செய்யூர் வட்டத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் தொலைதூரம் சென்று உயர் கல்வியை தொடர முடியாத நிலை உள்ளதால், செய்யூரை மையப்படுத்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் மாவட்டத்தின் கடைசி பகுதியில் உள்ளதால் அப்பகுதியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக பல கி.மீ., பயணித்து செங்கல்பட்டு தாம்பரம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், முறையான பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்படாமல் உள்ளது. இதிலும், பள்ளிக் கல்வியை நிறைவு செய்யும் மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்காக சுமார் 100 கி.மீ., பயணித்து சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயில வேண்டிய நிலை உள்ளது.
ஏனென்றால், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு நகரில்ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் மற்றும் உத்திரமேரூர் அருகே உள்ள திருப்புலிவனம் பகுதியில் ஒரு அரசு கல்லூரி, மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி பகுதியில் ஒரு அரசு கல்லூரி மட்டுமே அமைந்துள்ளன. இதில், பெரும்பாலும் கிராமப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகளே அதிகம் பயின்று வருகின்றனர்.
இதிலும், செங்கல்பட்டு நகரில் உள்ள அரசு கல்லூரியில் மட்டுமே அதிக இடங்கள் உள்ளன. இதனால், செய்யூர், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் இக்கல்லூரியில் அதிகம் விண்ணப்பிக்கும் நிலை உள்ளது. இதிலும், இடம் கிடைப்பது அரிதான செயலாக உள்ளது. அப்படியே கிடைத்தாலும், நாள்தோறும் சுமார் 80 கி.மீ., தொலைவு பயணித்து உயர்கல்வி பயில வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், செய்யூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப்பகுதியில் இருந்து நகரப்பகுதிக்கு வருவதற்கு போதிய பேருந்து வசதிகளும் இல்லை.
» தமிழகத்தில் ஜூலை 12, 13 தேதிகளில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
» மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல்: காங்கிரஸ் 130 இடங்களில் போட்டியிட வாய்ப்பு
இதனால், பெற்றோர்கள் பெண் பிள்ளைகளை தொலைதூரம் அனுப்புவதற்கு தயக்கம் காட்டுவதால், பள்ளிக் கல்வியோடு பெரும்பாலான மாணவிகள் தங்களின் கல்வியை முடித்துக்கொள்ளும் நிலை உள்ளதாக தெரிகிறது. செங்கல்பட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பாண்டில் 990 இடங்களுக்கு 35 ஆயிரத்து 600 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதனால்,இங்கு இடம் கிடைக்காத மாணவ, மாணவிகள் உயர்கல்வியை தொடர்வதற்காக சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள அரசு கல்லூரிகளில் சேரும் நிலை உள்ளது. மேலும், தொலைதூரம் சென்று வர போதிய வருவாய் இல்லாத காரணத்தால் விடுதியிலும் மற்றும் குழுவாக வாடகை வீட்டில் தங்கியும் உயர்கல்வி பயின்று வருகின்றனர்.
அதனால், மாவட்டத்தின் கடைசி பகுதியில் உள்ள செய்யூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் செய்யூரை மையப்படுத்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஏற்படுத்த வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, செய்யூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கூறியதாவது: செங்கல்பட்டு அரசு கல்லூரியில் இடம் கிடைக்காவிட்டால், மாவட்டத்தின் பிற பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் விண்ணப்பிக்கிறோம். ஆனால், அக்கல்லூரிகளில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்குகின்றனர். அதை நாங்கள் குறை கூறவில்லை. ஆனால், மாவட்டத்தின் கடைகோடியில் உள்ளசெய்யூர் வட்டத்தை சேர்ந்த எங்களுக்கு என்ன வழி.
தொலைதூரம் சென்று விடுதியில்தங்கி உயர்கல்வி பயில குடும்பத்தில் வருமான வசதியில்லை. அதனால், உயர் கல்வியை தொடர வழியின்றி பள்ளி கல்வியோடு எங்களை பணிக்கு அனுப்பும் நிலை உள்ளது. அதனால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம் என்றனர்.
இதுகுறித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சதிஷ் கூறியதாவது: செய்யூர் வட்டம் மிகவும் பின் தங்கிய பகுதியாகவே உள்ளது. ஏனென்றால், மாவட்ட தலைநகரில் இருந்து தொலைதூரத்தில் உள்ளதால் இப்பகுதியில் பல்வேறு அரசு திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்கு கூட உயர் அதிகாரிகள் வருவதில்லை.
இந்நிலையில், அரசு கல்லூரி தேவை என்பதுஇப்பகுதிக்கு மிகவும் அவசியமாகிறது. மேல்மருவத்தூர் பகுதியில் தனியார் கல்லூரி இருந்தாலும், நடுத்தரம் மற்றும் ஏழை எளிய மக்கள் தனியார் கல்லூரிகளில் தங்களின் பிள்ளைகளை சேர்ப்பது என்பது மிகவும் கடினம்.
அதனால், செய்யூரில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும்என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். ஒவ்வொரு சட்டப்பேரவை தேர்தலின்போதும், பல்வேறு அரசியல் கட்சியினரும் அரசு கல்லூரி அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கின்றனர்.
ஆனால், இதுவரையில் அதற்கான நடவடிக்கையில்லை. மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி செய்யூர்தொகுதி எம்எல்ஏ மற்றும் தமிழக அரசுக்கு பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரையில் கல்லூரிக்கான அறிவிப்புதான் இல்லை. அதனால், மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்திஇப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி தமிழக அரசுக்கு மனுவாக வழங்க உள்ளோம் என்றார்.
இதுகுறித்து, செய்யூர் தொகுதி எம்எல்ஏ பாபு கூறியதாவது: செய்யூரில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலும் முன்வைத்துள்ளேன். துறை சார்ந்த அமைச்சரும் கோரிக்கையை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார் என்றார்.
முக்கிய செய்திகள்
கல்வி
20 hours ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
8 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
10 days ago
கல்வி
10 days ago
கல்வி
11 days ago
கல்வி
11 days ago