எடப்பாடி அருகே அரசு தொடக்கப் பள்ளியில் பூஜ்ஜியம் ஆன மாணவர் வருகை: செயல்பாடுகள் நிறுத்தம்

By த.சக்திவேல்

மேட்டூர்: எடப்பாடியை அடுத்த பொன்னாக்கவுண்டனூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், கடந்த ஒரு வார காலமாக மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வராததால் அப்பள்ளியில் கற்றல், கற்பித்தல் உள்ளிட செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பொன்னாக்கவுண்டனூர் கிராமத்தில், சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள பிரதான சாலையை ஒட்டி நவீன சமையல் கூடம், விளையாட்டு மைதானம் என அனைத்து வசதிகளுடன் கூடிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர். இந்தப் பள்ளியில் தலைமையாசிரியருடன் சேர்த்து இருவர் பணியாற்றுகின்றனர்.

இந்நிலையில், பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தது. குறிப்பாக, கடந்த சில மாதமாக 12 மாணவர்கள் மட்டுமே இங்கு கல்வி பயின்று வந்தனர். கடந்த 15-ம் தேதி முதல் இப்பள்ளியில் மாணவர் வருகை முற்றிலும் நின்றது. அதன் பிறகும் சில நாட்கள் மீண்டும் மாணவர்கள் பள்ளிக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வராததால், உயர் அலுவலர்களின் வழிகாட்டுதலின் பேரில் பள்ளியின் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகை வைத்து பள்ளி பூட்டப்பட்டது.

எடப்பாடி அருகே பொனனாக்கவுண்டனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி

இது குறித்து அப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், "இந்தப் பள்ளியில் கல்வி பயின்று வந்த மாணவர்கள் தனியார் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சென்றுவிட்டதால், மாணவர் வருகை முழுமையாக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஊர் தலைவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் மாணவர்களை தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு பள்ளிக் கல்வித் துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருகை தரும் நிலையில், பள்ளி மீண்டும் செயல்பட தொடங்கும்" என ஆசிரியர்கள் கூறினர்.

இது குறித்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் கூறும்போது, "மாணவர்கள் இல்லாததால் பள்ளியில் கற்றல், கற்பித்தல் பணி நிறுத்தப்பட்டது குறித்து மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர் ஆகியோரை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்படுள்ளது" என கல்வி அலுவலர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE