வான்வெளி, விண்வெளி படிப்புகளில் இளைஞர்களுக்கு அதிக ஆர்வம்: ‘உயர்வுக்கு உயர் கல்வி’ நிகழ்வில் வல்லுநர்கள் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: வான்வெளி, விண்வெளி சார்ந்த படிப்புகளைப் படிப்பதில் இன்றைய இளைஞர்கள் ஆர்வமாக உள்ளனர் என்று விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர் கல்வி’ ஆன்லைன் தொடர் வழிகாட்டி நிகழ்வில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர் கல்வி’ என்ற நிகழ்ச்சி ஆன்லைன் வழியாக நடைபெற்றது. இந்த நிகழ்வை ஈஸ்வரி இன்ஜினீயரிங் கல்லூரி, சவீதா இன்ஜினீயரிங் கல்லூரி, ஆல்பா காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் ஆகியவை இணைந்து வழங்கின. கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 26) மதியம் நடைபெற்ற ஆன்லைன் வழிகாட்டி 15-வது தொடர் நிகழ்வில் `ஏரோ ஸ்பேஸ் & ட்ரோன்ஸ்: கல்வி வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் துறைசார் வல்லுநர்கள் உரையாடினர். அவர்கள் பேசியதாவது:

ஐஐடி கான்பூர் ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் துறை பேராசிரியர் சதீஷ் மாரியப்பன்: ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங், ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் என இரண்டுவகைகள் உண்டு. இதில், அட்மாஸ்பியருக்குள் பறக்கும் விமானங்கள், ஏர்கிராப்ட்ஸ் உள்ளிட்ட காற்றைப் பயன்படுத்தி பறக்கும் எல்லாமுமே ஏரோ நாட்டிக்கல் இன்ஜினீயரிங்கில் அடங்கும். நம் அட்மாஸ்பியரையும் தாண்டி ஸ்பேஸுக்கு செல்லும்போது, அங்கே காற்று இருக்காது.

காற்றுக்குப் பதிலாக ராக்கெட், ஸ்பேஸ் கிராப்ட்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தி இன்னும் கூடுதலான சிறப்பம்சங்களுடன் செயல்பட வேண்டும். காற்றுக்கு உள்ளேயும், காற்றுக்கு வெளியேயுமான இரண்டையும் தொடர்புபடுத்தி படிப்பதே ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் ஆகும்.

நிகழ்வை ஒருங்கிணைத்த ராணுவ விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு: விமானங்களையும் செயற்கைக் கோள்களையும் வடிவமைத்து உருவாக்கும் முயற்சிகளில் உலக நாடுகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. வான்வெளியும், விண்வெளியும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை. இதனால்தான் பல நாடுகளில் விமானப்படை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சில நாடுகளில் ஸ்பேஸ் ஃபோர்ஸ் எனப்படும் விண்வெளி படையும் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் அடுத்தக்கட்டமாக செயற்கைக்கோள், விமானத்தை உருவாக்குவதோடு மட்டுமின்றி, அவற்றை அழிக்கும் ஏவுகணை தொழில்நுட்பங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. விமானம், செயற்கைக்கோள் நாட்டின் பாதுகாப்புக்கானது என்பதையும் தாண்டி, மக்களின்பயன்பாட்டுக்கான அத்தியாவசியமான தேவையாகவும் இன்றைக்கு மாறியிருக்கிறது.

இந்த நிகழ்வில் பங்கேற்க தவறியவர்கள் https://www.htamil.org/UUKE15 என்ற லிங்க்-ல் பார்த்து பயனடையலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE