நீரின் தரம் குறித்து அறிய சென்னை ஐஐடியின் 4 மாத படிப்பு: விண்ணப்பிக்க ஜூலை 20 கடைசி நாள்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஐஐடி, இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நீரின் தரம் குறித்த படிப்பை ஹைப்ரிட் முறையில் வழங்குகிறது. நான்கு மாதகால ஹைபிரிட் படிப்பிற்கான விண்ணப்ப பதிவுக்கு ஜூலை 20-ந் தேதி கடைசி நாள்.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலைக்கழகம் மற்றும் கோவையில் உள்ள கேஎம்சிஎச் ஆராய்ச்சி அறக்கட்டளை (KMCH-RF) ஆகியவற்றுடன் இணைந்து நீரைப் பற்றி மக்கள் நன்கு அறிந்து கொள்ளும் வகையில் நீரின் தரம் குறித்த படிப்பை வழங்குகிறது. என்பிடெல் ஆன்லைன் பிளாட்பார்ம் மூலம் ஹைபிரிட் முறையில் வழங்கப்படும் இந்த நான்கு மாத காலப் பாடநெறி, அறிவியல் மற்றும் பொறியியல் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கும், நீர் தரத்தில் ஆர்வம்கொண்ட தொழில்நுட்பப் பின்னணி உடையவர்களுக்கும் ஏற்றதாகும்.

மாணவர்களைக் கொண்டு இந்திய அளவிலும், உலக அளவிலும் நீர் வரைபடத்தை உருவாக்கும் பணியில் பாடத்திட்ட அமைப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நீரின் தரம் குறித்த அடிப்படை அம்சங்களின் விரிவான அறிமுகத்திற்குப் பின், ஆய்வுகள் உள்பட நடைமுறை சோதனைகளை மாணவர்கள் நடத்துவார்கள். பாடத்திட்ட காலம் நிறைவடைந்ததும் அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். கல்வி நிறுவனங்கள் தங்களது பட்டப்படிப்பின் ஒரு பகுதியாக இந்த சான்றிதழையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஜூலை 29, 2024 அன்று தொடங்கப் போகும் இந்தப் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 20, 2024 அன்று நிறைவடையும். ஆர்வமுடைய விண்ணப்பதாரர்கள் பின்வரும் இணைப்பின் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்: https://bit.ly/3zgpkMy

ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர்களான டி.பிரதீப், லிகி பிலிப், டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராம் ஃபிஷ்மேன், கேஎம்சிஎச் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் டாக்டர் ஜி.வேல்முருகன் ஆகியோர் இப்பாடத்திட்டத்தின் பயிற்றுநர்களாக செயல்படுவார்கள். இதுதவிர சென்னை ஐஐடி, பிஏஆர்சி, பர்டியூ பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விருந்தினர் பேராசிரியர்களும் பணியாற்றுவார்கள்.

நீரின் தரத்தைப் பாதுகாப்பதில் ஆர்வமுள்ள அனைவரையும் இந்தப் பாடத்திட்டத்தில் சேர வரவேற்றுள்ள, பத்மஸ்ரீ விருது பெற்றவரும், சென்னை ஐஐடி-ன் வேதியியல் துறை நிறுவனப் பேராசிரியருமான தாளப்பில் பிரதீப், “ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு, அதற்கான காரணங்களை மக்கள் புரிந்துகொள்ளும்போதுதான் சாத்தியமாகும். அத்தகைய அம்சங்களில் நீரின் தரத்தை அறிந்து கொள்வதும் ஒன்று. மக்களுக்கு நம்பிக்கையான நீர் தரம் குறித்த தரவை இந்த பாடநெறி உருவாக்கும். இந்த உலகிற்காக நீர் வல்லுநர்களுக்கு பயிற்சி அளிக்கும் முயற்சியின் மூலம் மக்களை நீர் பற்றிய புரிதலைக் கொண்டவர்களாக மாற்ற இயலும்” எனக் குறிப்பிட்டார்.

