தமிழகத்தில் நாளை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை!

By சி.பிரதாப்

சென்னை: தமிழகத்தில் அனைத்து விதமான பள்ளிகளுக்கும் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்துவிதமான பள்ளிகளும் கடந்த ஜூன் 10-ம் தேதி முதல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட நடப்பு கல்வியாண்டுக்கான (2024-25) வருடாந்திர நாட்காட்டியில் 220 தினங்கள் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 19 சனிக்கிழமைகள் பள்ளிகள் செயல்படும் என்று நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பணிச் சுமையை குறைக்கும் வகையில் வேலை நாள்களை குறைக்க வேண்டுமென பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் சார்பில் கல்வித் துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. அதையேற்று கடந்த ஜூலையில் பள்ளி வேலைநாளாக இருந்த ஒரு சனிக்கிழமையில் (ஜூலை 13) விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து நடப்பு ஆகஸ்ட் மாதத்திலும் 10, 24-ம் தேதிகளில் பள்ளிகள் செயல்பட இருந்த 2, 4-ம் சனிக்கிழமைகளில் விடுமுறை தரப்பட்டுள்ளது. இதற்கான திருத்தப்பட்ட நாட்காட்டியும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி அனைத்துவித பள்ளிகளுக்கும் நாளை (ஆகஸ்ட் 10) விடுமுறையாகும். தொடர்ந்து சூழலுக்கேற்ப பள்ளி வேலை நாட்களை குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE