“உங்களுக்கு தேவையானதை நீங்கள்தான் தேடவேண்டும்” - ‘இந்து தமிழ் திசை - வெற்றிப்பாதை’ நிகழ்வு

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு: அரசு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வழிகாட்டும் நோக்கில் ஈவா ஸ்டாலின் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் 'இந்து தமிழ் திசை -வெற்றிப்பாதை' என்ற நிகழ்வு செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வருமானவரித் துறை ஆணையர் நந்தகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசியதாவது: கடவுள் ஏன் என்னை 6ம் வகுப்பு வரை படிக்க வைத்தார். அதன் பிறகு படிக்க முடியாமல் போனதற்கான காரணம் என்ன? என எனக்குள் புரியாதபுதிராகவே இருந்தது. ஆனால், கடவுள் எனக்கு எதுவோ வைத்திருக்கிறார், வேறு ஏதோ பெரிய காரியம் செய்வதற்காக கடவுள் எனக்கு உத்வேகம் கொடுத்தார் என்பதை நான் உணர்ந்தேன். 6-ம் வகுப்புக்குப் பிறகு நான் நேரடியாக கல்லூரி படிப்பில் சேர்ந்தேன். பல கல்லூரிகள் எனக்கு இடம் வழங்க மறுத்துவிட்டன.

இன்று பலருக்கு நம் வாழ்க்கையில் என்னவாகப் போகிறோம் என்ற சிந்தனையை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தகுதி இருந்தாலும் ஆசைப்படுவதற்கு யாரும் முன்வருவதில்லை. இந்தப் பிரபஞ்சம் உங்களுக்குத் தேவையானதை கொடுத்திருக்கிறது. நீங்கள் தான் உங்களுக்கு தகுதியானதை தேடி எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எங்கு இருக்க வேண்டும் என்று எது உங்கள் எண்ணத்தில் ஆழமாகப் பதிந்து இருக்கிறதோ, அந்த இடத்துக்கு நீங்கள் செல்வதற்குத்தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. உங்கள் வெற்றிப் பாதையின் வாழ்க்கை என்பது குறுகிய பாதை அல்ல, அது நீண்ட நெடிய பயணம் செய்யக்கூடியது. நமது ஆழ் மனதுக்குள் எது ஆழமாக இருக்கிறதோ அது நம்மைச் சுற்றி நிற்கும்.

அப்போது நாம் அதை சரியாகக் கவனிக்கவில்லை எனில் அது நம்மை கடந்து சென்றுவிடும். நாம் நம்மைப் பற்றியும் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் பற்றியும் வருங்காலத்தைப் பற்றியும் சரியாக சிந்திக்காமல் இருக்கிறோம். இந்த உலகத்தில் அனைத்தும் நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கிறது. நாம் எப்பொழுது தேவையானதை தேடுகிறோமோ, அப்போதுதான் நமக்கு அது கிடைக்கும். படிப்பு என்பது மிகப்பெரிய வேலை அல்ல. அது மிகவும்எளிதானது. தேவையான விஷயங்களை மட்டும் தேட வேண்டும் தேவையற்ற விஷயங்களைத் தேடக்கூடாது.மீறி தேவையற்ற விஷயங்கள் தேடும்போது வெற்றிப்பாதை நமக்குகிட்டாது. இங்கு உள்ள அனைவரையும் பெரிய ஆளுமையாக நான் 2030-ம் ஆண்டு காண்பேன் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.

ஈவா ஸ்டாலின் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் பேராசிரியர் டி.ஸ்டாலின் பேசியதாவது: நீங்கள் உங்களை முதலில் நம்ப வேண்டும். நீங்களே உங்களை நம்பவில்லை எனில் வேறு யார் உங்களை நம்புவார்கள். பலர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுகிறார்கள், என்னால் ஏன்எழுத முடியாது. நானும் ஆளப் பிறந்தவன், சாதிக்கப் பிறந்தவள் என்ற எண்ணம், உணர்வு நமக்குள் வளர வேண்டும். நான் தோல்வி அடைந்ததற்கு குடும்பப் பின்னணிதான் காரணம் என்று சொல்லக்கூடாது.

ஈவா ஸ்டாலின் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் ‘இந்து தமிழ் திசை - வெற்றிப்பாதை' நிகழ்வு செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள்.

பலர் மிகச் சாதாரண பின்னணியிலிருந்து வந்து, உலகின் முன்னணி நிலைக்கு வந்துள்ளனர். இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. நமது நாட்டின் ஜனாதிபதியான அப்துல் கலாம் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர். பின்னாளில் பெரிய அறிவியல் விஞ்ஞானியாகவும் நாட்டின் முதல் குடிமகனாகவும் வந்தார். அவரது குடும்பப் பின்னணியைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அதனால் குடும்பச் சூழ்நிலையைக் காரணம் காட்டி வெற்றிக்கு தடை போடக் கூடாது.

முயற்சிதான் எல்லாவற்றுக்கும் முக்கிய காரணம். தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். பிரச்சினைகளைக் கண்டு பயப்படக்கூடாது. அவற்றை எதிர்கொள்ள வேண்டும். எந்தக் காரியத்தை நீங்கள் செய்தாலும் உண்மையாக உத்தமமாகச் செய்ய வேண்டும். நம்மால் இந்த சிவில் சர்வீஸ் தேர்வை எழுத முடியுமா? என்றஎண்ணம் உங்களுக்குள் இருக்கக் கூடாது. இந்த உலகத்தில் சாதிக்க நினைப்பவர்களுக்கு நிறைய வழிகள் திறந்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு நந்தகுமார் பதில் அளித்தார். இந்நிகழ்வில் முன்னதாக கல்லூரி தாளாளர் விகாஸ்சுரானா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நிறைவாக, கல்லூரியின் முதல்வர் அருணாதேவி நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE