வரலாற்றை ஆவணப்படுத்திய ஆய்வு மாணவர்!

பீமா கோரேகாவ் யுத்தம் - 200

‘மஹார்’கள் ஆண்ட ‘ராஷ்டிரம்’ (தேசம்) என்ற பொருளில் உருவானதுதான், ‘மஹாராஷ்டிரா’ எனும் மாநிலத்தின் பெயர். ஆனால், மஹார் இன மக்களின் வீரம், வரலாற்றில் பல காலமாக இருட்டடிப்பு செய்யப்பட்டே வந்திருக்கிறது…1927-ல், அம்பேத்கர், அந்த வரலாற்றை மீண்டும் மக்களின் நினைவுக்குக் கொண்டுவரும்வரை!

அந்த வரலாறுதான் பீமா கோரேகாவ் யுத்தம்! மகாராஷ்டிர மாநிலத்தை பேஷ்வாக்கள் ஆண்டு வந்தனர். அவர்களின் ஆட்சியில், மஹார் இனத்தவர்கள் சாதியரீதியான கொடுமைகள் பலவற்றைச் சந்தித்தனர். அப்போது, ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்தார்கள். அவர்களின் ராணுவத்தில், மஹார் இன மக்கள் சேர, அவர்களுக்குச் சமூகத்தில் கொஞ்சம் மரியாதை கிடைக்கிறது. ஆனால், அது ராணுவ வீரர்களுக்கு மட்டுமேயான மரியாதையாக இருந்தது.

யுத்தத்தின் முதல் ஆவணம்

இந்நிலையில், ஆங்கிலேயர்களுடன் இணைந்து, பேஷ்வாக்களை எதிர்த்தார்கள் மஹார் மக்கள். 1818-ம் ஆண்டில் பீமா கோரேகாவ் எனும் இடத்தில் தோராயமாக 25 ஆயிரம் பேஷ்வா வீரர்களை வெறுமனே 500 மஹார் இன வீரர்கள் தோற்கடித்தனர். இதனால், மஹார் இனத்தவரை பேஷ்வாக்கள் ‘துரோகிகள்’ என்று சொல்ல, ஆங்கிலேயர்களோ, மஹார்களின் வீரத்தைப் பறைசாற்றும்விதமாக யுத்தம் நடந்த இடத்தில், நினைவுத் தூண் எழுப்பினார்கள்.

அந்த யுத்தத்துக்கு 200-வது ஆண்டு இது. தங்களின் முன்னோர்களை நினைவுகூரும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி, அந்த நினைவிடத்துக்குச் சென்று, மஹார் இன மக்கள் கொண்டாடுவார்கள்.

கல்விப் புல வரலாற்றுப் புத்தகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்ட இந்த யுத்தத்தைப் பற்றி, ‘தி பேட்டில் ஆஃப் பீமா கோரேகாவ்’ என்ற தலைப்பில் கடந்த ஆண்டு, ஆவணப்படம் ஒன்று வெளியானது. பீமா கோரேகாவ் தொடர்பாக இருக்கும் ஒரே ஆவணம், தற்போதைக்கு இது மட்டும்தான். அதை இயக்கியவர், சோம்நாத் வாக்மாரெ. மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் கல்வி நிறுவனத்தில் ஊடகத் துறை ஆய்வு மாணவரான இவர், சென்னையில் அண்மையில் நடந்த இப்படத்தின் திரையிடலுக்கு வந்திருந்தார்.

வகுப்பறை அல்ல வகுப்பு அறை

“நான் என்னதான் கல்வி கற்றிருந்தாலும், சாதிதான் மற்றவர்களுக்கு முதலில் தெரிகிறது” என்பவர், அடிப்படையில் ஒரு சமூகவியல் பட்டதாரி.

கல்லூரிக் காலத்தில், மாணவர் இதழுக்கு இவர்தான் ஆசிரியர். அப்போதே, சாதிப் பிரச்சினைகள் குறித்து அதில் எழுதிவந்தார். அப்படித்தான் அவருக்கு, ஊடகத் துறையில் ஆர்வம் ஏற்பட்டது.

“அதன் பிறகு ஊடகவியல் துறையில் மேற்படிப்புப் படித்தேன். எங்களுடைய வகுப்பறை (class room) பெரும்பாலான நேரம் ‘வகுப்பு’ அறையாகத்தான் (caste room) இருந்தது. மிகவும் நுட்பமான சாதிய ரீதியான கொடுமைகளை நான் அங்கு சந்தித்தேன்” என்பவர், மேற்படிப்பை முடித்தவுடன் பூனேயில் உள்ள ‘ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா’வில் (எஃப்.டி.ஐ.ஐ.) கொஞ்ச காலம் பணியாற்றினார்.

“அங்கே பணியாற்றும்போது, நிறைய படங்களைப் பார்ப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது. நான் பார்த்த படங்கள் பலவற்றில், தலித்துகளை ‘சப்ஜெக்ட்’டாகப் பயன்படுத்தி இருந்தார்கள். தலித்துகள் என்றால் அவர்கள் பலியாட்கள், பாதிக்கப்பட்டவர்கள் என்பதாகவே சித்தரிக்கப்பட்டிருந்தனர். எந்தப் படத்திலும், தலித்துகளின் எழுச்சியை நேர்மறையாகக் காட்டவில்லை.

அப்போதுதான், நமக்கான சினிமாவை நாம்தான் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது” என்பவர் ‘கிரவுட் ஃபண்டிங்’ மூலமாகத் தன்னுடைய ஆவணப்படத்தை எடுத்துள்ளார். இதுவரை, இந்தப் படம் நாடு முழுக்க, கிட்டத்தட்ட 60 இடங்களில் திரையிடப்பட்டுள்ளது. ‘யூடியூப்’ தளத்திலும் காணக் கிடைக்கிறது (https://bit.ly/2JXKvb6).

வரலாற்றைத் தெரிந்துகொள்வது எப்படி?

தற்போது, அம்பேத்கரியச் சிந்தனையாளர் கெயில் ஓம்வெத் குறித்து ஆவணப்படம் ஒன்றை இயக்கிவருகிறார் சோம்நாத் வாக்மாரெ. சாதியைப் பற்றிப் பேசும்போது, அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள் என்கிறார் இவர். அது ஏன் என்று கேட்டபோது, “‘உயர் சாதி’, ‘தாழ்த்தப்பட்ட சாதி’ என்பதெல்லாம் தவறான வார்த்தைகள். ‘முற்படுத்தப்பட்ட வகுப்பினர்’, ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’, ‘பட்டியலினத்தவர்’ போன்ற சொல்லாடல்கள்தான் சரியானவை.

அம்பேத்கரே ‘தலித்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. அவ்வளவு ஏன்… ‘பட்டியலினத்தவர்’ என்ற வார்த்தையைக்கூட அவர் பயன்படுத்தவில்லை. ‘ஒடுக்கப்பட்ட வகுப்பினர்’ (Depressed classes) என்றுதான் பயன்படுத்தினார். இதுபோன்ற சொல்லாடல்களைக் கையாண்டால்தான், ‘தலித் ஐகான்’, ‘தலித் ஃபிலிம் மேக்கர்’, ‘தலித் எழுத்தாளர்’ போன்ற ‘அடையாளங்களை’ ஒழிக்க முடியும். எங்கேயாவது ‘பிராமின் ரைட்டர்’ என்று யாராவது அடையாளப்படுத்தப்பட்டுள்ளாரா?” என்கிறார்.

Research student சோம்நாத் வாக்மாரெ

“சமூகச் செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டே ‘பீமா கோரேகாவ் யுத்தம் ஒரு கட்டுக்கதை’ என்கிறாரே?” என்று கேட்டதற்கு, “‘தி வயர்’ இணைய இதழில் அவர் எழுதியக் கட்டுரையை நானும் படித்தேன். முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆனந்த் டெல்டும்டே, வரலாற்றாசிரியர் கிடையாது.

அவர் ஒரு மேலாண்மைக் கல்விப் பேராசிரியர். இரண்டாவது, அவர் அம்பேத்கரின் உறவினராக இருந்தபோதும், அவர் அம்பேத்கரியத்தைப் பின்பற்றுவதில்லை.

அவர் ஒரு கம்யூனிஸ்ட். அவர் எழுதிய கட்டுரையில், ‘பீமா கோரேகாவ் யுத்தம் நடைபெற்றதற்கு எந்தச் சான்றும் இல்லை’ என்கிறார். அப்படி என்றால், பீமா கோரேகாவில் உள்ள அந்த நினைவுச் சின்னம் எப்படி வந்தது? வரலாற்றை நாம் புதைபடிமங்களிலிருந்தும், பாறைகள், கற்கள் போன்றவற்றிலிருந்துதானே தெரிந்துகொள்கிறோம்.

‘அப்படி ஒரு யுத்தம் நடைபெறவில்லை என்று சொல்கிறீர்களே. அதற்கு என்ன சான்று?’ என்று நான் அவருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். இதுவரை அவர் பதிலளிக்கவில்லை!” என்கிறார்.

மாணவர்கள் வரலாற்றைப் பாடப்புத்தகங்களுக்கு வெளியே சமூகத்தில் படித்து, ஆராய்ந்து தெரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை இவருடைய ஆவணப்படமும் இவருடனான உரையாடலும் நமக்கு உணர்த்துகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

5 hours ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

8 days ago

கல்வி

10 days ago

கல்வி

10 days ago

கல்வி

10 days ago

மேலும்