வினாத்தாள் சர்ச்சை: பிஇ 2-ம் ஆண்டு சுற்றுச்சூழல் அறிவியல் தேர்வை தள்ளிவைத்தது அண்ணா பல்கலை.

By ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: வினாத்தாள் கட்டு முன்கூட்டியே திறக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், இன்று பிற்பகல் நடைபெறுவதாக இருந்த பிஇ 2-ம் ஆண்டு சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் நீடித்த வளர்ச்சி பாட தேர்வு ஜூலை 31-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று பிற்பகல் அமர்வில் பொறியியல் 2-ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் நீடித்த வளர்ச்சி பாட தேர்வு நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில், தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் வினாத்தாள் கட்டு இன்று காலையிலேயே திறக்கப்பட்டதாகவும் அக்கல்லூரி மாணவர்களுக்கு வினாத்தாள் தெரிந்து விட்டதாகவும் தகவல்கள் பரவின. இதைத்தொடர்ந்து, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் நீடித்த வளர்ச்சி பாட தேர்வு ஜூலை 31-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பி.சக்திவேல் பல்கலைக்கழக மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கு இன்று அனுப்பியுள்ள ஓர் அவசர அறிவிப்பில், “ஜூலை 10-ம் தேதி பிற்பகல் நடைபெறுவதாக இருந்த சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் நீடித்த வளர்ச்சி பாட தேர்வு ஜூலை 31-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.

அத் தேர்வு வினாத்தாள் கட்டினை பிரிக்காமல் பல்கலைக்கழகத்தில் திரும்ப ஒப்படைக்குமாறு தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு தகவல் அனுப்ப வேண்டும். அதோடு தேர்வு தள்ளிவைக்கப்பட்ட விவரத்தை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். எனினும், அந்த தேர்வு எந்த காரணத்துக்காக தள்ளிவைக்கப்படுகிறது என்பதற்கான காரணம் எதுவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE