வட்டார அளவில் இணைய வழியில் நடத்தப்படுகிறது தமிழக அரசு பள்ளிகளுக்கான கலைத் திருவிழா போட்டிகள்

By சி.பிரதாப்

சென்னை: அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கான கலைத் திருவிழா வட்டார அளவிலான போட்டிகள் இணையவழியில் நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இன்று (ஆக.27) அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: “அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 2022-ம் ஆண்டு முதல் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இம்முறை மாணவர்களிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 'சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு' என்ற மையக் கருத்தின் அடிப்படையில் போட்டிகள் நடைபெற உள்ளன. தற்போது 1 முதல் 5-ம் வகுப்புக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி பள்ளி அளவிலான போட்டிகள் நேரடியாக நடத்தப்படும். இதற்கான நடுவர் குழுவில் எஸ்எம்சி குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் கலை வல்லுநர்கள் ஆகியோர் இடம்பெற வேண்டும்.

அதேநேரம் குறுவள மையம் மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் இணையதளம் வழியே செப்டம்பர் 16 முதல் 28-ம் தேதி வரை நடைபெறும். அதாவது, போட்டிகளுக்கான காணொலி எமிஸ் தளத்தில் பதிவேற்றப்பட்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எனவே, போட்டி நடைபெறும் போதே காணொலிகளை தெளிவாக எடுத்து பதிவேற்ற வேண்டும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி போட்டிகளை சிறந்த முறையில் நடத்தி முடிக்க தேவையான பணிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE