விருதுநகர்: பள்ளி அளவில் முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் காமராஜர் விருது

By இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகர் கல்வி மாவட்ட அளவில் பள்ளிகளில் 10 மற்றும் பிளஸ்-1 வகுப்பில் முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மணவிகளுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று காமராஜர் விருது வழங்கப்பட்டது.

விருதுநகர் கல்வி மாவட்டத்தில் உள்ள விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், திருச்சுழி பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்சி பள்ளிகள் என 183 உயர்நிலைப் பள்ளிகளிலும், 100 மேல்நிலைப் பள்ளிகளிலும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1 வகுப்புகளில் பள்ளி அளவில் முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் 949 பேருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் விருது வழங்கும் விழா விருதுநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து கலந்துகொண்டு மாணவர்களின் எதிர்கால திட்டமிடல் குறித்து நகைச்சுவையாகப் பேசினார்.

நிகழ்ச்சியில் மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசுகையில், "உங்களை ஊக்குவிப்பதற்காகவே காமராஜர் விருது வழங்கப் படுகிறது. இதைப் பார்க்கும் போதெல்லாம் உங்களுக்குள் மேலும் மேலும் உற்சாகம் பிறக்க வேண்டும். படிப்பில் முழு கவனத்தையும் ஆர்வத்தையும் செலுத்த வேண்டும். உங்கள் இலக்கை முதலில் நிர்ணயித்துக் கொள்ளுங்கள். எந்த நிலையிலும் உங்கள் குறிக்கோளையும் இலக்கையும் மாற்றாதீர்கள். நீங்கள் பெறும் வெற்றி உங்கள் குடும்பத்திற்கும், பள்ளிக்கும், ஊருக்கும் மட்டுமின்றி நாட்டுக்கே பெருமை சேர்க்க வேண்டும்." என மாணிக்கம் தாகூர் கூறினார்.

அதைத்தொடர்ந்து, மாணவ, மாணவிகளுக்கு காமராஜர் விருதுகளை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் ஸ்ரீ ராஜாசொக்கர், மூத்த நிர்வாகி சிவகுருநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE