சென்னை ஐஐடியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பகுப்பாய்வு பிரிவில் பிடெக் படிப்பு அறிமுகம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் தரவுப் பகுப்பாய்வு ஆகியவற்றில் பிடெக் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பகுப்பாய்வு ஆகியவற்றின் நிபுணத்துவத்தை பல்வேறு அம்சங்களில் வளர்க்கச் செய்து தொழில்துறையில் பரந்த அளவில் பயன்பாடுகளை வழங்கும் நோக்கில், சென்னை ஐஐடி, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் தரவுப் பகுப்பாய்வு ஆகியவற்றில் பிடெக் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் 2024-25ம் கல்வியாண்டில் இருந்து இதற்கான மாணவர் சேர்க்கை தொடங்கும்.

என்ஐஆர்எஃப் தரவரிசையில் நாட்டிலேயே நம்பர் ஒன் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள இக்கல்வி நிறுவனத்தால் வழங்கப்படும் இளங்கலைப் பட்டம், மாணவர்களின் முக்கிய திறன்கள் மற்றும் அறிவாற்றலை மேம்படுத்தும் வகையில் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜேஇஇ (அட்வான்ஸ்டு) தேர்வு மூலம் இப்பாடத்திட்டத்திற்கான மாணவர் சேர்க்கை நடைபெறும். ஜேஇஇ மூலம் இதில் 50 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். பல்துறை அம்சங்களுடன் கணித அடிப்படைகள், தரவு அறிவியல்/ ஏஐ/எம்எல் அடித்தளங்கள், பயன்பாட்டு மேம்பாடு, பொறுப்பான வடிவமைப்புகளும் இப்பாடத்திட்டத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கும்.

சென்னை ஐஐடி-ன் மதிப்புமிக்க முன்னாள் மாணவரும், ஐகேட் மற்றும் மாஸ்டெக் டிஜிட்டல் ஆகியவற்றின் இணை நிறுவனருமான சுனில் வாத்வானியின் ரூ.110 கோடி நன்கொடையில் நிறுவப்பட்டுள்ள வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளி மூலம் இந்த படிப்பு வழங்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள சிறந்த ஏஐ-யை மையமாகக் கொண்ட பள்ளிகளில் ஒன்றாக விளங்கச் செய்து, தரவு அறிவியல் மற்றும் ஏஐ தொடர்பான கொள்கைகளை அரசுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது இதன் இலக்காகும்.

பிடெக்கின் இப்பாடத்திட்டம் பல்வேறு கல்வி நெகிழ்வுத்தன்மையை வழங்கும். மாணவர்கள் தங்கள் கற்றல் பயணத்தை இதே துறையிலும் பிற துறைகளில் இருந்தும் விருப்பத் தேர்வுகள் மூலம் மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. ஸ்பீச் அண்ட் லாங்வேஜ் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் விஷன் ஆகியவற்றில் தொடங்கி அப்ளிகேஷன்ஸ் இன் கண்ட்ரோல் அண்ட் டிடெக்சன், டைம் சீரிஸ் அனாலிசிஸ் வரை பல்வேறு அம்சங்கள் குறித்து மாணவர்கள் ஆழமாக ஆராய முடியும்.

இந்த பிடெக் பாடத்திட்டம் குறித்து எடுத்துரைத்த சென்னை ஐஐடி இயக்குநரும், கணினி அறிவியல் பேராசிரியருமான வி.காமகோடி, “ஏஐ என்பது பொறியியல், அறிவியல் மற்றும் மானுடவியல் துறைகளை உள்ளடக்கியதாகும். இத்துறையில் வெற்றிகரமாகத் திகழ பல்துறை தொடர்புகளைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். இதற்காகவே செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பகுப்பாய்வில் பிடெக் படிப்பு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற படிப்பு உலகிலேயே முதன்முறையாகும். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எங்களது ஆசிரியர்கள் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் இப்பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை வழங்குவதன் மூலம் வளர்ந்துவரும் சந்தையில் பெரும் ஏஐ சவால்களை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும், உயர்மட்ட ஏஐ வல்லுநர்கள், தொழில்முனைவோர், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரை உருவாக்கவும் சென்னை ஐஐடியும் விரும்புகிறது” எனக் குறிப்பிட்டார்.

அன்றாடம் ஏற்படும் பிரச்சனைகள், நியாயமான மற்றும் பொறுப்பான ஏஐ ஆகியவற்றுக்கான பயன்பாட்டில் கவனம் செலுத்துவது இந்த பிடெக் பாடத்திட்டத்தில் அடங்கும். பல்வேறு களங்களில் ஏற்படும் சவால்களை சமாளிக்க தரவுப் பகுப்பாய்வு, ஏஐ நுட்பங்களைப் பயன்படுத்துதல், புதுமை மற்றும் தாக்கத்தை வளர்த்தல், ஏஐ மேம்பாட்டில் நேர்மையான மற்றும் பொறுப்பான கொள்கைகளை பின்பற்றுதல், தொழில்நுட்பத்தின் நெறிமுறை- சமமான வரிசைப்படுத்துதலை உறுதி செய்தல் ஆகியவையும் இதில் இடம்பெறும்.

இத்திட்டத்தின் பிரத்யேக அம்சங்களை எடுத்துரைத்த வாத்வானி ஸ்கூல் ஆஃப் டேடா சயின்ஸ் மற்றும் சென்னை ஐஐடி ஏஐ பிரிவுத் தலைவர் பேராசிரியர் பி.ரவீந்திரன், “30 ஆண்டுகளுக்கு முன் கணினி அறிவியல் இருந்ததைப் போன்று தற்போது ஏஐ உள்ளது. செயற்கை நுண்ணறிவு என்பது உருமாறும் தொழில்நுட்பமாகத் திகழும். இந்த தலைமுறைக்கும், வருங்கால தலைமுறைக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தீர்மானிப்பதாக அமையும். செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பகுப்பாய்வில் பிடெக் படிப்பு என்பது தொடக்க கட்டம்தான். ஏஐ-யின் அடிப்படைகளை மாணவர்கள் போதிய அளவு அறிந்திருப்பதை நாங்கள் உறுதி செய்வோம். அதன்பின்னர் அவர்கள் இதனை ஆராய்ச்சிப் படிப்பாக தாங்களே சொந்த முயற்சியில் தொடர முடியும். ஏஐ-யின் அடிப்படைகள் மற்றும் பயன்பாடுகளை எவ்வாறு உருவாக்குவது, ஏஐ-யின் அமைப்பு சார்ந்த வடிவமைப்பு ஆகிய இரண்டில் கவனம் செலுத்தும் வகையில்தான் இப்பாடத்திட்டத்தை நாங்கள் வடிவமைத்து இருக்கிறோம். ஏஐ வடிவமைப்பை முழுமையாக செய்து முடிக்கும்போது இப்பாடத்திட்டம் நிச்சயம் தனித்துவத்துடன் விளங்கும்” எனத் தெரிவித்தார்.

ஏஐ மற்றும் தரவுப் பகுப்பாய்வில் விரிவான அடித்தளத்துடன் இத்துறையில் வெற்றிபெறுவதற்குத் தேவையான பல்வேறு பாடங்களைக் கொண்டு முக்கிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நேரியல் இயற்கணிதம் (Linear Algebra), நுண்கணிதம் (calculus) போன்ற அடிப்படை படிப்புகளில் தொடங்கி, இயந்திரக் கற்றல் (machine learning), ஆழமான கற்றல் (deep learning), reinforcement learning (வலுவூட்டல் கற்றல்) ஆகியவற்றில் சிறப்புத் தொகுதிகள் இடம்பெறும். இத்துறையின் வலுவான கல்வித்தொகுப்பைக் கொண்டு இத்துறையில் உள்ள பல்வேறு சவால்களை சமாளிக்க முடியும்.

இதுதவிர ஆய்வக அமர்வுகள், பயிலரங்கங்கள், அன்றாடப் பிரச்சனைகளுக்கு ப்ராஜக்ட்கள் ஆகியவற்றின் மூலம் நடைமுறை அனுபவம் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கோட்பாட்டு அறிவு மட்டுமின்றி, தொழிற்துறையில் உடனடி பயன்பாட்டிற்கு ஏற்றவகையில் நிபுணத்துவத்துடன் பட்டதாரிகள் உருவாக்கப்படுகிறார்கள்.

இதுபற்றி மேலும் விரிவாக எடுத்துரைத்த சென்னை ஐஐடி-ன் வாத்வானி ஸ்கூல் ஆஃப் டேட்டா சயின்ஸ் மற்றும் ஏஐ பேராசிரியர் அருண் கே.தங்கிராலா, “இதற்கான பாடத்திட்டத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்திருக்கிறோம்- ‘அறிவியல்களின் அடித்தளம்’ என்ற முதல் பகுதியில் கணிதம், அறிவியல், புள்ளி விவரங்கள் இடம்பெறும். ‘மாடலிங் டெக்னிக்குகள்’ என்ற இரண்டாவது பகுதியில் convolutional neural network, deep net ஆகியவை இடம்பெறும். மூன்றாவது பகுதியில் ‘பயிற்சி மற்றும் மாதிரிகளை வரிசைப்படுத்துதல்’ குறிப்பாக அல்காரிதம்கள் இடம்பெற்றிருக்கும். இறுதியாக அனைத்தையும் உள்ளடக்கிய ‘டொமைன் அப்ளிகேஷன்ஸ்’ இடம்பெறும். தொழில் துறையினருடனான எங்களது தொடர்பு மிகவும் வலிமையானது. உள்ளகப் பயிற்சி, இளங்கலை ஆராய்ச்சி, போன்றவை இருப்பதால் மாணவர்கள் நடைமுறை அனுபவங்களைப் பெறுவதற்கான பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன” எனக் குறிப்பிட்டார்.

உடல்நலப் பாதுகாப்பு, பொறுப்பான செயற்கை நுண்ணறிவு, மொழித் தொழில்நுட்பம், சமூகத் தாக்கத்திற்காக ஏஐ-யின் பொறுப்பான மேம்பாடு மற்றும் வரிசைப்படுத்துதல் போன்றவை வாத்வானி ஸ்கூல் ஆஃப் டேட்டா சயின்ஸ் மற்றும் ஏஐ-யின் ஆராய்ச்சிக் கருப்பொருள்களாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

8 days ago

கல்வி

8 days ago

கல்வி

8 days ago

மேலும்