நீரின் தரம் பற்றிய ஹைபிரிட் படிப்பு: மக்களின் நீர் தரவுக்கான அணுகுமுறை எனத் தலைப்பிடப்பட்ட இந்த பாடநெறியின் மூலம் நீரின் தரம், முக்கிய அளவுருக்கள் பற்றிய பகுப்பாய்வு, மனித ஆரோக்கியத்தில் அவற்றின் தாக்கம் பற்றிய விரிவான புரிதலை வழங்கும். வீடுகள், ஆறுகள், ஆழ்துளை கிணறுகள், நிலத்தடி நீர், குழாய் நெட்வொர்க்குகள் போன்ற பல்வேறு ஆதாரங்களில் இருந்து நீரின் தரத்தின் தரவுத்தளத்தையும் இதனால் நிறுவ முடியும்.

இப்படிப்பிற்கான விரிவுரை வகுப்புகளைப் பொறுத்தவரை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் அல்லது பதிவு செய்யப்பட்ட வடிவில் மாணவர்கள் பங்கேற்கலாம். பாடத்திட்டத்தை எந்த அளவுக்கு புரிந்திருக்கிறார்கள் என்பது ஆன்லைன் அசைன்மெண்ட்கள், கேள்வி-பதில்கள் மூலம் கண்டறியப்பட்டு மதிப்பிடப்படும். செய்முறை அமர்வுக்கு பதிவு செய்பவர்கள் கையடக்க கருவிகள் மற்றும் கள சோதனைக் கருவிகள் போன்றவற்றுடன் களத்திலும் ஆய்வகத்திலும் அளவீடுகளை மேற்கொள்வார்கள். ஆய்வு செய்யப்பட்ட நீரின் தர அளவுருக்களில் குளோரின் இன்மை, மொத்த குளோரின், காரத்தன்மை, pH, ஆக்சிஜனேற்றம்-குறைப்பு திறன் (ORP), கடத்துத்திறன், மொத்தம் கரைந்த திடப்பொருள்கள் (TDS), வெப்பநிலை போன்ற விவரங்களை அறிய முடியும்.

கடந்த கோடைகாலத்தில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் (சென்னை மற்றும் ஈரோடு போன்றவை) கல்லூரி மாணவர்களை உள்ளடக்கிய ஒரு முன்னோடி ஆய்வின் அடிப்படையில் இந்த பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் தரவு, இடம்சார்ந்த ஒருங்கிணைப்புகள் மற்றும் கணக்கெடுப்புகளின் உள்ளீடுகளுடன் நீரின் தரம் குறித்த ஆன்லைன் தரவை உருவாக்குவதற்காக ஒருங்கிணைக்கப்பட்டதாகும்.

பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் செய்முறை அமர்வுகள் நடைபெறுவதால், குறிப்பிட்ட இடத்திலிருந்து பல்வேறு பங்கேற்பாளர்கள் பதிவுசெய்து, மக்களின் நீர் தரவை உருவாக்குவதில் பங்களிப்பது அவசியமாகிறது. செய்முறை அமர்வுக்கான மையமாக மாறுவதற்கு பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் கைகோக்க ஊக்குவிக்கப்படுகின்றன. பாடநெறி ஒருங்கிணைப்பாளர்களான டாக்டர் ரம்யா திவேதி, மின்னஞ்சல் - ramya_coe@icsrpis.iitm.ac.in (IITM) அல்லது செல்வி சூசன் ககன், மின்னஞ்சல் - suzankagan@gmail.com (டெல் அவிவ் பல்கலைக்கழகம்) ஆகியோரிடம் இருந்து மேலும் விவரங்களை கேட்டுப பெறலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

3 hours ago

கல்வி

4 hours ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

9 days ago

கல்வி

10 days ago

கல்வி

11 days ago

கல்வி

13 days ago

மேலும்