இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு வழிகாட்டும் நாகர்கோவில் பள்ளி மாணவர்!

By என்.சன்னாசி

மதுரை: பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆரம்ப கால கட்டத்தில் புதிய கண்டுபிடிப்புகளை செயல்படுத்துவதில் பல்வேறு சிரமம் இருக்கும். இத்துறையில் ஆர்வம் கொண்டு முயற்சிக்கும் இளம் கண்டுபிடிப்பாளர் களுக்கான சிரமத்தை போக்கும் வகையில் 10-க்கும் மேற்பட்ட அறிவியல் கண்டுபிடிப்பு குறித்த செயல்முறை விளக்க புத்தகத்தை (தமிழ், ஆங்கிலம்) தயாரித்து சாதித்துள்ளார் நாகர்கோவில் பகுதி தனியார் பள்ளி ஒன்றில் படிக்கும் பிளஸ் 1 மாணவர் எஸ்.எம்.விகாஷ்குமார்.

கண்டுபிடிப்புக்கான பொருட்களின் பட்டியல், அதற்கான விளக்க புகைப்படம், விடியோ காட்சிகளின் இணைப்புகள் என பல்வேறு தகவல் அடங்கிய ‘யோசனைகள் முதல் தாக்கம் வரை ’ என்ற ஒரு இளம் கண்டுபிடிப்பாளருக்கான வழிகாட்டி புத்தகத்தில் எளிமைப்படுத்தி இருக்கிறார் அந்த மாணவர். இதுகுறித்து விகாஷ்குமார் கூறியதாவது: அறிவியல் கண்டுபிடிப்பு என்பது மக்களின் வாழ்க்கை பிரச்சினைகளுக்கு எளிய தீர்வு அளிக்கும். புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க, மாணவர்கள் முதலில் ஒரு பிரச்சினையை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் முழு ஈடுபாடு காட்டி, தங்களது யோசனையை இணைக்க வேண் டும்.

புதிதாக கண்டுபிடிக்கும் பொருள் இச்சமூகத்துக்கு உதவ வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் யோசனை இருக்கும் பல மாணவர்களுக்கு புரோஜக்ட் (திட்டம்) உருவாக்கம் வசதி, வழிகாட்டுதல் இன்றி சிரமப்படும் மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சி நடத்துகிறேன். பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி கல்லூரி மாணவர்களுக்கும் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்த அறிவியல் குறித்து பயிற்சி அளிக்கிறேன். இப்பயிற்சி மூலம் சிறிய ஐடியாக்களும் அறிவியல் கண்டுபிடிப்புகளாக வடிவம் பெறுகின்றன. அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கி சாதிக்க துடிக்கும் மாணவர்களுக்கு யூடியூப் சேனல் - https://www.youtube.com.@doodadprojects535 ஒன்றை தொடங்கி உள்ளேன்.

புத்தகத்தில் ஒவ் வொரு செயல்முறை ஆராய்ச்சியிலும், க்யூ ஆர் குறியீடு வழங்கப் பட்டுள்ளது. இது வாசகரை ஒரு யூடியூப் வீடியோவுடன் இணைக்கும். இதன்மூலம் 60-க்கும் மேற்பட்ட செய்முறைகளை விளக்கப்படுகின்றன. சமூகத்துக்கு பயனுள்ள ஆக்கப்பூர்வ செயலை முன்னெடுக்க, அறிவியல் பயிற்சி வழங்கியதால் இந்து தமிழ் திசை நாளிதழ் மூலம் ‘ நற்சிந்தனை நன்னடை’ என்ற விருதும் பெற்றுள்ளேன். கன்னியாகுமரி ஆட்சியர் ஸ்ரீதர் என்னை பாராட்டி சான்றிதழ் வழங்கி உள்ளார். அறிவியல் பயிற்சி கொடுத்து ‘ ஸ்டார்ட் அப் ’ நிறுவனம் தொடங்கும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு உறுதுணையாக இருப்பதே எனது நோக்கம். என்று கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE