தேசப் பிரிவினை கொடுமைகள் நினைவு தினம்: கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

By சி.பிரதாப்

சென்னை: தேசப் பிரிவினை கொடுமைகள் நினைவு தினத்தை (ஆக.14) அனுசரிக்கும் வகையில் உயர்கல்வி நிறுவனங்களில் அது தொடர்பான கருப்பொருளில் கண்காட்சி, கருத்தரங்குகள் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 1947-ம் ஆண்டு ஆக.14-ல் இந்தியாவிடமிருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது. அப்போது நடந்த வன்முறையில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து பிரிவினையால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் ஆக. 14-ம் தேதி தேச பிரிவினை கொடுமைகள் தினமாக மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் இது குறித்து யுஜிசி செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசப் பிரிவினை கொடுமைகள் நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் அது குறித்த கண்காட்சிக்கு இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஹெச்ஆர்), இந்திரா காந்தி தேசிய கலை மையம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. இது அம்ரித் மஹோத்சவ் இணையதளத்தில் ஹிந்தி, ஆங்கிலத்தில் டிஜிட்டல் வடிவில் இடம்பெற்றுள்ளது.

எனவே, இந்த கண்காட்சியை உயர்கல்வி நிறுவனங்களும் காட்சிப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் இந்த தினம் குறித்த கருத்தரங்குகள், விவாதங்களுக்கு ஏற்பாடு செய்து அதில் கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்ளை இடம்பெறச் செய்து பிரிவினையால் உயிரிழந்தவர்களின் தியாகங்கள், நாட்டுப்பற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும் இதன் மூலம் சமூகப் பிளவுகள், ஒற்றுமையின்மை போன்றவற்றை அகற்றி, ஒற்றுமை, சமூக நல்லிணக்க உணர்வை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை நினைவூட்ட வேண்டும். இது தொடர்பாக மத்திய கலாசார அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE