இன்று ஆசிரியர் தின கொண்டாட்டம்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: ஆசிரியர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி தமிழக ஆளுநர், முதல்வர், அரசியல் கட்சிதலைவர்கள் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: ஆசிரியர்கள்தான் சிறந்த குடிமக்களை வகுப்பறையில் உருவாக்குகிறார்கள். பல மாணவர்கள் நல்ல ஆசிரியர்களிடம் பயின்ற காரணத்தால் பல்வேறு நிலைகளில் உயர்ந்து சாதனைகளைப் படைத்துள்ளனர். அதற்கு உந்து சக்தியாகஇருப்பவர்கள் ஆசிரியர்கள். அந்த வகையில் ஆசிரியர்களை போற்றுகிற வகையிலும், அவர்களது பங்கை அங்கீகரிக்கும் வகையிலும் ஆசிரியர் தினம் கொண்டாடுவது மிகவும் பொறுத்தமானதாகும். எனவே, இந்தியாவின் சிறந்த குடிமக்களை உருவாக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகள்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:ஓர் அறையில் விலைமதிப்பு மிக்கஎந்தப் பொருளும் இல்லாவிட்டாலும் கூட, சிறிய விளக்கு ஒளி மட்டும் இருந்து விட்டால், அது அந்த அறையையே நிறைத்து விடும். அதேபோல், ஒரு நாட்டில் எந்த வளமும் இல்லாவிட்டாலும் கூட கல்வியும், மனிதவளமும் மட்டும் நிறைந்திருந்தால், அந்த நாட்டுக்கு மீதமுள்ள அனைத்து வளங்களும் கிடைத்துவிடும். கல்வியின் சிறப்பு அந்த அளவுக்கு மகிமையானது. கல்விக்கு அம்மகிமையை வழங்குபவர்கள் கல்வி தரும் வள்ளல்கள் ஆசிரியர்கள்தான். அழியாச் செல்வமான கல்வியை வழங்கும் ஆசிரியர்கள் உயர்ந்த இடத்தில் வைத்து போற்றப்பட வேண்டியவர்கள்.

பாமக தலைவர் அன்புமணி: உலகில் அனைவரின் முன்னேற்றத்துக்கும் வழிவகுக்கும் ஆத்மாக்கள்ஆசிரியர்கள்தான்; அதேபோல்,மற்றவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்படாமல், மகிழ்ச்சியடையும் மகாத்மாக்களும் ஆசிரியர்கள்தான். அதனால்தான் அவர்கள்அனைவராலும் வணங்கப்படுபவர்களாக உள்ளனர். இத்தகைய சிறப்புமிக்க ஆசிரியர்களை இந்த சமுதாயம் போற்றவேண்டும். ஒவ்வொரு ஆண்டும்ஆசிரியர் நாள் என்பதை ஆசிரியர்களும், மாணவர்களும் மட்டுமே கொண்டாடும் நிலையைமாற்றி ஒட்டுமொத்த மக்களும் கொண்டாடும் நிலையை உருவாக்க வேண்டும். அது தான் நமது சமுதாயத்தை வளர்ப்பதற்காக உழைக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா: மாணவர்களுக்கு கல்விச்செல்வத்தை அளிப்பதுடன் ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவற்றையும் வழங்கி அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் அரும்பணியை சீரோடும் சிறப்போடும் செய்து வரும் ஆசிரியர்களுக்கு முன்னாள் ஆசிரியர் என்ற வகையில் உளங்கனிந்த நல்வாழ்த்துகள்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: அழிவில்லா கல்விசெல்வத்தை நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு புகட்டி, அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் பணியில் கடமை உணர்வோடு ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: ஆசிரியர்களை போற்றுவோம், ஆசிரியர்களின் பணிக்கு மரியாதை செலுத்துவோம். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற துணை நிற்போம்.

இதேபோன்று, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், வி.கே.சசிகலா உள்ளிட்டபல்வேறு தரப்பினரும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE