சென்னை ஐஐடியின் 61-வது பட்டமளிப்பு விழா: இஸ்ரோ தலைவர் உட்பட 444 பேருக்கு பிஎச்.டி

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஐஐடி-யின் 61-வது பட்டமளிப்பு விழாவில் பி.டெக், எம்.டெக், எம்.எஸ் உள்ளிட்ட படிப்புகளில் 2,636 மாணவர்கள் பட்டமும், இஸ்ரோ தலைவர் சோம்நாத் உட்பட 444 பேர் பிஎச்.டி பட்டமும் பெற்றனர். விழாவில் சிறப்பு விருந்தினராக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி பிரையன் கே.கோபில்கா பங்கேற்றார்.

மத்திய அரசின் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை ஐஐடி-யின் 61-வது பட்டமளிப்பு விழா ஐஐடி வளாகத்தில் உள்ள மாணவர் செயல்பாட்டு மைய அரங்கில் நேற்று நடைபெற்றது. ஐஐடி ஆட்சிமன்றக் குழு தலைவர் பவன் கோயங்கா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், 2012-ம்ஆண்டு வேதியியல் துறையில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி பிரையன் கோபில்கா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பி.டெக், எம்.டெக், எம்.எஸ் படிப்புகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பதக்கங்களையும், சிறப்பு விருதுகளையும் வழங்கினார்.

விழாவில், மொத்தம் 2,636 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். 444 பேர் பிஎச்.டி பட்டம் பெற்றனர். அவர்களில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் விஞ்ஞானி சோம்நாத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராக்கெட் மூலமாக செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும்போது ஏற்படும் எலெக்ட்ரான் அதிர்வுகளைக் குறைப்பது தொடர்பாக அவர் ஆய்வு செய்திருந்தார்.

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி பிரையன் கோபில்கா பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தும்போது, எனது தந்தை பேக்கரி உரிமையாளர். தாய் இல்லத்தரசி. மிகவும்சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். மிக உயர்ந்த இலக்கு, கடின உழைப்பு, விடாமுயற்சி - இவற்றினால்தான் நோபல் பரிசு பெறும் அளவுக்கு என்னால் உயர முடிந்தது. எனது உயிரியல் ஆசிரியர் எனது ஆராய்ச்சி ஆர்வத்தை பெரிதும் ஊக்குவித்தார். தற்போது பருவநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப தாக்கம்என புதிய சவால்கள் உருவாகியுள்ளன என்று குறிப்பிட்டார்.

ஐஐடி ஆட்சிமன்றக் குழு தலைவர் பவன் கோயங்கா தலைமையுரையில், இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு10-வது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா தற்போது 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. வெகுவிரைவில் 3-வது இடத்தைபிடிக்கும். 2047-ம் ஆண்டு வளர்ந்த இந்தியாவாக உருவெடுக்கும் வகையில் நம் நாட்டின் பொருளாதார இலக்கு 30 முதல் 35 டிரில்லியன் அமெரிக்க டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

பிஎச்.டி பட்டம் பெற்ற இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசும்போது, ஐஐடி நுழைவுத்தேர்வை சந்திக்கும் தைரியம் இல்லாத சாதாரண கிராமத்து மாணவனாக இருந்தேன். பெங்களூரு இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஐஐஎஸ்சி) முதுகலைப் பட்டம் பெற்றேன். தற்போது ஐஐடியில் பிஎச்.டி பட்டம் பெறுவது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. நான் பிஎச்.டி படிக்க அனுமதிவழங்கிய இந்திய விண்வெளித் துறைக்கும் எனது ஆராய்ச்சிக்கு வழிகாட்டிய ஐஐடி பேராசிரியர்களுக்கும் நன்றி என்றார்.

முன்னதாக, ஐஐடி இயக்குநர் வி.காமகோடி பேசும்போது, ஐஐடி படிப்பில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் முறை இந்த ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் கலாச்சார இடஒதுக்கீடு வழங்க திட்டமிட்டு வருகிறோம் என்று குறிப்பிட்டார்.

பாலஸ்தீன போர் குறித்து பேசிய மாணவரால் பரபரப்பு: ஐஐடி பட்டமளிப்பு விழாவில் படிப்பு, கல்வி அல்லாத இதர செயல்பாடுகளில் சிறந்து விளங்கியதற்காக மாணவர் சி.ஆதிய்யாவுக்கு குடியரசு தலைவர் பரிசு, பாரத் ரத்னா விஸ்வேஸ்வரய்யா நினைவு பரிசும், கே.வி.விக்ரமுக்கு வி.சீனிவாசன் நினைவுப் பரிசும், மாணவர் எஸ்.ஜோயலுக்கு டாக்டர் சங்கர் தயாள் சர்மா பரிசும், தனஞ்செய் பாலகிருஷ்ணனுக்கு ஆளுநர் பரிசும் வழங்கப்பட்டன.

சிறப்பு பரிசு பெற்ற மாணவர்கள் சார்பில் ஆதித்யாவும், தனஞ்செய் பாலகிருஷ்ணனும் ஏற்புரை ஆற்றினர். தனஞ்செய் பாலகிருஷ்ணன் பாலஸ்தீனத்தில் இன அழிப்பு போர் நடக்கிறது என்று குறிப்பிட்டு பேசும்போது மேடையில் அமர்ந்திருந்தவர்களும் அரங்கில் அமர்ந்திருந்த மாணவர்கள், பெற்றோர் மற்றும் பேராசிரியர்கள் ஒரு கணம் திகைத்தனர். சிலர், தனஞ்செய் பாலகிருஷ்ணனின் பேச்சை பாராட்டும் வகையில் கரவொலி எழுப்பினர். தொடர்ந்து அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

4 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

மேலும்