மீன்வள பல்கலை. பட்டமளிப்பு விழா: ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார்

By செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

நாகையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழகத்தில் 9-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. துணைவேந்தர் பெலிக்ஸ், பதிவாளர் மா.ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி, 391 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

விழாவில், வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் மற்றும் மும்பைமத்திய மீன்வளக் கல்வி ஆராய்ச்சிநிலைய துணைவேந்தர் ச.நா.ரவிசங்கர் பேசும்போது, "நாட்டின் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பில் மீன்வளத் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. மாணவர்கள்தான் இந்த தேசத்தின் செல்வம். தற்போதுள்ள அசாதாரண வாய்ப்புகளை மாணவர்கள் இறுகப்பற்றி, சவால்களை சந்தித்து, யோசனைகளை புதுமையான முயற்சிகளாக மாற்ற முயற்சிக்க வேண்டும்’’ என்றார்.

அமைச்சர் புறக்கணிப்பு: பல்கலைக்கழக இணைவேந்தரும், மீன்வளத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் விழாவைப் புறக்கணித்தார். அழைப்பிதழில் பெயர் இல்லாததால், நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் விழாவில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. முன்னதாக, வேளாங்கண்ணி மாதா பேராலயத்துக்கு மனைவியுடன் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்கு பிரார்த்தனை செய்தார்.

ஆளுநருக்கு எதிர்ப்பு: இதற்கிடையில், ஆளுநர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, புத்தூர் மேம்பாலம் பகுதியில் கருப்புக் கொடி காட்ட முயன்ற காங்கிரஸ்கட்சி மாவட்டத் தலைவர் அமிர்த ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் அருட்செல்வன் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE