உயர்கல்விக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு செப். 2-ம் முதல் சிறப்பு வழிகாட்டுதல் முகாம்

By செய்திப்பிரிவு

சென்னை: பிளஸ் 2 தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ‘உயர்வுக்குப் படி’ சிறப்பு முகாம் அனைத்து மாவட்டங்களிலும் செப்.2-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் கடந்தாண்டு மற்றும் நடப்பு கல்வியாண்டில் கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்காத பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, பெறாத, தேர்வு எழுதாத மற்றும் இடைநின்ற மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம் மே 6 முதல் 20-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த முகாம்களில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கைக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து அடுத்தகட்டமாக உயர்கல்விக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு ‘உயர்வுக்குப் படி’ எனும் சிறப்பு முகாம் செப்.2 முதல் அக்.1-ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது. இதுதவிர 2022-23, 2023-24 ஆகிய கல்வி ஆண்டுகளில் பிளஸ் 2 படித்து இதுவரை உயர்கல்வியில் சேராதமாணவர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று,உயர்கல்வியில் சேருவதற்கானவிழிப்புணர்வு, வழிகாட்டுதல்களையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளில் உயர்கல்வி வழிகாட்டி குழு மற்றும் பள்ளிமேலாண்மைக் குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் மாணவர்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று உயர்கல்வி செல்லாததற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவர்களின் படிப்பை தொடர்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்க உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE