சென்னை: “விளையாட்டு வீரர்களுக்கு பொறியியல் படிப்பில் அடுத்த ஆண்டு முதல் 2 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும்,” என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். தற்போது விளையாட்டு வீரர்களுக்கு ஒரு பொறியியல் கல்லூரிக்கு ஒரு இடம் என்ற அடிப்படையில் மொத்தம் 500 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
பொறியியல் மாணவர் சேர்க்கையில் சிறப்பு பிரிவினருக்கான இணையவழி கலந்தாய்வு இன்று (ஜூலை 22) தொடங்கியது. சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகத்தில் இக்கலந்தாய்வை அமைச்சர் பொன்முடி தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு முதல்கட்டமாக தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
முதல் நாளில் சிறப்பு பிரிவினரில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் 111 இடங்களும், விளையாட்டு வீரர்கள் பிரிவில் 38 இடங்களும், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் பிரிவில் 11 இடங்களும் உள்ளன. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 27-ம் தேதி முடிந்ததும் ஜூலை 29-ம் தேதி முதல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும்.
ஏற்கெனவே வெளியிடப்பட்ட பொறியியல் கலந்தாய்வு அட்டவணையின்படி, தொடர்ந்து, துணை கலந்தாய்வு , எஸ்சி அருந்ததியர் பிரிவில் ஏற்படும் காலியிடங்களில் எஸ்சி மாணவர்களை கொண்டு நிரப்புவதற்கான கலந்தாய்வு என அடுத்தடுத்து கலந்தாய்வுகள் நடத்தப்பட்டு செப்டம்பர் 11-ம் தேதி கலந்தாய்வு பணிகள் முடிக்கப்படும். கலந்தாய்வு முடிந்த பிறகு காலியிடங்கள் இருந்தால் அந்த இடங்களை நிரப்ப சிறப்பு தளர்வு அளிக்கப்படும். விளையாட்டு வீரர்களுக்கு பொறியியல் படிப்பில் அடுத்த ஆண்டு முதல் 2 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும்,
» நடப்பு நிதியாண்டில் ஜிடிபி 6.5 - 7% ஆக உயரும்: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
» மலை ரயில் பாதையில் மரங்கள் விழுந்ததால் உதகை - குன்னூர் ரயில் ரத்து
நடப்பு கல்வி ஆண்டில் மொத்தம் 433 பொறியியல் கல்லூரிகளில் இருந்து ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 342 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை இடங்களின் எண்ணிக்கையை விட குறைவாக இருப்பதால் அனைத்து மாணவர்களுக்கும் இடம் உறுதி. அதேநேரத்தில் விருப்பமான கல்லூரி கிடைக்குமா? பிடித்தமான பாடப்பிரிவு கிடைக்குமா? என்பதுதான் சவாலாக இருக்கும்.
அரசு பள்ளியில் படித்து பொறியியல் படிப்பு உள்ளிட்ட உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டத்தின்கீழ் மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கு ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்கள் ரூ.1000 உதவித்தொகை பெறுவார்கள்.
துணைவேந்தர் நியமன பிரச்சினை: சென்னை பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியாக இருப்பது பற்றி கேட்கிறீர்கள். துணைவேந்தர்களை நியமிப்பதற்கென பல்கலைக்கழக விதிமுறைகள் உள்ளன. செனட் உறுப்பினர், தமிழக அரசின் பிரதிநிதி, ஆளுநரின் பிரதிநிதி ஆகியோர் அடங்கிய தேர்தல் குழு அமைக்கப்பட்டு அக்குழு பரிந்துரை செய்யும் ஒருவர் துணைவேந்தராக நியமிக்கப்படுவார். இதுதான் நடைமுறை.
ஆனால், புதிதாக யுஜிசி பிரதிநிதியை சேர்க்க வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, துணைவேந்தர்களை விரைவில் நியமிப்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்று அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஆபிரகாம், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் புருஷோத்தமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
கல்வி
3 hours ago
கல்வி
3 hours ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
9 days ago
கல்வி
10 days ago
கல்வி
11 days ago
கல்வி
13 days ago