கல்லூரிகளின் அனைத்து தகவல்களும் இணையதளத்தில் இடம்பெற வேண்டும்: யுஜிசி

By சி.பிரதாப்

சென்னை: கட்டமைப்பு வசதிகள், வேலைவாய்ப்பு மற்றும் இதர செயல்பாடுகள் குறித்த விவரங்களை கல்லூரிகள் இணையதளத்தில் முறையாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தேசியக் கல்விக் கொள்கை அறிவுறுத்தலின்படி உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடு, மாணவர் சேர்க்கை, ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், முன்னாள் மாணவர்கள் குறித்த விவரம், ஆராய்ச்சி, கல்விக் கட்டணம் உட்பட பல்வேறு தகவல்களை கல்லூரிகள் தங்கள் இணையதளத்தில் முறையாக பதிவேற்றம் செய்ய வேண்டியது அவசியம்.

அதன்மூலம் மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆய்வாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களுக்கு தேவையான தகவல்களை அறிந்து கொள்ளலாம். அதேநேரம் சில கல்வி நிறுவனங்கள் இதை பின்பற்றுவது இல்லை. சில நிறுவனங்களின் தரவுகள் எளிமையான முறையில் அணுக முடியவில்லை.

எனவே, யுஜிசி வழிமுறைகளை பின்பற்றி கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள், தரவுகளை சரியான புள்ளி விவரத்துடன், எளிதில் கையாளும் வகையில் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது சார்ந்த பணிகளை விரைவாக செய்து வெளிப்படையான நிர்வாக செயல் முறையை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE