ரஷ்யாவில் உயர்கல்வி பயில்வதற்கு சென்னையில் வழிகாட்டுதல் கண்காட்சி: சுகாதாரத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

சென்னை: ரஷ்யாவில் மருத்துவம், பொறியியல் உள்பட உயர்கல்வி படிப்புகளில் சேருவதற்கான வழிகாட்டுதல் கண்காட்சியை சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

ரஷ்யாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் இந்திய மாணவர்கள் கல்வி கற்கும் வகையில் ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம் சார்பில் ஆண்டு தோறும் கல்வி கண்காட்சி நடத்தப்படும்.

அதன்படி வரும் கல்வியாண்டுக்கான (2024-25) ரஷ்ய கல்விகண்காட்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நேற்று தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

இந்த கண்காட்சியில் ரஷ்யாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்கள் நேரடியாக பங்கேற்று மாணவர்கள், பெற்றோர்களுக்கு விளக்கம் அளித்தனர். இக்கண்காட்சி இன்றுடன்(மே 12) நிறைவு பெறுகிறது.

நடப்பாண்டில் 8 ஆயிரம் இடம்: இதற்கிடையே கடந்தாண்டு நடைபெற்ற ரஷ்ய கல்வி கண்காட்சியில் இந்திய மாணவர்களுக்கு 5,000 மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டன. நடப்பாண்டில் சுமார் 8,000 இடங்கள் தரப்பட்டுள்ளன. மேலும், ரஷ்யாவில் கல்வி கற்கவுள்ள மாணவர்களுக்கு சிஇடி, ஐஎல்ட்ஸ் போன்ற முன்தகுதித் தேர்வுகள் கிடையாது. இந்த நிகழ்ச்சியில் தென்னிந்தியா வுக்கான ரஷ்ய துணைத்தூதர் ஒலெக் என் அவ்தீவ், ரஷ்ய அறிவியல் கலாச்சார மைய இயக்குநர் அலெக்சாண்டர் டோடோனோவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து மதுரையில் மே 14-ம் தேதி, திருச்சியில் 15-ம் தேதி, சேலத்தில் 16-ம்தேதி, கோவையில் 17-ம் தேதி அடுத்தகட்ட கண்காட்சிகள் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் விலக்கு: தொடர்ந்து அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமான மாணவர்கள் ரஷ்யா சென்று கல்வி கற்கின்றனர். நடப்பாண்டு கல்வி கண்காட்சி தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளது. நீட் தேர்வு வினாத்தாளில் குளறுபடிகள் ஏற்பட்டதாகப் புகார்கள் எழுகின்றன. தொடக்கம் முதல் நீட் தேர்வில் இத்தகைய புகார்கள் எழுகின்றன.

இதற்கு நிரந்தரத் தீர்வு நீட் தேர்வில் இருந்து முழு விலக்கு பெறுவதுதான். ஆட்சி மாற்றம் ஏற்படும்போது நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE