1,880 கணினி பயிற்றுநர்களுக்கு ஊதியம் கொடுப்பாணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித் துறை

By சி.பிரதாப்

சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் 1,880 தற்காலிக கணினிப் பயிற்றுநர்களுக்கு டிசம்பர் மாதம் வரை ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலர் சோ.மதுமதி அனைத்து மாவட்ட கருவூல கணக்கு அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி கல்வித் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் தற்காலிகமாக 1,880 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் 2006-ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டன. இந்த பணி இடங்களுக்கான பணிக்காலம் கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவு பெற்றது.

இவை தற்காலிக பணியிடங்களாக இருப்பதால் அதில் பணியாற்றும் நபர்களுக்கு அவ்வப்போது தொடர் நீட்டிப்பு ஆணை வெளியிடப்பட்டு சம்பளம் வழங்கப்படுகிறது. அதன்படி இந்த பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்குவதற்கான கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது.

இதையடுத்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரின் பரிந்துரையை ஏற்று இந்த 1,880 தற்காலிக பணியிடங்களுக்கும் வரும் டிசம்பர் மாதம் வரை ஊதியம் தருவதற்கான கொடுப்பாணை அளிக்கப்படுகிறது. எனவே, சார்ந்த அலுவலர்கள் சம்பளப் பட்டியல் தாக்கல் செய்யும்போது அதை ஏற்று ஊதியம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE