின் தேர்ச்சி முறைகளில் எந்த மாற்றமும் கிடையாது. தமிழகத்தில் செயல்பட்டுவரும் மத்திய அரசுப் பள்ளிகளைத் தவிர பிற பள்ளிகளுக்குப் பொருந்தாது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், தற்போதுள்ள தேர்ச்சி நடைமுறையே தொடரும்” என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அனைத்துப் பள்ளிக் குழந்தைகளும் தொடர்ந்து தடையின்றி கல்வி பயின்றிட ஏதுவாக, எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்கப்படும் முறை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளைத் திருத்தம் செய்து, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெறாத குழந்தைகளுக்கு இரண்டு மாதங்களில் மறுதேர்வு முறையையும், அதிலும் தேர்ச்சி பெறாத குழந்தைகள் அதே வகுப்பில் ஓராண்டு பயில வேண்டும் என்ற முறையையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்றி நடத்தப்படும் மத்திய அரசுப் பள்ளிகளுக்கு, இந்தப் புதிய நடைமுறை பொருந்தும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், தடையின்றி எட்டாம் வகுப்பு வரை கல்வி பெறுவதில், ஒரு பெரிய தடைக்கல்லை மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளது உண்மையிலேயே வருந்தத்தக்கது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, தேசியக் கல்விக் கொள்கையைப் பின்பற்றாமல், நமது மாநிலத்தின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சிறந்த கல்வியாளர்களை ஒருங்கிணைத்து, ஒரு புதிய மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக, நமது அரசு தொடங்கிய பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ளன. தமிழகத்தில், மாநிலக் கல்விக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் சூழ்நிலையில், மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் தமிழகத்தில் செயல்பட்டுவரும் மத்திய அரசுப் பள்ளிகளைத் தவிர பிற பள்ளிகளுக்குப் பொருந்தாது.

எனவே, தமிழகத்தில் உள்ள பெற்றோர்களும், மாணவர்களும், ஆசிரியர்களும், கல்வியாளர்களும் மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்ட விதிகள் குறித்து எந்தவகையிலும் குழப்பமடையத் தேவையில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரையில், தற்போதுள்ள தேர்ச்சி நடைமுறையே தொடரும். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டதைப் போல, ஒரு தலைமுறையில் பெறக்கூடிய கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைகளுக்கும் பாதுகாப்பாக அமையும். கல்வி தான் ஒரு சமூகத்தின் எதிர்காலத்தின் அடித்தளம்.

எனவே, மாணவர்கள் மகிழ்ச்சியோடும், பாதுகாப்போடும் கல்வி கற்பதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துவது தான் திராவிட மாடல் அரசின் இலக்கு. இந்த இலக்கை எய்தி, இந்தியத் துணைக் கண்டத்துக்கே, தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாகத் தொடர்ந்து விளங்கும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து தொய்வின்றி, நமது அரசு முன்னெடுத்துச் செல்லும்,” என்று அவர் கூறியுள்ளார். விரிவாக வாசிக்க > 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டாய தேர்ச்சி முறை ரத்து: மத்திய அரசு அதிரடி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

4 hours ago

கல்வி

8 hours ago

கல்வி

8 hours ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

10 days ago

கல்வி

10 days ago

கல்வி

11 days ago

மேலும்