“மாணவர்கள் படிக்கும்போதே அறிவியல் சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்” - அமைச்சர் பொன்முடி

By சி.பிரதாப்

சென்னை: மாணவர்கள் படிக்கும்போதே அறிவியல் சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

தேசிய விண்வெளி தினத்தின் முதலாமாண்டை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, ஒவியம் மற்றும் மாதிரி கண்காட்சி பொருள் தயாரித்தல் ஆகிய போட்டிகள் சமீபத்தில் நடத்தப்பட்டன. இதில் சென்னையைச் சேர்ந்த பள்ளிகளில் இருந்து 361 மாணவர்கள் கலந்து கொண்டதில் 81 பேர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப மைய வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினார்.

தொடர்ந்து விழாவில் அமைச்சர் பொன்முடி பேசியது: "மாணவர்கள் படிக்கும் போதே அறிவியல் சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும். வகுப்பில் ஆசிரியர் பாடம் கற்பிக்கும் போது ஆர்வமுடன் கேள்வி கேட்க வேண்டும். அதே நேரம் பகுத்தறிவு அடிப்படையில் அறிவை வளர்த்து கொள்வது அவசியமாகும். தற்போது தொழில்நுட்பம் பல மடங்கு முன்னேற்றம் கண்டுள்ளது. அதைக் கொண்டு அறிவியலை வளர்க்க வேண்டும்.

ஒரு காலத்தில் நம் முன்னோர்கள் சூரியன், சந்திரனைப் பார்த்து வழிபட்டார்கள். அவை எதைச் சுற்றி வருகிறது என்பது நமக்கு தெரியாது. ஆனால், நமக்கு பின்வரும் சந்ததிகள் நிலவில் குடியேறினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. மக்கள் தொகைப் பெருக்கத்தால் வேறு‌ கிரகங்களில் குடியேறும் நிலை கூட வரும். மேலும், அரசுப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து உயர்கல்வி படிக்க வேண்டும். செல்போன், கணினி போன்ற உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கற்க வேண்டும்.

தமிழகத்தில் ஆரம்பக் கல்விக்கு அடித்தளமிட்டவர் காமராஜர். உயர் கல்விக்கு வித்திட்டவர் கருணாநிதி. அந்த வரிசையில் முதல்வர் ஸ்டாலினும் "நான் முதல்வன்", "தமிழ் புதல்வன்" உட்பட பல்வேறு நலத்திட்டங்களை கல்வித் துறைக்கு அளித்து வருகிறார். மேலும், தொழில் துறையில் இருக்கும் வெளிநாடுகளில் இருக்கும் தொழில் நுட்பங்களை இங்கு கொண்டு வந்து மேம்படுத்துவதற்காக தான் தற்போது வெளிநாடுப் பயணம் மேற்கொண்டுள்ளார்" என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.

இந்நிகழ்வில் தொழில்நுட்பக் கல்வித் துறை ஆணையர் டி.ஆபிரகாம் , அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் இ.கி.லெனின் தமிழ்க்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் பேசுகையில், "பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வில் 3 சுற்றிலும் சேர்த்து இதுவரை மொத்தம் 1 லட்சத்து 16,620 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். துணைக் கலந்தாய்வும் முடிந்த பின்பு எஞ்சியுள்ள இடங்களை அந்தந்த கல்லூரிகளில் நேரடி சேர்க்கை மூலம் நிரப்பப்பட உள்ளன. அதேபோல், பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்கள் பொதுத் தளத்தில் வெளியான விவகாரத்தில் சைபர் க்ரைம் பிரிவில் புகார் தரப்பட்டுள்ளது. அவர்கள் உரிய விசாரணை நடத்தி எஃப்ஐஆர் பதிவு செய்வார்கள். மேலும், பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர் பணியிடங்கள் காலியாக இருப்பது தொடர்பாக எங்கு கேட்க வேண்டுமோ, அங்கு சென்று கேளுங்கள்" என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE