மாநகராட்சி பள்ளிகளில் பிரெஞ்சு பாடம்: சென்னை மாநகராட்சி முயற்சி

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளல் பிரெஞ்சு பாடத்தை அறிமுகப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் 1 லட்சத்து 20 ஆயிரம் மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் பாதுகாப்புக்காக ஏற்கெனவே 636 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ள நிலையில், ரூ.7 கோடியில் மேலும் 255கேமராக்களை நிறுவ மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

உலகத் தரத்தில்... இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி பள்ளி மாணவர்களின் திறனை உலகத் தரத்தில் மேம்படுத்தும் வகையில் பிரெஞ்சு மொழி கற்பிக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மாநகராட்சி பள்ளிகள் சிட்டிஸ் திட்டத்தின்கீழ் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின்கீழ் அலியான்ஸ் பிரான்சே அமைப்புடன் இணைந்து மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழி கற்பிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. அதற்கான கருத்துரு மேயரிடம் சமர்ப்பித்து, மன்ற அனுமதி பெற்று செயல் படுத்தப்படும்.

முதற்கட்டமாக சிட்டிஸ் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழி கற்பிக்கஉத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பிற வகுப்புகளுக்கு விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE