தமிழகத்தில் பிளஸ் 1 பொது தேர்வில் 91 சதவீதம் பேர் தேர்ச்சி: மறுகூட்டல், விடைத்தாள் நகல் பெற மே 20 வரை அவகாசம்

By செய்திப்பிரிவு

சென்னை: பிளஸ் 1 தேர்வு எழுதிய 8.11 லட்சம் மாணவர்களில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களைவிட 7.43 சதவீத மாணவிகள் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 2018-ம் ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பிளஸ் 1 பொதுத் தேர்வு மாநிலம் முழுதும் 3,302 மையங்களில் கடந்த மார்ச் 4 முதல் 25-ம் தேதி வரை நடைபெற்றது.

இந்த தேர்வை 4 லட்சத்து 26,821 மாணவிகள், 3,84,351 மாணவர்கள் என மொத்தம் 8 லட்சத்து 11,172 லட்சம் எழுதினர். ஏற்கெனவே அறிவித்தபடி பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகளை தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா, சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று காலை வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து தேர்வுத் துறை இணையதளத்திலும் முடிவுகள் வெளியிடப்பட்டன. மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகள் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலமும், பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமும் அனுப்பப்பட்டன.

பிளஸ் 1 தேர்வில் 4 லட்சத்து 4,143 மாணவிகள், 3 லட்சத்து 35,396 மாணவர்கள் என மொத்தம் 7 லட்சத்து 39,539 பேர் (91.17%) தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட (90.93%) 0.24 சதவீதம் அதிகமாகும். மாணவர்கள் 87.26 சதவீதமும், மாணவிகள் 94.69 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த முறையும் மாணவர்களைவிட தேர்ச்சி விகிதத்தில் மாணவிகள் 7.43 சதவீதம் முன்னிலையில் உள்ளனர். 241 அரசுப் பள்ளிகள் உட்பட மொத்தம் 1,964 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

மாவட்ட அளவிலான ஒட்டுமொத்த தேர்ச்சியில் 96 சதவீதத்துடன் கோயம்புத்தூர் முதலிடம் பெற்றுள்ளது. ஈரோடு (95.16%), திருப்பூர் (95.23%) அடுத்த 2 இடங்களில் உள்ளன. கடைசி இடத்தில் வேலூர் (81.40%) உள்ளது. தலைநகரான சென்னையில் தேர்ச்சி 91.68 சதவீதமாக உள்ளது.

கணினி அறிவியல் பாடத்தில் 3,432 பேர் முழு மதிப்பெண் எடுத்துள்ளனர். கணிதத்தில் 779, பொருளியலில் 741, இயற்பியலில் 696, வணிகவியலில் 620, வேதியியலில் 493, கணக்குப் பதிவியலில் 415, கணினிப் பயன்பாடுகள் பாடத்தில் 288, வணிகக் கணிதத்தில் 293, உயிரியலில் 171, விலங்கியலில் 29, தாவரவியலில் 2, ஆங்கிலத்தில் 13, தமிழில் 8 மாணவர்கள் 100-க்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளனர்.

பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் பட்டியலை தேர்வுத் துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) மே 17-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாக மதிப்பெண் பட்டியலை நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

மறுகூட்டல்: பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற விரும்பினால் பள்ளி மாணவர்கள் படித்தபள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் இன்று முதல் மே 20-ம்தேதிவரை விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் கோருபவர்கள் அதே பாடத்துக்கு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கக் கூடாது.

விடைத்தாள் நகல் பெற்றதும் அவர்கள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். விடைத்தாள் நகல் பெற அனைத்து பாடங்களுக்கு ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் உயிரியல் பாடத்துக்கு ரூ.305, மற்ற பாடங்களுக்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும்.

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.dge.tn.nic.in எனும் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

துணை தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: பிளஸ் 1 வகுப்புக்கான துணைத்தேர்வுகள் ஜூலை 2 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பள்ளி மாணவர்கள் நாளை முதல் (மே 16) ஜூன் 1-ம் தேதிக்குள் அவரவர் படித்த பள்ளிகளுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். இதுதவிர தனித்தேர்வர்கள் கல்வி மாவட்டவாரியாக உள்ள அரசு சேவை மையங்களுக்கு சென்று தங்கள் விண்ணப்பங்களை தேர்வுக் கட்டணம் செலுத்தி பதிவுசெய்ய வேண்டும்.

இதில் விண்ணப்பிக்க தவறியவர்கள் ஜூன் 3, 4-ம் தேதிகளில் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். அதற்கு தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000 செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE