புதுச்சேரியில் தெரிந்த சூரியனைச் சுற்றிய ஒளிவட்டம்: ஆசிரியர்கள் விளக்கம்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: சூரியனைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் புதுச்சேரியில் இன்று (செப்.9) தெரிந்தது. இதை பலரும் உற்றுநோக்கி புகைப்படம் எடுத்தனர். புதுச்சேரியில் இன்று சூரியனைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் தோன்றியது. நகரப்பகுதியில் கடற்கரைச்சாலை, சட்டப்பேரவை உள்ளிட்ட பல பகுதிகளில் இதைப் பார்த்த பலரும் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்தனர். இந்த ஒளிவட்டம் பற்றி பலரும் பலவிதமான தகவல்களை தெரிவித்தனர். சிலர் ஜோதிட காரணங்களைக் குறிப்பிட்டனர். சிறிது நேரம் தென்பட்ட இந்த ஒளிவட்டம் பின்னர் மறைந்தது.

இதுபற்றி புதுவை அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஹேமாவதி கூறியது: “சூரியனைச் சுற்றி ஒளிவட்டமானது காற்றில் ஈரப்பதம் இருக்கும்போது தோன்றுவது வழக்கம். இதை சன் ஹேலோ என்பார்கள். இது சூரியனை சுற்றி வெள்ளை வளையமாக தோன்றும். வானத்தில் இருக்கும் உயரமான மேகங்கள் பெரும்பாலும் பனி படிகங்களாக இருக்கும்.

பனித்துகள்கள் வழியாக சூரிய ஒளி செல்லும்போது ஒளி விலகல்- ஒளிசிதறலால் சூரியனைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும். இது இயல்பான ஒன்று. அதேபோல்தான் மழைத்துளியின் வழியாக சூரிய ஒளி விழும்போது வானவில்லாக பார்க்கிறோம்,” என்றார்.

சூரியனை சுற்றி ஒளி வட்ட வடிவில் எப்படி தோன்றும் என்பது குறித்து விளக்கம் அளித்த அறிவியல் ஆசிரியர்கள், “வானில் அறுங்கோண வடிவ பனிப்படிகங்கள் வழியாக சூரிய ஒளி செல்லும்போது அது 22 டிகிரி கோணத்தில் வளைந்து சூரியனைச் சுற்றி ஒரு ஒளிவட்டத்தை உருவாக்கும்,” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE