தமிழ்மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

By இ.மணிகண்டன்

விருதுநகர்: இந்த ஆண்டுக்கான தமிழ்மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு அக்டோபர் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக விண்ணப்பிக்க நாளை (19ம் தேதி) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2024-2025-ம் கல்வியாண்டிற்கான தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு அக்டோபர் 19-ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்வில் மாநில அளவில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை மூலம் மாதம் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழக அரசின் 10-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் இத்தேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும். 2024-2025-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பிளஸ்-1 பயிலும் (மெட்ரிக்/சிபிஎஸ்சி, ஐசிஎஸ்இ, மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50 சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நாளைக்குள் (செப்டம்பர் 19) சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE