சென்னை: தமிழ்நாடு முழுவதும் 240 பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகளுக்கு சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு சாலைப் பாதுகாப்பு அறிவு மற்றும் திறன்களை வழங்கும் நோக்கில், ஃபோர்டு நிறுவனத்துடன் சென்னை ஐஐடி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் சாலைப் பாதுகாப்பு திறன்மிகு மையம் (CoERS), அதிகரித்து வரும் சாலைவிபத்துகளுக்கு இளம் ஓட்டுநர்கள் மூலமாகத் தீர்வுகாண ஃபோர்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 240 பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் சாலைப் பாதுகாப்பு அறிவு மற்றும் திறன்களைப் பயிற்றுவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. “2022-ம் ஆண்டில் இந்தியாவில் சாலை விபத்துகள்” குறித்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் (MoRTH) அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2022-ம் ஆண்டில் சாலை விபத்துகளில் உயிரிழந்த 1,68,491 பேரில் 42,878 பேர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம் பருவத்தில் சாலைப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பயிற்றுவிப்பதன் மூலம், நீண்டகாலத்துக்கு இப்பழக்கம் மனதில் நிற்பதுடன், சாலைப் பாதுகாப்பை அவர்களின் வாழ்க்கைமுறையின் இயல்பான பகுதியாக உட்புகுத்தவும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, சாலைகளில் உயிர்களைக் காப்பாற்ற உதவும் இயல்பான மனப்பாங்குக்கு மாறுவதை இந்த சமூகம் உறுதிசெய்ய முடியும்.
இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், நடைமுறைப் பயிற்சியில் கவனம் செலுத்துவதுடன், சாலைகளில் வாகனங்களை மிகுந்த பொறுப்புடன் ஓட்டுவதை இத்திட்டம் வலியுறுத்துகிறது. சென்னை ஐஐடி சாலைப் பாதுகாப்பு திறன்மிகு மையமும் (CoERS), ஃபோர்டு நிறுவனமும் 30 ஆகஸ்ட் 2024 அன்று இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இதற்கெனப் பயிற்சி பெற்ற நபர்கள், அந்தந்தப் பள்ளிகளிலும், போக்குவரத்து வரம்புக்கு உட்பட்ட இடங்களிலும் ஓட்டுநர் நடைமுறைகள், போக்குவரத்து விதிகள், ஆபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். இளம் ஓட்டுநர்கள் படிக்கும் காலத்திலேயே இதனை செயல்படுத்துவதன் மூலம் விபத்துகளைக் குறைத்து, சாலைப் பயனாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதை CoERS மற்றும் ஃபோர்டு நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளன.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வும் பயிற்சித் திட்டத் தொடக்க அமர்வும் 30 ஆகஸ்ட் 2024 அன்று சென்னை ஐஐடி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டு முயற்சியின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மதிப்புமிக்க வளங்களும் நிபுணத்துவமும் வழங்கப்படும்.
நிகழ்ச்சியில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “சென்னை ஐஐடி பல்வேறு முயற்சிகள் மூலமாக சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த உறுதிபூண்டுள்ளது. சாலைகளில் பாதுகாப்பு கலாச்சாரத்தை வளர்க்கும் வகையில் இளைய தலைமுறையினரை இந்த முயற்சிகளில் ஈடுபடுத்துவது முக்கியமானது. இதற்கு முன்பு ஓட்டுநர்களின் செயல்பாட்டை மேம்படுத்தும் விதமாக நாங்கள் பணியாற்றி வந்திருக்கிறோம். இம்முயற்சியின் வாயிலாக இளைய தலைமுறையினருக்கு- நாளைய ஓட்டுநர்களுக்கு- பாதுகாப்பான ஓட்டுநருக்கான நடைமுறைகளை உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்” எனக் குறிப்பிட்டார்.
இதன் ஒரு பகுதியாக, மனித நடத்தையை அடிப்படையாகக் கொண்டு அதன் அடிப்படையில் ஆசிரியர்கள், போக்குவரத்துக் காவலர்கள், போக்குவரத்து காவல் அதிகாரிகள் போன்றவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
இத்தகைய கூட்டு முயற்சிகளின் அவசியத்தை வலியுறுத்திப் பேசிய சென்னை ஐஐடி-யின் CoERS, சென்னை ஐஐடி பொறியியல் வடிவமைப்புத் துறையின் ஆர்பிஜி லேப்ஸ் ஆகியவற்றின் தலைவர் பேராசிரியர் வெங்கடேஷ் பாலசுப்ரமணியன், "இளைய சமுதாயத்தினரின் மூளைகளைத் தயார்படுத்துவதற்கும், நடத்தையில் மாற்றங்களை வளர்ப்பதற்கும் சாலைப் பாதுகாப்பு நடைமுறைகளை முன்கூட்டியே வெளிப்படுத்துவது அவசியமாகிறது. இதனால் அவர்கள் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்ட முடியும். ஃபோர்டு நிறுவனத்துடனான இந்த முன்முயற்சி, எதிர்கால ஓட்டுநர்களாகிய இளம் சமுதாயத்தினரை பொறுப்பான சாலைப் பயனாளராக மாற்றுவதுடன், அத்தியாவசியத் திறன்கள் மற்றும் நடத்தை மாற்றங்களுக்கு அவர்களைத் தயார்படுத்த உதவும்” எனத் தெரிவித்தார்.
ஃபோர்டு நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு நிதிக்கான தலைவர் ஸ்ரீனிவாசன் ஜானகிராமன் கூறுகையில், “சாலைப் பாதுகாப்புக் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு கல்வியாளர்களை மேம்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். மாணவர்கள், இளம் ஓட்டுநர்கள் சாலைகளில் பாதுகாப்புடன் செல்வதற்கான அறிவையும் திறன்களையும் பெற்றிருப்பதை உறுதிசெய்ய விரும்புகிறோம். சென்னை ஐஐடி-யின் CoERS உடனான இந்த ஒத்துழைப்பின் வாயிலாக செயல்பாடு அடிப்படையிலான கற்றல் மற்றும் கற்பித்தலை மேம்படுத்துவதுடன் அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பான ஒட்டுநர்களை வளர்த்தெடுக்க உதவுகிறது.” என்றார்.
சாலைப் பாதுகாப்பு திறன்மிகு மையம் (CoERS) பற்றி: சாலைப் பாதுகாப்பிற்கான சான்றுகள் அடிப்படையிலான ஒருங்கிணைந்த அணுகுமுறையைச் செயல்படுத்தும் நோக்கில் ஐஐடி மெட்ராஸில் உள்ள சாலைப் பாதுகாப்பு திறன்மிகு மையத்திற்கு (CoERS) இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) நிதியளித்து வருகிறது. மனித காரணிகள், பொறியியல், சாலைப் பொறியியல், வாகனப் பொறியியல் ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களில் உலகளவில் சாலைப் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கொண்டுவர CoERS பணியாற்றி வருகிறது. சாலைப் பாதுகாப்பிற்கான தரவு உந்துதல் அமைப்பு அணுகுமுறையைக் கொண்டுவர சம்பந்தப்பட்ட துறையினர் மற்றும் அரசாங்கங்களுக்கு CoERS அறிவுறுத்தி வருகிறது.
முக்கிய செய்திகள்
கல்வி
3 hours ago
கல்வி
8 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago