சிபிஎஸ்இ 12, 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்தது சென்னை மண்டலம்

By செய்திப்பிரிவு

சென்னை: மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நேற்று வெளியிட்டது. இதில், தேசிய அளவில் சென்னை மண்டலம் 2 தேர்வுகளிலும் 3-ம் இடம் பிடித்துள்ளது.

மத்திய இடை நிலை கல்வி வாரியத்தின்கீழ் நாடு முழுவதும் செயல்படும் பள்ளிகளில், 12-ம் வகுப்பு தேர்வுகள் கடந்த பிப்.15 முதல் ஏப். 4 வரையிலும், பத்தாம் வகுப்பு தேர்வுகள் கடந்த பிப்.15 முதல் மார்ச் 13-ம் தேதி வரையிலும், 7600-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றன. இதில், 12-ம் வகுப்பு தேர்வில் பங்கேற்க 16 லட்சத்து 33,730, பத்தாம் வகுப்பு தேர்வில் பங்கேற்க 22 லட்சத்து 51,812 மாணவ, மாணவியர் பதிவு செய்திருந்தனர். இதில், 12-ம் வகுப்பு தேர்வை 16 லட்சத்து 21, 224, 10-ம் வகுப்பு தேர்வை 22 லட்சத்து 38,827 பேர் எழுதினர்.

தேர்வுகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, வினாத் தாள் திருத்தும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்றன.

சிபிஎஸ்சி வெளியிட்ட தகவல் படி, 1.43 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், மாநில அரசு தேர்வுகள் துறை சமீபத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டது.

இந்நிலையில், நேற்று காலை திடீரென சிபிஎஸ்சி, 12 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை அடுத்தடுத்து வெளியிட்டது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், சிபிஎஸ்சி இணையதளம், டிஜிலாக்கர் மற்றும் உமாங் செயலி மூலம் முடிவுகளை அறிந்துகொள்ள வசதி செய்யப்பட்டிருந்தது. அதன்படி, 12-ம் வகுப்பை பொறுத்தவரை, 87.98 சதவீதம் அதாவது தேர்வெழுதிய 16 லட்சத்து 21,224 பேரில், 14 லட்சத்து 26,420 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த 2023-ம் ஆண்டைவிட 0.65 சதவீதம் அதிகமாகும். அதேபோல், கடந்தாண்டைப்போலவே மாணவர்களை (85.12) விட, மாணவிகள் (91.52) அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். வித்தியாசம் 6.40 சதவீதமாகும். மேலும், மண்டல அளவில், திருவனந்தபுரம் (99.91), விஜயவாடா (99.04) மண்டலங்களுக்கு அடுத்தபடியாக, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மண்டலம் 98.47 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. மேலும் 12-ம் வகுப்பு தேர்வில் மூன்றாம் பாலினத்தவர் 50 சதவீதமும், சிறப்பு பிரிவில் பங்கேற்ற 5019 மாற்றுத் திறனாளி மாணவர்களில், 4,548 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வெழுதிய மாணவ, மாணவியரில், 1 லட்சத்து 16 ஆயிரத்து 145 பேர் 90 சதவீதத்துக்கு மேலும், 24,068 பேர் 95 சதவீதத்துக்கு மேலும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

சிபிஎஸ்சி வெளியிட்ட 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பொறுத்தவரை, தேர்வெழுதிய 22 லட்சத்து 38,827 பேரில், 93.60 சதவீதம் அதாவது 20 லட்சத்து 95,467 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், கடந்த 2023-ம் ஆண்டைவிட தேர்ச்சி 0.48 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல், 10-ம் வகுப்பிலும் மாணவர்களைவிட (92.71), மாணவிகள் (94.75) அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இருவருக்கும் இடையிலான வித்தியாசம் 2.04 சதவீதமாகும். தேர்வெழுதியவர்களில் 3-ம் பாலினத்தவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12-ம் வகுப்பைபோல், 10-ம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்திலும் திருவனந்தபுரம் (99.75), விஜயவாடாவுக்கு (99.60) அடுத்ததாக 99.30 சதவீதத்துடன் சென்னை மண்டலம் 3-ம் இடத்தை பிடித்துள்ளது.

மேலும், தேர்வெழுதிய மாணவர்களில், 2 லட்சத்து 12,384 பேர் 90 சதவீதத்துக்கு அதிகமாகவும், 47,983 மாணவ, மாணவியர் 95 சதவீதத்துக்கு அதிகமாகவும் மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE