திருச்சி: எதிர்காலத்தை தீர்மானிக்க, ஓராண்டு கடும் முயற்சியுடன் படித்தால் ஐஏஎஸ் ஆகலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் ‘இந்து தமிழ் திசை- உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ என்கிற யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் பேசியது: ஐஏஎஸ் போட்டித் தேர்வர்களுக்கு தன்னம்பிக்கை முக்கியம். உங்களது தன்னம்பிக்கையை மனது ஏற்க வேண்டும். யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வை (பிரிலிமினரி) பொறுத்தவரை பயத்தை தவிர்க்க வேண்டும். ஒரு புத்தகத்தை உள்வாங்கி, முழுமையாக, திரும்பத் திரும்ப, குறிப்பெடுத்து படிக்கவேண்டும்.10 சதவீதம் பேர் தான் முழுமையாக படித்து வந்து போட்டித் தேர்வுகளை எழுதுகின்றனர். அந்த 10 சதவீதம் பேருடன் தான் உங்களுக்கு போட்டி என்பதை மனதில் நிறுத்துங்கள். ஓராண்டு தினந்தோறும் 5 மணிநேரம் யுபிஎஸ்சிக்கு படித்தால் முதல்நிலைத் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம். இந்த யுக்தியை ஒரு சதவீதம் பேர் மட்டும் தான் பின்பற்றுகின்றனர்.
அடுத்த 35 ஆண்டுகால எதிர்காலத்தை தீர்மானிக்க, ஓராண்டு கடும் முயற்சியுடன் படித்தால் ஐஏஎஸ் ஆகலாம். உங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறும். ஓராண்டை தியாகம் செய்து படித்தால், யுபிஎஸ்சி தேர்வில் தோல்வியுற வாய்ப்பே இல்லை. முதன்மைத் தேர்வை (மெயின்) பொறுத்தவரை தொடர் பயிற்சியைத் தவிர வேறு வாய்ப்பே இல்லை. ஒரு தலைப்பு குறித்து எழுதும்போது, அதன் உள்ளடக்கம், விளக்கும் முறை மிக தெளிவாக இருக்க வேண்டும்.
நாள்தோறும் 5 மணி நேரம் எழுத்துப் பயிற்சி செய்தாலே போதும். முதல்நிலை தேர்வுக்காக எடுக்கும் குறிப்புகள் முதன்மைத் தேர்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேர்வு அறையில் பிறர் செய்யும் தவறுகளை நாம் செய்யக்கூடாது. கேள்விகளை சரியாக புரிந்து பதிலளிக்க வேண்டும். கண்களை மூடி காட்சிப்படுத்திப் படித்தால், எளிதில் முதன்மைத் தேர்வில் வெற்றி பெறலாம்.
இந்த தேர்வுகளை தொடர்ந்து வரும் நேர்முகத் தேர்வை பதற்றமின்றி எதிர்கொள்ள வேண்டும். பதற்றத்தை எப்படி கையாள்கிறோம் என்பதில் தான் நமது வெற்றி உள்ளது. ஒரு அதிகாரியை போலவே நேர்முகத் தேர்வை சந்திக்க வேண்டும். நேர்முகத் தேர்வில் அதைத் தான் எதிர்பார்ப்பார்கள்.
நேர்முகத் தேர்வு அறையில் சாதாரணமாக அமர வேண்டும். சொல்வதை தெளிவாக கேட்டு உள்வாங்கி பதிலளிக்க வேண்டும். அங்கு விவாதம் செய்யக் கூடாது. தெரியாவிட்டால் தெரியவில்லை என்று சொல்ல வேண்டும். பொய் சொல்லக்கூடாது. 200 சதவீதம் நம்பிக்கையுடன் படியுங்கள். வெற்றி நிச்சயம்.
வாழ்க்கை மிகவும் அழகானது, வண்ணமயமானது. இதை விட்டால் வேறு வழியே இல்லை என்று மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் தேர்வுக்கு தயாராகாதீர்கள். இருப்பது ஒரு வழ்க்கை தான். அதை வண்ணமயமாக வாழ வேண்டும். மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் தேர்வுக்கு தயாராகுங்கள். உங்களுக்குள் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரியை வெளியே கொண்டு வாருங்கள். இவ்வாறு ஆட்சியர் பிரதீப்குமார் பேசினார்.
ஓய்வுபெற்ற எஸ்.பி. அ.கலியமூர்த்தி பேசியது: அறிவுடைய ஒருவனை அரசனும் விரும்புவான். அரியாசனத்தில் இருப்பவர்களிடம் சரியாசனம் தருவது கல்வி. பணக்கார மாளிகையில் பிள்ளைகள் வளர்ந்தே பிறக்கிறார்கள். ஏழை வீட்டில் பிறந்து வளர்கிறார்கள். வளர்ந்தே பிறப்பது வாரிசுரிமை, பிறந்து வளர்வதே பிறப்பின் பெருமை. அது உங்களால் மட்டுமே முடியும். தனக்காக சொத்து சேர்க்காத அப்பாவும், தனக்காக சமைக்காத அம்மாவும் இந்தியாவைத் தாண்டி வேறு எந்த நாட்டிலும் இல்லை. அந்த பெற்றோர்களுக்காக நீங்கள் படிக்க வேண்டும்.
நீங்கள் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவ்வாறாகவே மாறிவிடுவீர்கள் என்கிறார் விவேகானந்தர். எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியத் தின்னியராகப் பெறின் என்கிறார் திருவள்ளுவர். வள்ளலார், கண்ணதாசன் போன்றோரும் அதையே குறிப்பிடுகின்றனர்.
மனித மனம் எதை உள்வாங்கி நம்மால் முடியும் என்று நம்புகிறதோ அது முடிந்தே தீரும். எண்ணம் தான் அனைத்துக்கும் காரணம். படிப்பதில் நம் எல்லைக்கோட்டை சுருக்கிக் கொள்ளக்கூடாது. வாழ்க்கையில் சாதிக்க தொடர்ந்து படிக்க வேண்டும். உலகின் மாபெரும் மனிதர்கள் கூட நான்கில் ஒரு பங்கு சக்தியை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இளம் வயதில் புயல்போல வரும் உணர்ச்சிகளை அடக்கியாளக் கற்றுக்கொள்ள வேண்டும். நாள்தோறும் 60 ஆயிரம் சிந்தனைகள் வரும். அதில், ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற சிந்தனையை மட்டும் வளர்த்தால். மற்ற சிந்தனைகள் மாயமாகி, வெற்றிக் கிட்டும். இந்து தமிழ் திசை நாளிதழ், இந்த நிகழ்ச்சியை நடத்துவது உங்களுக்காகத் தான். இவ்வாறு அவர் பேசினார்.
கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் பேசும்போது, ‘‘டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தமிழகத்தில் 10 லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர். ஆனால், யுபிஎஸ்சி தேர்வுக்கு 30 ஆயிரம் பேர் தான் விண்ணப்பிக்கின்றனர். அதிலும் பாதி பேர் தேர்வு எழுத வருவதில்லை. இதற்கு முதல் தடை மனம். 2-வது தடை பணம். இன்று பேசிய ஆளுமைகள் மூலம் உங்களது மனத்தடை நீங்கியது. பணத்தடை அகல எங்களால் முடிந்தளவு உதவுகிறோம்’’ என்றார்.
‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் பேசும்போது, ‘‘அனைவருக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற ஆசையும், கனவும் இருக்கிறது. அதற்கான முயற்சியும், பயிற்சியும் வேண்டும். அதற்காகவே இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம். அறிவியல் தொழில்நுட்பம் அதிகம் வளர்ந்திடாத, இணைய வசதி இல்லாத 1960-களில் தமிழ்நாட்டிலிருந்து நிறைய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தேர்வாகினர். ஆனால், இன்றைக்கு யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் தேர்ச்சி குறைவாகவே உள்ளது. இந்நிலை மாற வேண்டும். அதற்கான கள அளவிலான முன்னெடுப்பாகவே இந்
நிகழ்வு நடத்தப்படுகிறது. போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்கள் ‘தி இந்து’, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ்களை தொடர்ந்து படித்தால் நிச்சயம் வெற்றி கிட்டும்’’ என்றார். நிகழ்வில் மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்ததுடன், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
“மிகவும் பயனும், ஊக்கமும் அளிப்பதாக இருந்தது” - நிகழ்ச்சியில் பங்கேற்ற அரியலூரைச் சேர்ந்த தமிழரசி: யுபிஎஸ்சி தேர்வுக்கு நான் சுயமாகத் தயாராகி வருகிறேன். இந்து தமிழ் நாளிதழில் வந்த செய்தி பார்த்து இங்கு வந்த பிறகு தான் பல விஷயங்களை நான் கற்றுக்கொள்ள முடிந்தது. மிகவும் பயனும், ஊக்கமும் அளிக்கும் வகையில் நிகழ்ச்சி அமைந்தது.
“என்ன படிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன்” - மதுக்கூரைச் சேர்ந்த பிரவீன்: நான் சுயமாக யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வருகிறேன். இந்து தமிழ் நாளிதழில் உனக்குள் ஓர் ஐஏஎஸ் நிகழ்ச்சிக்கான செய்தியை பார்த்து இங்கு வந்தேன். மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி. பல்வேறு ஆலோசனைகளை இங்கு பெற முடிந்தது. நடப்பு நிகழ்வுகள், பிபிடி காட்சிகள் பார்த்து வியந்தேன். கடைசி 30 நாளில் என்ன படிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன்.
முக்கிய செய்திகள்
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago