‘ஆல் பாஸ் எடுத்தால்...’ - புதுச்சேரி அரசுப் பள்ளிக்கு திடீர் பரிசுத் திட்டம் அறிவித்த பேரவைத் தலைவர்

By அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் மணவெளி சட்டப்பேரவை தொகுதி அபிஷேகபாக்கம் பகுதியில் உள்ள சேத்திலால் அரசு உயர் நிலைப்பள்ளி மாணவ - மாணவியருக்கு அரசின் விலையில்லா சைக்கிள் மற்றும் மழை அங்கிகளை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

புதுச்சேரி அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9ம் வகுப்பு பயிலும் மாணவ - மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் மற்றும் மழை அங்கி வழங்கும் திட்டத்தின் கீழ் மணவெளி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள அபிஷேகபாக்கம் சேத்திலால் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு, தொகுதியின் எம்எல்ஏ-வும், சட்டப்பேரவைத் தலைவருமான செல்வம் இன்று வழங்கினார்.

பின்னர் மாணவ - மாணவியருடன் கலந்துரையாடிய சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பள்ளியில் மாணவர்களுக்கு என்ன குறைகள் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார். ஆசிரியர்கள் பாடம் நடத்தும் விதம் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், “இந்த ஆண்டு நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்தப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ - மாணவியரும் தேர்ச்சி பெற்றால் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் எனது சொந்த நிதியை ஊக்கத் தொகையாக வழங்குவேன்" என்று செல்வம் அறிவித்தார்.

பள்ளியில் கழிவறை வசதி போதுமானதாக இல்லை என மாணவ - மாணவியர் கூறினர். விரைவில் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து புதிதாக கழிவறைகளை கட்டித்தர ஏற்பாடு செய்வதாக” சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் உறுதியளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE