“உயர் கல்வி விகிதத்தை உயர்த்த அரசுடன் தனியார் நிறுவனங்கள் கைகோக்க வேண்டும்” - தேசிய கல்வி தொழில்நுட்ப மன்ற தலைவர்

By வ.செந்தில்குமார்

வேலூர்: “இந்தியாவில் அரசும், தனியார் நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயலாற்றும் போது மட்டுமே உயர் கல்வி விகிதத்தை மேம்படுத்த முடியும்” என்று தேசிய கல்வி தொழில்நுட்ப மன்றம் மற்றும் தேசிய அங்கீகார வாரிய தலைவர் அனில் டி.சஹஸ்ரபுதே தெரிவித்தார்.

வேலூர் விஐடியில் 39-வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று (ஆக.2) காலை நடைபெற்றது. இதில், இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் 8,205 பேர், ஆராய்ச்சி படிப்பு முடித்த 357 பேர் பட்டம் பெற்றனர். பல்வேறு படிப்புகளில் சிறப்பிடம் பிடித்த 65 பேர் தங்கப் பதக்கம் பெற்றனர். பட்டமளிப்பு விழாவுக்கு தலைமை தாங்கிய விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசும்போது, ‘‘ஒரு நாடு முன்னேற வேண்டும் என்றால் அதற்கு கல்விதான் அடிப்படை. ஆனால், இந்தியாவிலுள்ள 140 கோடி மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் மட்டுமே உயர்கல்வி பெற்றவர்களாக உள்ளனர்.

தேசிய கல்விக் கொள்கை இந்தியாவின் உயர்கல்வி விகிதத்தை 27 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படும் என தெரிவிக்கிறது. அது சாத்தியமாக வேண்டுமென்றால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்விக்கு செலவிட வேண்டும். ஆனால், இந்தியாவில் அதிகபட்சம் 3 சதவீதம் மட்டுமே கல்விக்காக ஒதுக்கப்படுகிறது. இதனால், கல்விக்கான சுமையை பெற்றோர்களே ஏற்க வேண்டியுள்ளது. இந்த நிலை மாறிட ஏழை மாணவர்களின் கல்விக்காக மத்திய, மாநில அரசுகள் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்’’ என்றார்.

நிகழ்ச்சியில் கவுரவ விருந்தினராக பங்கேற்ற டொயோட்டோ இந்தியா நிறுவனத்தின் முதுநிலை செயல் அதிகாரி டி.ஆர்.பரசுராமன், பேசும்போது, ‘‘இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இருக்கிறது. உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடான இந்தியா 3-வது இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவின் தொழில்நுட்பம், பொருளாதாரம், அறிவுத்திறன் உள்ளிட்டவை வளர்ந்து வருகிறது.

உலகின் இளம் தலைமுறையினர் அதிகம் வசிக்கும் நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கான உற்பத்தி திறன் 17 சதவீமாக இருக்கும் நிலையில் அது அடுத்த 10 ஆண்டுகளில் 29-30% உயரும். 6.8 கோடி சிறு குறு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 13-14 கோடியாகவும் மாற வாய்ப்புள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் சைபர் செக்யூரிட்டி, ரோபாடிக்ஸ், ஆட்டாமேஷன், ட்ரோன்கள், 3டி பிரிண்டிங், சாட் ஜிபிடி, ப்ளாக் செயின் உள்ளிட்ட 15 துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் இருக்கிறது’’ என்றார்.

நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தேசிய கல்வி தொழில்நுட்ப மன்றம் மற்றும் தேசிய அங்கீகார வாரிய தலைவர் அனில் டி.சஹஸ்ரபுதே, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசும்போது, ‘‘உயர் கல்விக்கு அரசு அதிகளவில் நிதி ஒதுக்க வேண்டும் என்பதுடன், தனியார் நிறுவனங்களும் அதற்கான பங்களிப்பை கொடுக்க வேண்டும். அரசும், தனியார் நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயலாற்றும் போது மட்டுமே உயர்கல்வி விகிதத்தை மேம்படுத்த முடியும். தொழில் நிறுவனங்கள் கல்வி, தனித்திறன், நற்பண்புகள் ஆகிய மூன்றும் வேலைக்கு வருபவர்களிடம் சமநிலையில் இருப்பதை எதிர்பார்க்கின்றன. எனவே, மாணவர்கள் கல்வியுடன் தனித்திறனையும், நற்பண்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் பெரும்பாலும் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்ப பாடப்பிரிவுகள் மீதே ஆர்வம் கொண்டுள்ளனர். இந்த ஆர்வம் 1990-ல் இருந்தே தொடங்கியது என்றாலும், இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. அதேசமயம், சிவில், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் ஆகிய துறைகளும் அதிகளவில் வேலைவாய்ப்பு அளிக்கக்கூடியவை என்பதால், அந்த துறைகளிலும் மாணவர்கள் தங்கள் அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் கடந்த 2014-ல் பதிவு செய்யப்பட்ட 400 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இருந்த நிலையில், தற்போது அது 1.50 லட்சமாக உள்ளது. அந்தளவுக்கு நாட்டில் சுய தொழிலுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. சுயதொழில்கள் மூலம் அதிக அளவில் வருவாய் ஈட்ட முடிவதுடன், பலருக்கும் வேலைவாய்ப்பு அளித்திடவும் முடியும். எனவே, மாணவர்கள் அதிகளவில் சுயதொழில் தொடங்க ஆர்வம் காட்ட வேண்டும். அத்துடன், மாணவர்கள் எப்போதும் கற்பதை நிறுத்திவிடக்கூடாது. தங்கள் வாழ்நாள் முழுமைக்கும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும். மாணவர்கள் சுதந்திர பறவையாக இருக்காமல் லட்சுமண ரேகை போன்று ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும்.

இந்தியா என்ன செய்யப்போகிறது என்று உலக நாடுகள் நம்மை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக யுபிஐ மூலம் பர்ஸ் இல்லாமல் பொருட்களை வாங்கக்கூடிய நிலையை காட்டியுள்ளோம். இந்திய மாணவர்களுக்காக APAAR – ID ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், மாணவர்கள் பதிவு செய்து கொள்வதன் மூலம் மாணவர்களின் திறன் மற்றும் அனுபவத்தை எளிதாக ஒருங்கிணைக்க முடியும். நீங்கள் படித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

உங்களிடம் இருக்கும் மடிக்கணினி, செல்போன் மூலம் தொடர்ந்து படித்துக் கொண்டே இருங்கள். யோகா மற்றும் தியானத்தில் கவனம் செலுத்துங்கள். இது உங்கள் உடலுக்கும் மனதுக்கும் அவசியமானது. நீங்கள் முன்னாள் மாணவர்களாக இங்கு மீண்டும் வரும்போது உங்களுக்கு கிடைத்த அனுபவங்களை மற்றவர்களுக்கு எடுத்துக்கூறுங்கள். அது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார். பட்டமளிப்பு விழாவில் விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், உதவி துணைத் தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன், துணைவேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் டி.ஜெயபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE