சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகள்: 17-ம் தேதி கலந்தாய்வு

By செய்திப்பிரிவு

சென்னை: சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களை மாணவிகள் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னையில் வரும் 17-ம் தேதி தொடங்குகிறது.

தமிழகத்தின் இந்திய மருத்துவம் - ஓமியோபதி துறையின்கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவ கல்லூரி, யுனானி மருத்துவ கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவ கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவ கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி ஆகியவை உள்ளன.

இந்த 5 அரசுக் கல்லூரிகளில் உள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் வழங்கப்படுகிறது. எஞ்சியுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதேபோல, 30 தனியார் கல்லூரிகளில் உள்ள 1,980 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது.

எஞ்சிய இடங்களில் மாநில அரசுக்கு 65 சதவீதம், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 35 சதவீதம் உள்ளன. அரசு ஒதுக்கீடு இடங்கள், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது. அரசு கல்லூரிகளின் 15 சதவீத இடங்களுக்கு மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்துகிறது.

சித்தா (பிஎஸ்எம்எஸ்), ஆயுர் வேதா (பிஏஎம்எஸ்), யுனானி (பியுஎம்எஸ்), ஓமியோபதி (பிஎச்எம்எஸ்) ஆகிய பட்டப் படிப்புகளுக்கு 2024-25-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு 4,500 பேர், தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 1,450 பேர், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 1,400 பேர் என நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 7,350 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர்.

விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியான மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் www.tnhealth.tn.gov.in என்ற சுகாதார துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியலில் 4,340 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இதில், நீட் தேர்வில் 720-க்கு 653 மதிப்பெண் பெற்ற வி.ஹர்ஷினி ஜோதி முதல் இடமும், 633 மதிப்பெண் பெற்ற வி.டி.தீப்தி 2-ம் இடமும், 628 மதிப்பெண் பெற்ற எஸ்.எப்.பிரவீனா 3-ம் இடமும் பிடித்துள்ளனர். முதல் 10 இடங்களில் 8 மாணவிகள், 2 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். தனியார் கல்லூரிகளின் தரவரிசையை பொருத்தவரை அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியலில் 1,443 பேர், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியலில் 1,342 பேர் இடம் பெற்றுள்ளனர்.

அரசு பள்ளி மாணவர்கள்: அரசு ஒதுக்கீட்டுக்கு மொத்தம் உள்ள இடங்களில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின்கீழ், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 90 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலில் 1,273 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில், 521 மதிப்பெண்களுடன் பி.தர்ஷினி முதல் இடமும், 510 மதிப்பெண்களுடன் டி.மதுமிதா 2-ம் இடமும், 508 மதிப்பெண்களுடன் எம்.சுபா 3-ம் இடமும் பிடித்துள்ளனர்.

நேரடியாக கலந்தாய்வு: இந்நிலையில், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை அரும்பாக்கம் சித்தா மருத்துவமனை வளாகத்தில் வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. முதல் நாளில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகிய சிறப்பு பிரிவினர் மற்றும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. பொது பிரிவினருக்கான கலந்தாய்வு 18-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

21 hours ago

கல்வி

1 day ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

8 days ago

கல்வி

8 days ago

கல்வி

8 days ago

கல்வி

10 days ago

கல்வி

10 days ago

கல்வி

12 days ago

கல்வி

12 days ago

கல்வி

12 days ago

கல்வி

15 days ago

மேலும்