குரூப்-1 முதல்நிலை தேர்வுக்கான கீ ஆன்ஸர் வெளியீடு

By ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: குரூப்-1 முதல்நிலைத் தேர்வு மற்றும் ஒருங்கிணைந்த குரூப்-1 பி, மறறும் குரூப்-1 சி முதல்நிலைத் தேர்வுக்கான கீ ஆன்ஸர் வெளியிடப்பட்டது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி (டிஇஓ) காலிப் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-1 பி, குரூப்-1 சி முதல்நிலைத் தேர்வு ஜூலை 12ம் தேதி 63 மையங்களில் நடந்தது. டிஎன்பிஎஸ்சி கணினிவழியில் நடத்திய இத்தேர்வை தமிழகம் முழுவதும் 8,433 பேர் எழுதினர். இத்தேர்வுக்கான உத்தேச விடைகளை (கீ ஆன்ஸர்) டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டது.

தேர்வெழுதியவர்கள் தங்கள் பதிவெண், விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு உத்தேச விடைகளை அறிந்துகொள்ளலாம். அதேபோல், துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்காக கடந்த 13ம் தேதி நடந்த குரூப்-1 முதல்நிலைத் தேர்வை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 340 பேர் எழுதினர்.

இத்தேர்வுக்கான உத்தேச விடைகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. மேற்கண்ட இரு தேர்வுகளுக்கான உத்தேச விடைகளில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் அவற்றை உரிய ஆதாரங்களுடன் ஜூலை மாதம் 30ம் தேதிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE