மருத்துவ துணை படிப்புகளை படித்தும் மக்களுக்கு சேவையாற்றலாம்: ‘உயர்வுக்கு உயர் கல்வி’ நிகழ்ச்சியில் துறை வல்லுநர்கள் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: மருத்துவ துணை படிப்புகளைப் படித்துவிட்டு மக்களுக்கு சேவையாற்றலாம் என்று விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் தொடர் வழிகாட்டி நிகழ்வில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

பிளஸ்-2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ - ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற நிகழ்ச்சி ஆன்லைன் வழியே நடைபெற்றது. இந்த நிகழ்வை ஈஸ்வரி இன்ஜினீயரிங் காலேஜ், சவீதா இன்ஜினீயரிங் காலேஜ், ஆல்பா காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் ஆகியன இணைந்து வழங்கின. கடந்த சனிக்கிழமையன்று (மே 25) மதியம் நடைபெற்ற ஆன்லைன் வழிகாட்டி 13-வது தொடர் நிகழ்வில் ‘நர்சிங் & பாரா மெடிக்கல் படிப்புகள் மற்றும் வாய்ப்புகள்’ தலைப்பில் துறைசார் வல்லுநர்கள் உரையாற்றினர். அவர்கள் கூறியதாவது:

திருச்சி எஸ்ஆர்எம் வளாக துணை இயக்குநர் டாக்டர் என்.பாலசுப்ரமணியன்: மருத்துவர் படிப்பைவிட, மருத்துவ துணை படிப்புகளை படிப்பவர்கள் தங்களது எண்ணத்தைச் செயல்படுத்தலாம். மேலும் மக்களுக்கும் கூடுதலாக பயனளிக்கும் சேவைகளைச் செய்யலாம். எம்பிபிஎஸ் முடித்து, அடுத்து எம்.டி. என பல ஆண்டுகளை மருத்துவப் படிப்பில் செலவழிக்காமல் குறைந்த ஆண்டுகளிலேயே மருத்துவ துணை படிப்புகளை முடிக்கலாம்.

கோவை PSGIMSR டைரக்டர் ரிசர்ச் அண்ட் இன்னோவேஷன் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் டாக்டர் சுதா ராமலிங்கம்: மருத்துவத் துறையில் உள்ள இணை படிப்புகளையும் படிக்க இன்றைய தலைமுறை ஆர்வம் கொள்ள வேண்டும். ஆபரேஷன், ட்ரீட்மென்ட் என எதுவானாலும் மருத்துவ துறையில் துணை பணியாளர்களின் பங்கும் முக்கியமானது. எல்லோரும் ஒரு குழுவாக பணியாற்றும்போதுதான் சிகிச்சையின் முழு பயனும் நோயாளிக்குக் கிடைக்கும்.

நிகழ்வை ஒருங்கிணைத்த ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு: ஒரு நோயாளிக்கு மருத்துவரை விடவும் செவிலியர், ரத்தப் பரிசோதனை செய்பவர், மருந்தாளுநர் என பல துணை மருத்துவப் பணியாளர்கள் கூடுதலான நேரத்தைச் செலவிடுவர். மருத்துவர், கால்நடை மருத்துவம் இவற்றைத் தாண்டி சக மனிதர்களின் நல்வாழ்வுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் துணை மருத்துவப் படிப்புகளைப் படிக்கலாம்.

இந்த நிகழ்வில் பங்கேற்கத் தவறியவர்கள் https://www.htamil.org/UUKE13 என்ற லிங்கில் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE