கலாம் முதல் வீரமுத்துவேல் வரை - இஸ்ரோ தமிழர்கள் | ஆக.23: தேசிய விண்வெளி நாள் சிறப்பு

By செய்திப்பிரிவு

அப்துல் கலாம்: தும்பா மையத்தின் ஆரம்ப கால ஆராய்ச்சிகளில் பங்கேற்ற அப்துல் கலாம், இஸ்ரோவின் தொடக்கக் காலம் முதல் ‘ரோகிணி-2’ செயற்கைக்கோள் வெற்றிகரமான ஏவுதல் வரை இணைந்திருந்தார். ராக்கெட்டுக்கான திட எரிபொருள் ஆராய்ச்சியில் அப்துல் கலாமின் பங்கு முக்கியமானது. பின்னர், நாட்டுப் பாதுகாப்புக்கான ஏவுகணைகள் ஆராய்ச்சியில் கலாமின் சேவை திசைதிரும்பியது.

மயில்சாமி அண்ணாதுரை: கோயம்புத்தூர் மாவட்டம் கோதவாடி கிராமத்தில் பிறந்த மயில்சாமி அண்ணாதுரை, தமிழ்வழியில் பள்ளிக் கல்வியை முடித்தவர். பொறியியலில் முதுகலைப் பட்டமும் பல்வேறு முனைவர் பட்டங்களும் பெற்ற இவர், அறிவியல் ஆய்வாளராக இஸ்ரோவில் பணியைத் தொடங்கினார். பல்வேறு ‘இன்சாட்’ திட்டங்களின் மேலாளராகப் பணியாற்றிய இவர் ‘சந்திரயான்’-1, ‘மங்கள்யான்’ செயற்கைக் கோள்களுக்கான திட்ட இயக்குநராகவும் பங்காற்றினார். இஸ்ரோவில் 2018 ஜூலை வரை பணியாற்றிய இவர், இயக்குநராக ஓய்வுபெற்றார்.

வளர்மதி: அரியலூரில் பிறந்து தமிழ்வழியில் பள்ளிப் படிப்பை முடித்த ந.வளர்மதி, பொறியியலில் முதுநிலைப் பட்டம் முடித்தவர். 1984 முதல் இஸ்ரோவில் பணியாற்றிவரும் இவர், 2011இன் ஜிசாட்-12 பணியின் திட்ட இயக்குநர் உள்படப் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். 2015இல் அப்துல் கலாமின் நினைவாகத் தமிழக அரசு வழங்க ஆரம்பித்த விருதைப் பெற்ற முதல் நபர் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு.

அருணன்: திருநெல்வேலி யில் பிறந்த இவர், விக்கிரமசிங்கபுரத்தில் பள்ளிப் படிப்பை நிறைவுசெய்தார். கோவை தொழில்நுட்ப நிறுவனத்தில் இயந்திரப் பொறியியல் படித்தார். திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி நிலையத்தில் 1984இல் சேர்ந்தார். வெற்றிகரமான மங்கள்யான் திட்டத்தின் திட்ட இயக்குநராகப் பணியாற்றினார்.

கே.சிவன்: கன்னியாகுமரி மாவட்டம் சரக்கல் விளை கிராமத்தில் பிறந்து, அரசுப் பள்ளி யில் தமிழ் வழியில் படித்து, இஸ்ரோவின் தலைவ ராக உயர்ந்தவர் கே.சிவன். இவரது பணிக்காலத்தில் சந்திரயான் - 2 நிலவுக்கு அனுப்பப்பட்டது.

வனிதா முத்தையா: சென்னையைச் சேர்ந்த வனிதா முத்தையா, இஸ்ரோ வில் கோள்களுக்கு இடையிலான ஆராய்ச்சி யில் திட்ட இயக்குநராகப் பொறுப்பேற்ற முதல் பெண். மின்னணு அமைப்புப் பொறியியலில் பட்டம் பெற்றவர். சந்திரயான் - 2 பணியின் திட்ட இயக்குநராக இருந்தவர்.

நிகர் ஷாஜி: தென்காசி மாவட்டத் தின் செங்கோட்டையில் பிறந்தவர். அரசுப் பள்ளியில் படித்தவர். மின்னணுவியலில் முதுகலைத் தொழில்நுட்பம் படித்திருக்கிறார். சூரியனை ஆராயும் ஆதித்யா-எல்1 திட்ட இயக்குநராக இருக்கிறார்.

பி.வீரமுத்துவேல்: விழுப்புரத்தைச் சேர்ந்தவர். அரசுப் பள்ளியில் படித்தவர். முதுகலைப் பொறியியல் படித்தவர். நிலவின் தென் துருவத்தைச் சென்றடைந்த முதல் நாடு என்கிற பெருமைக்குரிய சந்திரயான் - 3 திட்டத்தின் இயக்குநராக இருந்தவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE