மு
ன்பெல்லாம், “சொன்னதைச் செய், அடிபணிந்து நட” என்கிற அறிவுரைகள் மாணவர்களை அச்சுறுத்தின. இன்றோ, “சுயமாகச் சிந்தி, இஷ்டப்பட்டதை செய், நீயாக முடிவெடு” என்பது போன்ற உத்வேகப் பேச்சுகள் மாணவர்களைத் துரத்துகின்றன. “நல்லது சொன்னாலும் குற்றமா?” என்ற கேள்வி வரலாம். ஆனால், ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. பத்துப் பதினைந்து ஆண்டுகளாகக் குழந்தைகளை அடக்கி வைத்துவிட்டுத் திடீரென்று ஒரு நாள், “இன்று முதல் நீ வயது முதிர்ந்தவள்/ன்.
இனி உன் வாழ்க்கை உன் கையில்” என்று சொல்வது கண்ணைக் கட்டிக் காட்டில்விட்டது போன்ற உணர்வைத்தான் அவர்களுக்கு ஏற்படுத்தும். இந்த மனநிலையில்தான் பத்தாம் வகுப்பும் பிளஸ் டூ-வும் முடித்த மாணவர்களில் பெரும்பாலோர் தற்போது இருக்கிறார்கள்.
“எல்லோருமே மேதைகள்தான். ஆனால், மரம் ஏறும் திறமையை வைத்து மீனுக்கு நீங்கள் மதிப்பெண் அளிப்பீர்களேயானால், அந்த மீன், தான் ஒரு முட்டாள் என்கிற எண்ணத்திலேயே வாழ்நாள் முழுவதையும் கழித்துக்கொண்டிருக்கும்” என்று கல்வி அமைப்பு குறித்து ஐன்ஸ்டைன் முன்வைத்த விமர்சனத்தை இங்கு ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. மரம் ஏறத் தெரியாதது மீனின் குற்றம் அல்ல.
அதை வைத்து மீனின் திறமையைத் தீர்மானிக்கக் கூடாது. நீந்துவதுதான் மீனின் இயல்பு என்பதால் அதை மட்டுமே மீனிடம் எதிர்பார்க்கலாம். அதேபோல ஒவ்வொரு குழந்தையிடமும் ஒரு தனித்தன்மை பரிமளிக்கும். அதை வளர்த்தெடுத்துக் கொண்டாடினால் அந்தக் குழந்தை பிரகாசிக்கும் என்பதே இந்தக் கூற்றின் பொருள்.
ஆனால், மனிதர்களைப் பொறுத்தவரை அவர்களுடைய திறன் எது என்பதைக் கண்டறிவது அவ்வளவு சுலபமல்ல. தனக்கு இஷ்டமானது எது, அதில் எது தன்னுடைய திறனோடு ஒத்துப்போகக் கூடியது, விரும்பியதைப் பணிவாழ்க்கையாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பும் வசதியும் தனக்கு இருக்கிறதா என்பதை எல்லாம் மாணவர்கள் கண்டறிய வழிவகை செய்யாமல், திடீரென்று, ‘இஷ்டப்பட்டதைச் செய்’ என்றுசொன்னால் அது இன்னமும் சிக்கலாகிவிடும். இத்தருணத்தில், நமக்குள் இருக்கும் பன்முக அறிவுத்திறனை கண்டறிய அறிவியல்பூர்வமாக செய்யக்கூடிய சில எளிய யோசனைகளைப் பார்ப்போம்.
மதிப்பெண் அல்ல, திறன்
எந்த பாடத்தில் அதிக மதிப்பெண்களை குவிக்கிறாரோ, அதுவே தன்னுடைய பலம் என்று நம்பும் மாணவர்கள்தான் ஏராளம். உதாரணத்துக்கு, ஆங்கில மொழிப் பாடத்தில் நல்ல மதிப்பெண் பெற்றவர் ஆங்கில இலக்கியம் படித்து பள்ளியில் ஆசிரியராகவோ அல்லது கல்லூரிப் பேராசிரியராகவோ ஆகிவிடலாம் என்று நினைக்கக்கூடும். ஆனால், நம்முடைய தனித்திறனைக் கண்டுபிடிப்பதற்கான அளவுகோல் பெற்றிருக்கும் மதிப்பெண் அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
மொழிப்பாடம் பிடிக்கிறது என்றால், உங்களுக்கு எழுத்தும் பேச்சும் பிடித்தமானதா என்பதைத்தான் முதலில் கண்டறிய வேண்டும். உங்களுக்குப் பிடித்தது பேச்சா அல்லது எழுத்தா என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். கவிதை, கதை, கட்டுரை போன்ற எழுத்து வடிவில் மொழி ஆர்வத்தை வெளிப்படுத்தப் பிடிக்கும் என்றால் பத்திரிகையாளர், விளம்பரத்துறையில் காப்பி ரைட்டர், ஸ்கிரிப்ட் ரைட்டர் உள்ளிட்ட பணிவாழ்க்கைக்கு ஏற்றமாதிரி மேற்படிப்பைத் திட்டமிடலாம். அதற்கு நீங்கள் இதழியல், விஷூவல் கம்யூனிகேஷன் போன்ற படிப்புகளைத் தேர்வுசெய்வது பொருத்தமாக இருக்கும்.
மறுபுறம் உங்களுக்குப் பேச்சாற்றல் சிறப்பாக இருக்குமென்றால் ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு ஆசிரியர், பேராசிரியர், பண்பலைத் தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், மேடைப் பேச்சாளர், பேச்சுத் திறன் பயிற்சியாளர் எனப் பல்வேறு துறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஜொலிக்கலாம்.
இதோபோல உங்களுக்குள் இருப்பது தர்க்கம் மற்றும் கணிதத் திறனா அல்லது உடல் மற்றும் விளையாட்டுத் திறனா அல்லது இசைத் திறனா அல்லது மனித் தொடர்புத் திறனா என்பதை முதலில் கண்டுபிடியுங்கள்.
பாதிக்க அனுமதிக்காதே!
பிளஸ் டூ முடித்திருக்கும் தன்னுடைய தம்பி மேற்கொண்டு ‘கட்டிடக்கலை படிப்பை மட்டும்தான் படிப்பேன்’ என்று அடம்பிடிப்பதாகச் சொன்னார் தோழி ஒருவர். பிளஸ் டூவில் சராசரி மதிப்பெண் எடுத்திருப்பதால் சுயநிதிக் கல்லூரியில் மட்டும்தான் அவருக்கு அனுமதி கிடைக்கும் என்பதுதான் நிதர்சனம். ஆனால், எப்பாடுபட்டாவது தன்னை கட்டிடக்கலை படிக்க வைக்கும்படி அவர் கேட்கிறார்.
பிறகு விசாரித்தபோது புரிந்தத, அப்படிப்புத் தொடர்பாக அவருக்கு பேரார்வம் எதுவும் இல்லை. தன்னுடைய நண்பர்கள் அதை படிக்க முடிவெடுத்திருப்பதால் அதுவே தனக்கான படிப்பாக நம்பத் தொடங்கிவிட்டார்.
பெற்றோர், ஆசிரியர்களின் வற்புறுத்தலைதான் தொடர்ந்து நாம் விமர்சித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், சுற்றுப்புறமும் சக மாணவர்களின் தேர்வும் பரிந்துரைகளும் பெரும்பாலான நேரங்களில் நீங்கள் யார் என்பதைத் தீர்மானிக்கின்றன என்பதை உணர்ந்து விழித்தெழுங்கள்.
செய்தாக வேண்டியதில்லை
நம்மில் பலர் இடைநிலை வகுப்புகளில் படிக்கும்வரை, “நீ யாராக விரும்புகிறாய்?” என்று கேட்ட ஆசிரியரிடம், “நான் டாக்டர் ஆவேன்/ கலெக்டர் ஆவேன்” என்று நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டதைச் சொல்லி இருப்போம்.
ஒருகட்டத்தில் அதுதான் நம்முடைய பணிவாழ்க்கை என்று முடிவெடுத்து மருத்துவராக நம்மை ஆயத்தப்படுத்தத் தொடங்கியும் இருப்போம். ஆனால், பள்ளி படிப்பை முடிக்கும் தறுவாயில் நாம் வேறொரு புதிய மனிதராக உருவாகி இருக்கலாம். அத்தகைய தருணத்தில், புதிய அவதாரத்தை எடுக்க துணியவேண்டும்.
அதேபோல பல நேரம் நம்முடைய விருப்பத்தை, தனித்துவத்தை நாமே அங்கீகரிப்பதில்லை. அற்புதமாக நடனமாடக்கூடியவராக இருந்தபோதும், பெருமைக்காக தட்டுத் தடுமாறி சி.ஏ. படித்தார் நண்பர் ஒருவர். ஆனால், இன்றுவரை தான் நடனக் கலைஞராகவில்லையே என்கின்ற ஏக்கத்தோடு இருக்கிறார்.
இப்படி நாம் யார் என்பதை கண்டறிந்த பிறகு, அத்துறையில் நம்மை வளர்த்துக்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டாம். அக்கம் பக்கத்தாருக்காக, பெருமைக்காக எதையும் செய்தாக வேண்டிய கட்டாயம் இல்லையே! எதை செய்ய விருப்பம் என்பதை எதை செய்தாக வேண்டும் என்பதில் இருந்து பிரித்தறியுங்கள்.
தத்துவ ஞானி ஜே. கிருஷ்ணமூர்த்தி கூறியதுபோல, “வாழ்க்கையைப் புரிந்துகொள்வது என்பது நம்மை நாமே புரிந்துகொள்வது. அதுவே கல்வியின் தொடக்கமும் முடிவும்”.
முக்கிய செய்திகள்
கல்வி
22 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago