சி.எஸ்.ஐ. கெல்லட் பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு பேரணி - மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதிமொழி ஏற்பு

By செய்திப்பிரிவு

சென்னை: திருவல்லிக்கேணி சி.எஸ்.ஐ.கெல்லட் மேல்நிலைப் பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இது குறித்து அந்த பள்ளியின் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கல்வி சேவையில் 125 ஆண்டு: சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ. கெல்லட் மேல்நிலைப் பள்ளி, 125 ஆண்டுகளாக கல்விச் சேவையாற்றி வருகிறது. இந்த பள்ளியின் சார்பில் சுகாதாரம் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி அதன் வளாகத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சியின் சுகாதார கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தொடர்ந்து மாணவர்கள் மத்தியில், காலை உணவைதவிர்த்தலால் ஏற்படும் தீமைகள், உடற் சுகாதாரம், பிளாஸ்டிக் பயன்பாட்டில் ஏற்படும் தீங்குகள் ஆகியவை குறித்து மாநகராட்சி அதிகாரி சீனிவாசன் எடுத்துரைத்தார். அதன்பின் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை எவ்வாறு பிரித்தெடுப்பது என்பது தொடர்பாக மாநகராட்சியின் பணியாளர்கள் செயல் விளக்கம் செய்துகாட்டினர். இந்நிகழ்வில் சென்னை மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஜி.தங்கராஜ், பள்ளியின் தலைமையாசிரியர் டி.நிக்ஸன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிவில் பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதைத்தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அந்த பேரணியை தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் டி.எல்.பானர்ஜி சேகர் ஒருஙகிணைத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE